
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் பல்வேறு சூடான
விவாதங்களுக்குப் பிறகு, நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் இன்று
மாநிலங்களவையில் சட்டத்திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
தாக்கல் செய்தார். இதில் பல்வேறு
கட்சியைச் சார்ந்தவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்திருந்தனர்.
குறிப்பாக தி.மு.க, காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை
பதிவு செய்தன. இதன்பின் மாநிலங்களவையில் அமித் ஷா விளக்கம் அளித்து
பேசினார்.

அதில், ``காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல.
குடியுரிமை மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என எதன்
அடிப்படையில் கூறுகிறீர்கள். பாகிஸ்தான் பிரதமர் கருத்தும், காங்கிரஸ்
கருத்தும் ஒரே மாதிரி இருக்கின்றன. இலங்கையிலிருந்து புலம்பெயரும்
தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முன்னதாகவே சட்டம்
இயற்றப்பட்டுவிட்டது. தற்போது மேலும் 3 நாடுகளைச் சேர்ந்தவர்களின்
பிரச்சனையை களைய சட்டம் இயற்றப்படுகிறது. அதுமட்டுமல்ல இலங்கையில் இந்தியா
வந்த 8 லட்சம் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது" என்று பேசினார்.
அவரது
பேச்சுக்கு பின் குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்
எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன்படி அதற்காக வாக்கெடுப்பு நடந்தது.
இந்த தீர்மானத்துக்கு எதிராக 124 உறுப்பினர்கள், ஆதரவாக 99 உறுப்பினர்கள்
வாக்களித்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதன்பின் சட்டத்திருத்த மசோதா
வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பை புறக்கணித்து சிவசேனா வெளிநடப்பு
செய்தது. முடிவில் மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகள், எதிராக 105 வாக்குகள்
பதிவாகி மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா
நிறைவேற்றப்பட்டது.
ஏற்கெனவே
மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும்
நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு
அனுப்படவுள்ளது. அவர் ஒப்புதல் அளித்தப்பின் சட்டமாக அமலாகும்.
இதற்கிடையே,
பிரதமர் மோடி மசோதா நிறைவேற்றம் குறித்து ட்விட் செய்துள்ளார். அதில்,
``இந்திய தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கும் இன்று ஒரு முக்கிய
நாள். நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா
நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி. மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து
எம்.பி.க்களுக்கும் நன்றி. இந்த மசோதா பல ஆண்டுகளாக துன்புறுத்தல்களை
எதிர்கொண்ட பலரின் துன்பத்தைத் தணிக்கும்" எனக் கூறியுள்ளார்.
அதேபோல்
அமித் ஷாவும் ட்விட் செய்துள்ளார். அதில், ``குடியுரிமை சட்டத் திருத்த
மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதால், கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட
மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் கனவுகள் இன்று நனவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட
மக்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான இந்த
மசோதாவுக்காக பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். அனைவருக்கும்
அவர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி" எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment