
புதுடில்லி: 'பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏ.,க்கள் ஆதரவு இருக்கும்
கட்சிகள், முடிந்தால் இன்று கூட கவர்னரை அணுகி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்'
என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரா சட்டசபை
தேர்தலில் பா.ஜ., உடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனா, முதல்வர் பதவியில்
பங்கு கேட்டதால் மோதல் ஏற்பட்டு, கூட்டணி முறிந்தது. ஆட்சி அமைப்பதற்காக
தேசியவாத காங்., மற்றும் காங்., உடன் சிவசேனா பேசி வந்தாலும், கவர்னர்
விதித்த கெடுவிற்குள் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன் வராததால் கவர்னர்
பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும்
ஆட்சி அமைக்க என்ன செய்யலாம் என்பது பற்றி அரசியல் கட்சிகள் ஆலோசித்து
வருகின்றன.இந்நிலையில், ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த,
உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: தேர்தலுக்கு முன்பு, பிரசாரத்தின்
போது நானும் பிரதமர் மோடியும், தேவேந்திர பட்னவிஸ் தான் முதல்வர் என பலமுறை
கூறினோம்.
அப்போதெல்லாம் எந்த ஆட்சபனையும் சொல்லாத சிவசேனா,
முதல்வர் பதவிக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு முன்பு வேறு எந்த
மாநிலத்திலும் 18 நாட்கள் ஆட்சி அமைக்க கால அவகாசம்
வழங்கப்பட்டதில்லை.சட்டசபையின் பதவிகாலம் முடிந்த பிறகு தான் கட்சிகளை
ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால், சிவசேனா, காங்கிரஸ் -
தேசியவாத காங்., உள்ளிட்ட எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை.
பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருக்கும் கட்சிகள்
முடிந்தால் இன்று கூட கவர்னரை அணுகி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். இவ்வாறு
அமித்ஷா கூறினார்.
No comments:
Post a Comment