
புதுடில்லி: தெலுங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து
எரித்து கொன்ற 4 பேரை, என்கவுன்டர் செய்த போலீசார் மீது தொடரப்பட்ட வழக்கை
சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது.தெலுங்கானாவில் நவ.,27ம் தேதி பெண்
டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இரவு வீடு
திரும்பிய அவரது பைக் டயரை பஞ்சர் செய்து, அவருக்கு உதவுவது போல நடித்து, 4
லாரி டிரைவர்கள் பலாத்காரம் செய்தனர். அவரது வாயில் மதுவை ஊற்றி, கழுத்தை
நெரித்து கொன்று, உடலை எரித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியது.இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள்
கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம்
விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பெண் டாக்டர் கொல்லப்பட்ட இடத்தில், குற்றம்
நடந்தது எப்படி என நடித்துக் காட்டிய போது, போலீசாரை துப்பாக்கியால் சுட்டு
தப்பி ஓட முயற்சித்த 4 கயவர்களையும், கடந்த 6ம் தேதி, போலீசார் சுட்டுக்
கொன்றனர். சம்பவ இடத்தில், போலீசாரை பொதுமக்கள் தூக்கி வைத்து கொண்டாடினர்.
4 பேரும் என்கவுன்டரில் கொல்லப்பட்டது அனைத்து தரப்பினரிடையேயும், பலத்த
வரவேற்பை பெற்றது.இந்நிலையில் என்கவுன்டருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில்,
வக்கீல்களான மணி, பிரதீப் குமார் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவில்
குறிப்பிடப்பட்டதாவது: என்கவுன்டர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்
வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. என்கவுன்டர் செய்த போலீசார்கள் மீது வழக்கு
பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு
குழுவின் விசாரணையையும் கண்காணிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.இவ்வழக்கை
அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சுப்ரீம்
கோர்ட், நாளை மறுநாள்(டிச.,11) இம்மனு மீதான விசாரணை நடைபெறும் எனவும்
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment