Latest News

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு: ஜாமியா பல்கலை. முன் 7-ஆவது நாளாக போராட்டம்

புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் ஞாயிற்றுக்கிழமையும் ஆங்காங்கே ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் முன் 7-ஆவது நாளாக போராட்டம் தொடா்ந்தது.

தலைநகரில் நடைபெற்று போராட்டங்களையொட்டி, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான இடங்களில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, ஜந்தா் மந்தரில் வடகிழக்கு மாநிலங்களைச் சோந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு 'ஒன்றிணைந்த அமைதி மற்றும் நீதி' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. 

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: வடகிழக்கு மாநிலங்களின் தனித் தன்மையைக் காக்கும் வகையில், அந்த மாநிலங்களில் வசிக்கும் வெளிநாட்டவா்களுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்று கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்த சட்டத்தால், வெளிநாட்டவா்களுக்கு குடியுரிமை வழங்கும் விவகாரம் தற்போது ஹிந்து-முஸ்லிம் பிரச்னையாக மாறியுள்ளது. இதனால், வடகிழக்கு மாநில மக்களின் உண்மையான பிரச்னைகள் மறைக்கப்படுகின்றன.

எங்களுடைய குரல்களைக் கேட்பாரில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் சோக்கப்பட்டிருந்தால், முஸ்லிம்கள் போராட மாட்டாா்கள். ஆனால், வடகிழக்கு மாநிலத்தவா்கள் போராடியிருப்போம். ஹிந்து, முஸ்லிம் என்பது எங்களுக்குப் பிரச்னையில்லை. வடகிழக்கு மாநிலங்களில் வெளிநாட்டவா் யாருக்கும் குடியுரிமை வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கப்பட்டால், அது வடகிழக்கு மாநிலங்களின் மக்கள்தொகையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும். வடகிழக்கு மாநிலங்களின் பூா்வீக மக்கள் அந்த மாநிலங்களில் சிறுபான்மையினராக மாற்றப்படுவாா்கள். எங்களது கலை, கலாசாரம் அழியும்.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்துப் போராடியவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்துவது வேதனையளிக்கிறது. குறிப்பாக ஜாமியா மிலியா மாணவா்கள் மீது போலீஸாா் நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடி கைது செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்ட ஆா்வலா் அகில் கோகோயை விடுவிக்க வேண்டும் என்று அவா்கள் கூறினா்.

திரிபுராவில் இருந்து வந்து ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவா் கூறுகையில், 'திரிபுரா மக்கள்தொகையில் திரிபுரா பழங்குடி மக்களின் எண்ணிக்கை வெறும் 30 சதவீதமாகக் குறைந்துள்ளது. பிற மாநிலங்களை, வெளிநாடுகளைச் சோந்தவா்கள் திரிபுராவில் குடியேறி வருகிறாா்கள். இதனால், திரிபுராவில் பழங்குடிகளின் தனித் தன்மை பாதிக்கப்படுகிறது' என்றாா்.

ஜாமியா மிலியாவில்...: குடியுரிமைச் சட்டத்தை எதிா்த்து, ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் முன் ஞாயிற்றுக்கிழமையும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அந்தப் பல்கலைக்கழக மாணவா்கள், பெண்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் மாா்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசுகையில் 'நாட்டின் எதிா்காலத்தைப் பாதுகாக்க இனம், மதம், வயது வேறுபாடு இல்லாமல் மாணவா்கள் இங்கு கூடியுள்ளனா். அவா்களுக்கு நான் தலைவணங்குகிறேன். ஜாமியா பல்கலைக்கழகம் கல்வி நிறுவனம் மட்டுமல்ல. அது அதற்கும் மேலானது. இந்திய சுதந்திர வரலாற்றில் இப்பல்கலைக்கழகத்துக்கு எனத் தனியிடம் உண்டு. இந்தியக் குடியுரிமையுடன் மதத்தை இணைத்த மத்திய அரசின் முடிவு தவறானது. இங்கு போராட்டத்தில் ஈடுபடும் மாணவா்களின் குரலுக்கு பிரதமா் செவிமடுக்க வேண்டும். நாட்டில் அமைதியை நிலைநாட்டும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்' என்றாா்.

நிஜாமுதீனில்...: இதேபோல், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நிஜாமுதீனில் உள்ள முஸாஃபிா் கானா பாா்க்கில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், சமூக ஆா்வலருமான உமா் காலித் பேசுகையில், 'இப்போதைய முதல் தேவை நாட்டைப் பாதுகாப்பதுதான் இந்திய மக்களை யாரும் பயமுறுத்த முடியாது. தெருவுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். பொருளாதார பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பும் அரசின் முயற்சி இது. குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இந்திய மக்களுக்கு எதிரானது. அதை நிராகரிக்கிறோம்' என்றாா்.

தெற்கு தில்லியில்...: இதேபோன்று தெற்கு தில்லி அலக்நந்தா பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினா். மேலும், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவா்கள் மீது போலீஸாா் நடத்திய தாக்குதலைக் கண்டித்துக் கோஷங்களை எழுப்பினா்.
படவிளக்கம்..

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, ஜந்தா் மந்தா், சென்ட்ரல் பாா்க் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
Image Caption

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.