
சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்கள் பாதுகாப்பாக சாமி
தரிசனம் செய்ய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி பெண் ஆர்வலர்கள் இருவர்
தாக்கல் செய்த மனு மீது எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம்
இன்று மறுத்துவிட்டது.
அனைத்து வயது பெண்களும் சென்று சபரிமலை
ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த
2018, செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.
சபரிமலை
தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனுவில் கடந்த மாதம் 14-ம் தேதி
தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மனுவை 7 பேர் கொண்ட அரசியல் சாசன
அமர்வுக்கு மாற்றியது. அதேசமயம், கடந்த ஆண்டு உத்தரவுக்குத் தடை
விதிக்கவில்லை.
இந்தத்
தீர்ப்பையடுத்து, பெண் ஆர்வலர் திருப்தி தேசாய், பிந்து அம்மணி உள்பட சில
பெண் ஆர்வலர்கள் சமீபத்தில் சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். கொச்சி போலீஸ்
ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்புக் கேட்டபோது போலீஸார் பாதுகாப்பு வழங்க
மறுத்துவிட்டார்கள். மேலும், அங்கு பிந்து அம்மணி மீது மிளகாய்ப் பொடி
ஸ்பிரே அடிக்கப்பட்டுத் தாக்கப்பட்டார்.
இதையடுத்து சபரிமலைக்குச்
செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் போதுமான பாதுகாப்பை போலீஸார் வழங்கிடக்
கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி பிந்து உச்ச நீதிமன்றத்தில் திருப்தி தேசாய்
மற்றும் பிந்து அம்மணி சார்பில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த
மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.காவே,
சூர்ய காந்த் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்
ஆர்வலர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோலின் கோன்சால்வேஸ் ஆஜரானார்.
அப்போது
தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே,நீதிபதிகள் பி.ஆர்.காவே, சூர்ய காந்த்
பிறப்பித்த உத்தரவில் " சபரிமலைக்குச் செல்லும் 10 வயது முதல் 50
வயதுக்குட்பட்ட பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி போலீஸாருக்கு
உத்தரவிட முடியாது. அதேசமயம், பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு
இருந்தாலும், இது உணர்வுப்பூர்வமானது, சபரிமலையில் எந்தவிதமான வன்முறையும்
நடக்க நாங்கள் விரும்பவில்லை, சூழ்நிலையைக் கொந்தளிப்பாக மாற்றவும் நாங்கள்
விரும்பவில்லை.
சீராய்வு
மனுக்களை விசாரிக்க 7 பேர் கொண்ட அமர்வு அமைக்கப்படும் என்று
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த அமர்வு உருவாக்கப்பட்டு விசாரணை
தொடங்கும். ஆதலால், மனுதாரர்கள் உத்தரவை ஏற்று எந்தவிதமான உத்தரவும்
பிறப்பிக்க இயலாது. அதேசமயம், மனுதாரர்களான பிந்து அம்மணி, திருப்தி தேசாய்
ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதேசமயம், 2018-ம் ஆண்டு
செப்டம்பர் 28-ம் தேதி வழங்கிய தீர்ப்புக்கும் தடையில்லை.இது சமமான உண்மை
என்ற போதிலும் அதுவே இறுதியானது அல்ல " என உத்தரவிட்டார்
No comments:
Post a Comment