
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் ஆன்லைன் செயல்பாடு, திங்கள்கிழமையிலிருந்து
தொடர்ந்து மூன்று நாள்களாக முடக்கப்பட்டிருப்பது, அதன் வாடிக்கையாளர்கள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதத்தொடக்கத்தில் இத்தகைய
பிரச்னை எழுந்திருப்பதால், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது
மாதச்சம்பளத்தை எடுப்பதிலிருந்து வங்கிக்கடன்களுக்கான மாதத்தவணையை ஈ.சி.எஸ்
முறையில் செலுத்துவதுவரை அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக
வங்கிக்கடனுக்கு அபராதம் செலுத்துவது, சிபில் ஸ்கோர் மதிப்பு குறைவது
போன்ற விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
தற்போது சில வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் பயன்பாடு செயல்படுவதாகத் தெரிகிறது.
எனினும் பலருக்கு ஆன்லைன் பயன்பாடு இன்னும்
செயல்படவில்லை. ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் ஆன்லைன் செயல்பாடுகள் எப்போது
முழுமையாகச் சரிசெய்யப்படும் என்பது குறித்து வங்கியிடமிருந்து தெளிவான
பதில் எதுவும் தரப்படவில்லை. வாடிக்கையாளர்கள் தரப்பில் விசாரித்தபோது,
கடந்த மூன்று மாதங்களாகவே மாதத்தொடக்கத்தில் ஆன்லைன் பயன்படுத்துவதில்
சர்வர் ஒத்துழைக்காமல் சிக்கல் இருந்துவந்ததாகக் குறிப்பிட்டார்கள். ஆனால்,
தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் பெரிய அளவில் இருக்கிறது.
பாதிக்கப்பட்ட
வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாகத் தங்களது கோபத்தை ஹெச்.டி.எஃப்.சி
வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து தெரிவித்துவருகிறார்கள். எப்போது
சரியாகுமென்று உறுதியான தகவலைக் கொடுங்கள் என்று கேட்டுவருகிறார்கள்.
அவர்களிடம் வங்கியின் சார்பில், 'தொடர்ந்து பிரச்னையைச் சரிசெய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுவரை பொறுத்துக்கொள்ளும்படியும்
சிரமத்துக்கு வருந்துவதாகவும்' குறிப்பிட்டுள்ளனர்.
இதில் ஹேக்கர்கள் தாக்குதல் நடந்திருக்க வாய்ப்புள்ளதா என்றும்,
என்னமாதிரியான பிரச்னை ஏற்பட்டிருக்குமென்றும், பேமன்ட்ஸ் டொமைன்
மார்க்கெட்டிங் கன்சல்டன்ட் என்.சபாபதியிடம் கேட்டபோது, "ஹெச்.டி.எஃப்சி
வங்கியின் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூன்றாவது நாளாக முடக்கப்பட்டிருப்பது
ஆச்சர்யமான, ஒப்புக்கொள்ள முடியாத விஷயமாக உள்ளது. இன்றுள்ள தொழில்நுட்பம்
வளர்ந்துள்ள காலத்தில், இதைச் சரிசெய்ய மூன்று நாள்கள் எடுத்துக்கொள்வது
மிகவும் அதிகமாகும். வங்கியின் மைய பேங்க்கிங் மென்பொருளில்தான் பிரச்னை
ஏற்பட்டிருக்கலாம். அவர்களின் டேட்டாபேஸ் சர்வரில் ஏதாவது பிரச்னை
ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. இதில் ஹேக்கர்களின் கைவரிசை இருப்பதற்கு
வாய்ப்புகள் குறைவு. ஹேக்கர்கள் இதைச் செய்திருந்தால் சரிசெய்ய இவ்வளவு
காலம் எடுக்காது.
ஹெச்.டி.எஃப்.சி
வங்கியின் ஆன்லைன் பயன்பாடு மற்றும் செயலியின் பயன்பாடுதான்
முடக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தமுடிவதாகத் தெரிகிறது.
செக் மூலமாகப் பணம் எடுத்துக்கொள்ளவும் வசதி செய்துகொடுத்திருக்கிறார்கள்.
மாதத்தொடக்கத்தில் இப்படி முடக்கப்பட்டிருப்பது மிகவும் சிரமம் தரக்கூடிய
ஒன்றுதான். விரைவில் சரியாகுமென்று நம்புகிறேன்" என்றார்.
மக்கள் ஆன்லைன் பயன்பாட்டுக்கு மாற்றிவரும் சூழலில் டிஜிட்டல்
நெட்வொர்க் கட்டமைப்பில் ஏற்படும் குறைகளைத் தீர்க்கும் தொழில்நுட்ப
வசதியில் நாம் பின்தங்கியிருப்பதையே இச்சம்பவம் காட்டுகிறது. வங்கித்துறை
என்பது இந்தியப் பொருளாதாரத்தோடு நேரடியாகத் தொடர்புடைய துறை. ஒரு முன்னணி
வங்கியில் இப்படியான சிக்கல் தீர்க்க முடியாமல் தொடர்வது, டிஜிட்டல்
தொழில்நுட்பத்திலும் அதன் பாதுகாப்பிலும் நாம் மேலும் முன்னேற வேண்டியதன்
அவசியத்தையே உணர்த்துகிறது. விரைவில் இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட
வேண்டும்.
https://m.dailyhunt.in/
No comments:
Post a Comment