Latest News

தி.மு.க.வின் 11 கூட்டணிக் கட்சிகள் நடத்தும் பேரணி..! போலீஸ் என்ன செய்யப்போகிறது?

இந்தியாவில் பொருளாதார மந்தம், வேலையின்மை போன்ற பல்வேறு இருந்தாலும், அவற்றை கண்டுகொள்ளாமல் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்துவதில்தான் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. 
 
இந்தியாவில் பொருளாதார மந்தம், வேலையின்மை போன்ற பல்வேறு இருந்தாலும், அவற்றை கண்டுகொள்ளாமல் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்துவதில்தான் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
அதன் முடிவில் வரும் 23ம் தேதி தமிழகம் முழுவதும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இன்று ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கை இது. தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்ற ஈழத்தமிழர்களைப் பாதிக்கும் இந்த திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டிய நிலையில், அதனை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்து நிறைவேற ஒத்துழைத்திருப்பது, ஈழத்தமிழர்களுக்கு செய்திருக்கும் பச்சைத் துரோகம் என்பதை சரித்திரம் மறக்காது, மன்னிக்காது. மாநிலங்களவையில் இந்த சட்டமசோதா நிறைவேறுவதற்கு அ.தி.மு.க.வின் 11 உறுப்பினர்களும், பா.ம.க.வின் ஒரு உறுப்பினரும் அளித்த வாக்குகள்தான் காரணம் என்கிறபோது, பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக அடிமை அ.தி.மு.க. கூட்டணி செயல்பட்டு வருவது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. 

தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் ஒருவர் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டு, இந்த சட்ட மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதால் அதன்படி வாக்களித்தோம் என மாநிலங்களவை அ.தி.மு.க உறுப்பினரான திரு.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதிலிருந்து, அ.தி.மு.க எப்படி ஆட்டி வைக்கப்பட்டு வருகிறது, அதிமுகவும் மனமுவந்து எப்படியெல்லாம், தலையாட்டி வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை என்கிற இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாழ்படுத்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டமும், அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசு மேற்கொள்ளவிருக்கும் குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதும், சொந்த மண்ணிலே வாழும் சகோதரர்களை அகதிகளாக்கி, அவர்களை அந்நியப்படுத்திக் கொடுமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளுமாகும்.

ஏற்கனவே அசாமில் நடத்தப்பட்ட குடிமக்கள் பதிவேட்டுக்கான பதிவில், கார்கில் போர் வீரரையே அந்நியராகப் பதிவு செய்து கைது செய்த கொடுமைகள் நடந்துள்ளன. முஸ்லிம்கள் மட்டுமின்றி, பல லட்சம் இந்து மக்களும் அசாமில் எதிர்காலம் தெரியாமல் தத்தளிக்கின்றனர்.

இந்நிலையில், மதவாத மற்றும் இனவாதக் கண்ணோட்டத்துடனும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்திடும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாட்டில் முதலில் "அமைதி நிலவ வேண்டும்" என்ற நல்லெண்ணத்துடன், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்து நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து வரும் மத்திய பா.ஜ.க அரசுக்கும், அதன் திட்டத்தின்படியே செயல்பட்டு, ஈழத்தமிழர்களுக்கும் - சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் துரோகம் இழைத்த மாநில அ.தி.மு.க. அரசுக்கும் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில், 23.12.2019 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில், சென்னையில் "குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி" நடத்திடுவது என அனைத்து கட்சிகளின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தை ஒடுக்க என்ன செய்யலாம் என்று போலீஸ் இப்போதே தீவிரமாக யோசித்து வருகிறதாம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.