
ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு
செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு
பேரையும், காவல்துறையினர் சுட்டு கொன்றுள்ள நிலையில் சைபராபாத் போலீஸ்
ஆணையர் வி.சி. சஜநார் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார்,
இந்த ஹைதராபாத் கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவம் இந்திய மக்களிடம் பெருங்கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
இன்று
(வெள்ளிக்கிழமை) அதிகாலையில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரையும், சம்பவ
இடத்திற்கு அழைத்துச் சென்று, நடந்தவற்றை கூறும்படி காவல்துறையினர்
கேட்டதாகவும், அப்போது அவர்கள் தப்பி செல்ல முயன்றபோது சுட்டு
கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹைதராபாத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள
மெஹபூப் நகர் மாவட்டத்திலுள்ள சத்தன்பல்லியில் என்னும் கிராமத்தில் இந்த
துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
இந்த என்கவுன்டரை நடத்திய வி.சி.
சஜநாருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், மனித
உரிமை செயற்பாட்டாளர்கள் இதனை கண்டித்து வருகின்றனர்.
இன்றைய ஆந்திர
பிரதேசமும், தெலங்கானாவும் ஒருங்கிணைந்து இருந்த அப்போதைய ஆந்திர பிரதேச
மாநிலத்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு வாரங்கலில் வி.சி.சஜநார் போலீஸ்
சூப்பிரண்டாக இருந்தபோது இதுபோன்றதொரு என்கவுன்டர் நடைபெற்றது.
வாரங்கலிலும், வெள்ளிக்கிழமை காலை ஹைதராபாத்திலும் நடைபெற்ற இரண்டு என்கவுன்டர்களிலும் வி.சி.சஜநார் மிக முக்கிய பங்காற்றியுள்ளார்.
வாரங்கலில் நடைபெற்றது என்ன?
2008ம்
ஆண்டு டிசம்பர் 12ம் தேதி நிகழ்ந்த அமில வீச்சில், கிட்ஸ் கல்லூரியை
சேர்ந்த பி.டெக் மாணவிகள் ஸ்வெப்னிகாவும், பிரனீதாவும் மிகவும் மோசமாக
காயமடைந்தனர்.
ஸ்வெப்னிகாவின் வகுப்பு தோழர் வெளிப்படுத்திய காதலை ஸ்வெப்னிகா மறுத்துவிட்டதால் இந்த ஆசிட் வீச்சு நடத்தப்பட்டது.
இந்த
கொடூரமான தாக்குதலில் பிரனீதா கடும் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்த ஸ்வெப்னிகா, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அந்நேரத்தில் வாரங்கலில் போலீஸ் சூப்பிரண்டாக வி.சி.சஜநார் பணியாற்றி வந்தார்.
இந்த பெண்கள் மீது அமில வீச்சு தாக்குதல் நடத்தியதில் 3 ஆண்கள் ஈடுபட்டதாக காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.
அமில
வீச்சு நடைபெற்று மூன்று நாட்களுக்கு பிறகு, விசாரணையின் ஒரு பகுதியாக
குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சகாமூரி சீனிவாஸ், பஜ்ஜூரி சஞ்சய் மற்றும்
பொதராஜு ஹரிகிருஷ்ணா மூவரையும், குற்றத்தை எவ்வாறு செய்தார்கள் என்று
செய்து காட்டும்படி சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரின் ஆயுதங்களை பிடுங்கி தாக்க முற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த
என்கவுன்டர் நடைபெற்ற பின்னர், காவல்துறையினரின் நடவடிக்கை
பாராட்டப்பட்டது. சஜநாரும், அவரது குழுவினரும் உள்ளூர் மக்களால்
பாராட்டப்பட்டனர்.
ஆனால், காவல்துறையினர் சட்டத்தை தங்களின் கையில் எடுத்து, என்கவுன்டரை நடத்தியுள்ளதாக தெரிவித்து மனித உரிமை நிறுவனங்கள் கண்டித்தன.
ஹைதராபாத் என்கவுன்டரும், 2008ம் ஆண்டு வாரங்கல் அமில வீச்சு நடத்தியவர்கள் மீதான என்கவுன்டரும் ஒரே மாதிரியாக நடைபெற்றுள்ளன.
இந்த
இரண்டு என்கவுன்டரிலும், குற்றச்செயல் புரிந்ததை, விளக்கும் வகையில்,
குற்றஞ்சாட்டப்பட்டவர் அதிகாலையில் சம்பவ இடத்திற்கு அழைத்து
செல்லப்பட்டுள்ளனர்.
வாராங்கல் என்கவுன்டரில் வி.சி.சஜநார்
நேரடியாக ஈடுபட்டிருந்தார். ஆனால், ஹைதராபாத் என்கவுன்டர் இவரது
மேற்பார்வையின் கீழ் நடைபெற்றுள்ளது.
ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கு சஜநார் குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
பிபிசியிடம்
பேசுகையில். "குற்றச் செயலை செய்தது எப்படி என்று விளக்கி
கொண்டிருந்தபோது, காவல்துறையினரிடம் இருந்து ஆயுதங்களை பறித்து தாக்க
முற்பட்டனர். எனவே, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் அவர்கள்
இறந்தனர். கள ஆய்வு அறிக்கை கிடைத்தவுடன் முழு விவரங்களையும் என்னால் வழங்க
முடியும். இந்த என்கவுன்டரில் காவல்துறையினர் இருவர் காயமடைந்துள்ளனர்"
என்று வி.சி. சஜநார் தெரிவித்தார்.
ஹைதராபாத் சம்பத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம்
யார் இந்த வி.சி. சஜநார்?
கர்நாடக
மாநிலத்தில் 1996ம் ஆண்டு ஐபிஎல் பிரிவை சேர்ந்தவர் விஸ்வநாதன் சஜநார்.
முந்தைய ஆந்திர பிரதேச காவல்துறையில் பல்வேறு நிலைகளில் இவர்
பணியாற்றியுள்ளார்,
வாரங்கல் மற்றும் மேடக்கில் இவர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். இப்போது தெலங்கானாவில் பணியாற்றி வருகிறார்.
2018ம் ஆண்டு சைபராபாத் காவல்துறை ஆணையராக சஜநார் பொறுப்பேற்றார்.
அமிலவீச்சு
தாக்குதல் நடைபெற்றபோது, வாரங்கலில் இவர் போலீஸ் சூப்பிரண்டாக இருந்தார்.
மேடக்கில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது, காவலர் ஒருவரை கொலை செய்ததாக
குற்றஞ்சாட்டப்பட்டிருந்த போதைபொருள் கடத்தல்காரர் ஒருவரை இவர்
என்கவுன்டரில் கொன்றார் என்ற பதிவும் உள்ளது.
சமூக ஊடக எதிர்வினைகள்
ஹைதராபாத்
கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவு மற்றும் கொலையில்
குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரும் என்கவுன்டரில் கொல்லப்பட்ட பின்னர், சமூக
ஊடகங்களில் சஜநார் சிலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். சிலர் இந்த
சம்பவத்தை கண்டித்துள்ளனர்.
நீதியை நிலைநாட்டு வகையில் என்கவுன்டர்
நடைபெற்றிருந்தால் மனித உரிமைகள் மற்றும் அரசியல் சாசனம் எதற்கு என சிலர்
கேள்வி எழுப்பியுள்ளனர்.
சஜநார் கையில் துப்பாக்கி வைத்திருக்கும்
புகைப்படத்தை சிலர் தங்களின் வாட்ஸபில் அடையாள புகைப்படமாக வைத்துள்ளனர்.
வரங்கலில் நடைபெற்ற என்கவுன்டரை சிலர் நினைவூட்டியுள்ளனர்.
இந்த
சம்பவம் நடைபெற்றவுடன், வரங்கல் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்
நடத்தப்பட்டதுபோல இந்த ஹைதராபாத் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்
நடத்தப்பட வேண்டும் என்று பல இணையதள பயன்பாட்டாளர்கள் கருத்து
தெரிவித்திருந்தனர்.
"இது சட்டபூர்வமானது அல்ல. காவல்துறையினர் சட்டத்தை மீறியுள்ளனர். இது ஆபத்தானது" என்று பத்திரிகையாளர் டி'சூசா பதிவிட்டிருந்தார்,
பொது
மக்கள் மத்தியில் பாராட்டு இருக்கும் நிலையில், சட்ட பேராசிரியரும், மனித
உரிமை செயற்பாட்டாளருமான கல்பனா கண்ணபிரான் எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவில்,
"இந்த நான்கு பேரும் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளனர். இது நீதியா?
நீதிமன்றத்தை மூடிவிட்டு, இந்த வன்முறைகளை கவனிக்கலாமா? தெலுங்கானாவில்,
என்கவுன்டர்கள் மீது நீதித்துறையின் விவேகம் மிகவும்
எதிர்பார்க்கப்படுகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆதித்ய நாத்
மாநிலத்தை ஆளுகையில், நித்யானந்தா தனியொரு நாட்டை நிறுவுகையில், உன்னாவ்
பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண் தீ வைத்து எரிக்கப்படும் நிலையில்
பல குடும்பங்கள், ஏன் நாம் பேசி கொண்டிருக்கும்போது கூட, டெகு கோபுவும்,
அவரது குழந்தைகளும் குறைந்தபட்ச நீதி கிடைக்குமென எதிர்பார்க்கிறார்கள்.
என்கவுன்டரில்
நீதி இல்லை. தாக்கப்பட்ட, கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களின்
நினைவாக, அதிகாரத்தை காட்டுகின்ற, தண்டனையை வழங்குகின்ற நிகழ்ச்சியாக
மட்டுமே இது உள்ளது.
இந்த ரத்தவெறியை நாம் ஆதரிக்கக்கூடாது.
காவல்துறையினர் அதிகாரம் செலுத்தும் மாநிலத்தில் நமக்கு எதிர்காலம் இல்லை.
ஜனநாயக இயக்கங்களின் போராட்டத்தில் தெலங்கானா கட்டமைக்கப்பட்டது. அதனை
எப்போது மீட்க போகிறோம்? என்று அவர் வினவியுள்ளார்.
No comments:
Post a Comment