Latest News

குடியுரிமை போராட்டம்: டெல்லியில் ஏர்டெல், வோடாஃபோன் சேவைகளை முடக்கியது மத்திய அரசு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் டெல்லி செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து, போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைவதை தடுக்க டெல்லி எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும், டெல்லியின் சில பகுதிகளில் அரசு அதிகாரிகளின் உத்தரவுள்படி, தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடை நீக்கப்பட்டவுடன் மீண்டும் சேவைகள் தொடங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல அரசின் உத்தரவுபடி வோடாஃபோன் நிறுவனமும் டெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவையை முடக்கியுள்ளதாக அறிவித்திருக்கிறது. 

ஜியோ, பிஎஸ்என்எல் சேவைகளும் குறிப்பிட்ட பகுதிகளில் முடக்கப்பட்டுள்ளன. 

"போராட்டங்களை நிறுத்தாதீர்கள்"
இந்தியாவின் மற்ற பகுதிகளை போன்று மேற்குவங்கத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்ப பெறப்படும் வரை மக்கள் தங்களது போராட்டத்தை நிறுத்த கூடாது என்று கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

"நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளுக்கு பிறகு, திடீரென்று வந்து நாம் இந்தியர் என்பதை நிரூபிக்க சொல்கிறார்கள். பாஜக நாட்டை பிளவுபடுத்துகிறது" என்று அவர் கூறினார்.

துணிச்சல் இருந்தால் மத்திய அரசு ஐ.நா. கண்காணிப்பில், இந்த குடியுரிமைச் சட்டம் குறித்தும், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தட்டும் என்று சவால் விடுத்தார் மம்தா பானர்ஜி.
எந்தெந்த முதல்வர்கள்?
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் இந்த குடியுரிமை சட்டத் திருத்தத்தை தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்திருந்தனர். பாஜக கூட்டணியில் உள்ள பிகார் முதல்வர் நிதிஷ்குமாரும் தனது கருத்தை மாற்றிக் கொண்டு இந்த சட்டத்தை எதிர்க்கிறார். பாஜக கூட்டணிக் கட்சியான அகாலி தளமும் தற்போது இந்த சட்டத்தை எதிர்க்கிறது. 

பெங்களூருவிலும் போராட்டம்
கர்நாடக மாநிலத்திலும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருவதால் அந்த மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது என பெங்களூருவில் உள்ள பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷி தெரிவிக்கிறார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 அமலாக்கப்பட்டால், அது நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகளில் ஓரிடத்தில் நான்கு நபர்களுக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. 

தடை உத்தரவை மீறி செங்கோட்டைப் பகுதியில் போராடியவர்களை காவல் துறையினர் தடுப்புக் காவலில் வைக்க கைது செய்தனர் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. 

மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் இன்று காலை முதலே செங்கோட்டை பகுதியில் திரண்டு போராட்டம் நடத்தி வந்தனர். ஸ்வராஜ் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் போலீஸாரால் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி செங்கோட்டையில் இருக்கும் பிபிசி இந்தி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா தெரிவிக்கிறார். 

டெல்லியில் பாதுகாப்பு கருதி 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், நாட்டு மக்கள் மனதில் இன்று பயம் பரவி உள்ளதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த சட்டத்தை விட்டுவிட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துமாறும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இடதுசாரிகளின் பேரணிக்கு அனுமதி மறுப்பு
மைசூரு மற்றும் பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சியினர் கைது செய்யபட்டதாகவும், டெல்லியில் இடதுசாரிக் கட்சியினர் இன்று மதியம் நடத்த இருந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும் ஏ.என்.ஐ தெரிவிக்கிறது. 

ராமசந்திர குஹா கைது
உத்தரவுகளை மீறி போராட்டம் நடத்தியதாக வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான ராமசந்திர குஹா கைது செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்டார். பிபிசி இந்தியிடம் பேசிய அவர், ஒரு செய்தியாளரிடம் காந்தி குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது, காவல்துறையினர் தன்னை கைது செய்ததாக குறிப்பிட்டார். "என்னை எங்கேயோ கூட்டிச் செல்கிறார்கள்" என்று மெசேஜ் மூலம் அவர் தெரிவித்தார்.

பெங்களூர் டவுன் ஹாலில் நடந்த போராட்டத்தில் ராமசந்திர குஹா கைது செய்யப்பட்டது பல மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியவில்லை.
ராமசந்திர குஹாவை கைது செய்து அழைத்து சென்ற காட்சிகள் இந்தியாவின் களங்கமாக வெகு நாட்கள் இருக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் சேகர் குப்தா ட்வீட் செய்துள்ளார். 

போராட்டத்தில் கலந்து கொண்ட பல பெண்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர். 

கர்நாடகா மாநிலம் குல்பர்கா நகரத்திலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஹைதராபாத்தில் சார்மினார் அருகே போராட்டம் செய்தவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை பல்கலைக்கழக மாணவர் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது எப்படி?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிவந்த சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் புதன்கிழமை இரவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து காவல்துறையினரால் அகற்றப்பட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் செவ்வாய்க்கிழமை முதல் போராட்டத்தை நடத்திவந்தனர்.

பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சுப்பையா ஆகிய இரண்டு மாணவர்களும் காவல் துறையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும் மாணவர்கள் கோரி வந்தனர்.

இந்த நிலையில், காவல்துறை வசம் இருந்த மாணவர்கள் புதன்கிழமை காலையில் விடுவிக்கப்பட்டனர். இருந்தபோதும் மாணவர்கள் தங்களது உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வந்தனர்.

புதன்கிழமையன்றும் போராட்டம் தொடர்ந்த நிலையில், புதிதாக மாணவர்கள் அந்தப் போராட்டத்தில் இணைவதற்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் வகுப்புகளும் ரத்துசெய்யப்பட்டன. 

போராட்டத்தின் காரணமாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் இன்று நடைபெறவில்லை. ஆகவே, வெளியிலிருந்து மாணவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

இந்த நிலையில் புதன்கிழமையன்று இரவில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்த காவல்துறையினர் எஞ்சியிருந்த 17 மாணவர்களைக் கைதுசெய்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்று விடுவித்தனர்.
இதையடுத்து மாணவர்கள் வீடுதிரும்பினர். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டிருப்பதோடு, விடுதிகளும் மூடப்பட்டுள்ளன. 

மதுரை, புதுச்சேரியிலும் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல வக்பு வாரியக்கல்லூரியை சேர்ந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 30 பேர் கல்லூரி நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டம் செய்தனர்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் கல்லூரி மாணவர்களை கொடூரமாக தாக்கிய காவல்துறையினரை கண்டித்தும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

source: bbc.com/tamilNo comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.