Latest News

குடியுரிமை திருத்த சட்டம்: "இது இந்தியாவின் ஒட்டுமொத்த குரல்" - ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து டெல்லி ராஜ்காட் பகுதியில் சத்தியாகிரக போராட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத், அஹ்மத் பட்டேல், கமல்நாத், திக் விஜய் சிங், ஏ.கே. அந்தோணி, மீராகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக, இந்த போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆதரவு தர வேண்டும் என ராகுல்காந்தி அழைப்பு விடுத்திருந்தார். 

இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டிருந்த பதிவில், "பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் நாட்டில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் நாம் ஒன்றிணைந்து இந்தியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.  

ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்" என அழைக்கப்படும் இந்த அமைதி போராட்டத்தில், அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையை சோனியா காந்தி, மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி வாசித்தனர். 

இந்த போராட்டத்தில் ஒரு நிமிட மவுன அஞ்சலியும் அனுசரிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் சோனியா காந்தி ஒரு மணி நேரம் மட்டுமே கலந்து கொண்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பலியான மக்களின் பேரில் உறுதியேற்ற பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சி அரசமைப்பு சட்டத்தைக் காக்கும் என்றார். 

இந்த போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "இன்று நாம் அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையை படித்தோம். அது நம்முடைய குரல் மட்டுமல்ல, இந்த நாட்டின் குரல். அந்த குரல்தான் அன்பால், அமைதியால் பிரிட்டிஷ் அரசை நாட்டை விட்டு வெளியேற்றியது. அந்த குரல்தான் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியது, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளித்தது. அந்த குரல்கள் இல்லாமல் இந்தியா இல்லை" என்றார். 

மேலும் அவர், "இந்த நாட்டின் எதிரிகள் அந்த குரலை முடக்க முயல்கிறார்கள். இந்த நாட்டின் வளர்ச்சியை, பொருளாதாரத்தை அழிக்க பார்க்கிறார்கள்" என்றார். 

தி.மு.க. கூட்டணியினர் பேரணி
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து தி.மு.கவும் அதன் தோழமைக் கட்சிகளும் பிரமாண்ட பேரணி ஒன்றை சென்னையில் நடத்தியுள்ளனர்.

திங்கட்கிழமை காலை ஒன்பதரை மணியளவில், சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ வளாகத்திற்கு அருகில் இந்தப் பேரணி துவங்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. பேரணியில் கலந்துகொள்வதற்காக பல்வேறு கட்சிகளின் தொண்டர்களும் காலை எட்டரை மணிக்கு முன்பிலிருந்தே அந்தப் பகுதியில் குவியத் துவங்கினர்.

இந்தப் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில், பேரணியை கண்காணிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள், சிறப்புக் காவல் படையினர் கவச உடைகள், கலவரத் தடுப்பு வாகனங்களுடன் குவிக்கப்பட்டிருந்தனர். நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, ட்ரோன்கள் மூலமும் பேரணியைப் படமெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

பேரணி துவங்குவதற்கு முன்பாக தலைவர்கள் ஒவ்வொருவராக வந்து, அமர்ந்திருந்தனர். இதற்குப் பிறகு காலை 10.20 மணியளவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேரணி துவங்குமிடத்திற்கு வந்தார். அதன் பிறகு பேரணி துவங்கியது.

இந்தப் பேரணியில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சி.பி.ஐ., சி.பி.எம்., எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.