Latest News

உதயநிதி ஸ்டாலின் - சபரீசன் ஈகோ யுத்தம்... ஸ்டாலின் குடும்பத்திற்குள் சடுகுடு..!

மு.க.ஸ்டாலினின் மனசாட்சியாக கருதப்பட்ட அவரது மருமகன் சபரீசனுக்கும், மகன் உதயநிதிக்கும் எழுந்த ஈகோ மோதலால் ஓ.எம்.ஜி நிர்வாகி சுனில் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2016 தமிழக சட்டசபை தேர்தலில் ஓ.எம்.ஜி. எனும் அரசியல் கன்சல்டன்ஸி நிறுவனத்தை தங்களுக்காக பணியில் அமர்த்தினார் மு.க.ஸ்டாலின். அவர்கள் போட்டுக் கொடுத்த திட்டம்தான், ஸ்டாலின் டீ ஷர்ட் மற்றும் ஷூவெல்லாம் போட்டுக் கொண்டு நடந்த 'நமக்கு நாமே' பயணம். ஓ.எம்.ஜி.யின் வழிகாட்டுதலின் படி மட்டுமே அந்த தேர்தலை சந்தித்தார் ஸ்டாலின்.
இந்த ஓ.எம்.ஜி. டீமின் நிர்வாகி சுனிலும், ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் நகமும் சதையுமாக இருப்பவர்கள். சுனிலின் வழிகாட்டுதல் படியே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க.வை கூட்டணியில் இணைத்துக் கொள்ளாதது மட்டுமில்லாமல், ராமதாஸ் அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தபோது 'வெட்கமில்லையா?' என ஸ்டாலினை வைத்து கேட்க வைத்தார். இந்த அதிரடிகளும், ஸ்கெட்ச்களும் இணைந்து அந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. இதனால் சுனிலை ஸ்டாலின் கொண்டாடினார்.
அடுத்து வந்த வேலூர் லோக்சபா தேர்தலையும் சுனிலின் ஸ்கெட்ச் படியே தி.மு.க. சந்தித்தது. ஆனால், குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே ஜெயித்தனர். 'செல்வாக்கு சரிவுக்கு என்ன காரணம்?' என்று ஸ்டாலின் கேட்டபோது, 'வேட்பாளர் தேர்வு தப்பு. துரைமுருகன் மகனுக்கு பதிலாக வேறு நபர் நின்றிருந்தால் பெரியளவிலான வித்தியாசத்தில்தான் ஜெயித்திருப்போம். துரைமுருகனும், அவர் மகன் கதிர் ஆனந்தும் தொகுதியில் பெரிய அளவில் நல்ல பெயரை சம்பாதிக்கவில்லை.' என்று ஓ.எம்.ஜி. டீம் கருத்து சொல்லியது. இதனால் சுனில் மீது துரைமுருகனுக்கு கடும் கோபம். ஓ.எம்.ஜி. டீமின் சுனில் மீது ஏக அதிருப்தியானார் துரைமுருகன்.
இதேபோல் எதிர்வரும் சட்டசபை தேர்தலை மையமாக வைத்து தி.மு.க.வின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் சில காய்நகர்த்தல்களை செய்ய துவங்கினர். இவற்றை ரகசியமாக ஸ்மெல் செய்து ஸ்டாலினிடம் போட்டுக் கொடுத்தார் சுனில். இதனால் தமிழக முழுக்க பல நிர்வாகிகளின் கோபத்துக்கு ஆளானார். அடுத்து நடந்ததுதான் கிளைமேக்ஸ். அதாவது உதயநிதியை கட்சிக்குள் கொண்டு வந்த ஸ்டாலின், அவருக்கு இளைஞரணியின் தலைமை பதவியை கொடுக்க முடிவெடுத்தார்.
ஆனால் சுனில் அதை தடுத்து, 'கட்சிக்குள் கொண்டு வந்தது சரி. நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்துக்கு அனுப்பியதும் சரி. ஆனால், பதவி எதுவும் இப்போது தர வேண்டாம். அது நெகடீவ் அலையை உருவாக்கும்!' என்றார்.
ஸ்டாலினும் 'இது சரிதானோ?' என யோசித்தார். இந்த விஷயம் ஸ்டாலினின் குடும்பத்தினரின் காதுகளுக்குப் போனது. 'உதயநிதி கட்சிக்குள் வந்து, பதவியில் அமர வேண்டும். அவரது ஜாதகம்தான் அவரது அப்பாவை உயர்த்திவிடும்' என்று ஜோஸியர் ஒருவர் சொல்லியிருந்ததை தொடர்ந்து, உதய்க்கு இளைஞரணியில் பட்டாபிஷேகம் நடத்த துடித்துக் கொண்டிருந்த குடும்பமோ, சுனில் வார்த்தைகளை கேட்டு கொதித்துப் போனது. ஸ்டாலினுக்கு முழு நெருக்கடி கொடுத்து, உதயை பதவியிலமர்த்த வைத்தனர்.
ஸ்டாலினின் குடும்பத்தினரின் கோப பார்வையில் சுனில் விழுந்ததை அறிந்த கழக நிர்வாகிகள், ஓ.எம்.ஜி. டீம் மற்றும் சுனில் பற்றி பல புகார்களை தலைமைக்கு தட்டிவிட்டனர். விளைவு, சுனிலுக்கு கட்சிக்குள் நெருக்கடி எழுந்தது. கருணாநிதிக்கு அவரது மருமகன் முரசொலி மாறன் மனசாட்சியாக செயல்பட்டதைப்போல மு.க.ஸ்டாலினின் மனசாட்சியாய் அனைத்தையும் பார்த்து வந்தவர் அவரது மருமகன் சபரீசன். உதயநிதி தனி ஆளாக கட்சியில் கோலோச்சுவதை பொறுக்காமல் சுனில் மூலம் உதய்க்கு எதிரான கருத்துக்களை சபரீசன் சொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.