
வன்முறையைத் தூண்டும் ஊக்குவிக்கும் காட்சிகள் ஏதும் இருந்தால் அதை
ஒளிபரப்பும்போது மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும் என்று அனைத்துத்
தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை
அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
குடியுரிமைத்
திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத்
தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில்
பயங்கர வன்முறை நடந்து வருகிறது. அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,
ரயில், விமானப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு, இணையதள இணைப்பும்
துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகளைக் கவனத்துடன் ஒளிபரப்பக்
கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தேச விரோத மனப்பான்மையைத் தூண்டும்
விதத்திலோ அல்லது சட்டம் ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலோ,
வன்முறையைத் தூண்டும் வகையிலோ ஏதேனும் காட்சிகள் இருந்தால் அதை தனியார்
தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பும் முன் மிகுந்த கவனத்துடன் செயல்பட
வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேச ஒற்றுமைக்கு
விரோதமான வகையில் ஏதேனும் காட்சிகளும், இந்த நெறிமுறைகளை மீறும் வகையில்
எந்தக் காட்சிகளும் இல்லை என்பதை ஒளிபரப்பும் முன் உறுதி செய்யுங்கள்.
அனைத்து தனியார் சேனல்களும் இந்த உத்தரவைக் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment