Latest News

விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை சீரமைக்க ஆய்வு?: 2022ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு...கூட்டு கூட்டத்தில் 1,350 எம்பிக்கள் அமர இருக்கை வசதி

புதுடெல்லி: வருகிற 2022ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், கூட்டு அமர்வில் 1,350 எம்பிக்கள் அமர இருக்கை வசதிகள் செய்யப்படுகின்றன. மேலும், முன்னாள் ஜனாதிபதியின்,'எம்பிக்கள் எண்ணிக்கையை இரட்டிப்பு ஆக்க வேண்டும்' என்ற கோரிக்கையின் அடிப்படையில், விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை சீரமைக்க மத்திய அரசு ஆய்வு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1912-13ம் ஆண்டில் கட்டடக் கலைஞர்களான எட்வின் லுடியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால், இந்திய நாடாளுமன்ற கட்டிடம் வடிவமைக்கப்பட்டது. இக்கட்டிடம், இந்தியாவின் பழமையான பாரம்பரிய தளங்களில் ஒன்றான சவுசாத் யோகினி கோயிலை அடிப்படையாகக் கொண்டது. கிட்டத்தட்ட 92 ஆண்டுகள் பழமையானது.

இக்கட்டடத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய வேண்டும் எனவும் புதிய கட்டடம் கட்ட வேண்டும் எனவும் இருவேறு கருத்துகள் கூறப்பட்டன. இந்நிலையில், ஆக. 2019ல், மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும் காலனித்துவ கால நாடாளுமன்ற கட்டிடத்தை விரிவுபடுத்தவும், நவீனமயமாக்கவும் மத்திய அரசை வலியுறுத்தினர்.அதையடுத்து புதிய நாடாளுமன்றத்தை 2022ம் ஆண்டுக்குள் கட்டி முடித்து, நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தில் தொழில்நுட்பரீதியாக பல்வேறு வசதிகள் அளிக்கவும், எம்பிக்கள் தங்கள் இருக்கையில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், ஹைடெக் நாடாளுமன்றம் அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் தொடர்பாக 5 கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒப்பந்தப்புள்ளி பெற்றது. ஆனால், இத்திட்டத்தின் மதிப்பீடு குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்கி உள்ள நிலையில் இந்தாண்டின் முதல் பாதியில் புதிய நாடாளுமன்றம் வளாகம் தயாராகும் என்கின்றனர். இந்த புதிய மக்களவை மத்திய மண்டபம் 900 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) அமரக்கூடிய வகையிலும் கூட்டு நாடாளுமன்ற அமர்வின்போது 1,350 எம்பிக்கள் வரை அமர போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடம் முக்கோண வடிவத்தில் அமைகிறது. எம்பிக்கள் பரந்த இரு இருக்கைகள் கொண்ட பெஞ்சுகளில் வசதியாக உட்கார்ந்துகொள்ளலாம். இருபுறமும் எழுந்து செல்ல வசதிகள் உள்ளன. இதனால் யாரும் எவரையும் கசக்கிக் கொண்டு செல்ல வேண்டியதில்லை.

அகமதாபாத்தை தளமாகக் கொண்ட எச்.சி.பி டிசைன் வழங்கிய வடிவமைப்பு வரைபடத்தின்படி, புதிய முக்கோண நாடாளுமன்ற கட்டிடம் அமையும். இந்திரா காந்தி தேசிய கலை மையம், அது அமைந்துள்ள சில புதிய அரசு கட்டிடங்களுடன் இடமாற்றம் செய்யப்படும். தேசிய காப்பகங்கள் மறுவடிவமைக்கப்படும். பிரதமரின் குடியிருப்பு தற்போதுள்ள தெற்கு தொகுதி வளாகத்தின் பின்னால் மாற்றப்படும். அதே நேரத்தில் துணை ஜனாதிபதியின் குடியிருப்பு வடக்கு தொகுதிக்கு பின்னால் செல்லவுள்ளது. கிட்டத்தட்ட 13 ஏக்கரில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மேலும், முந்தைய சபையை விட மிகப் பெரியதாக இருக்கும்.

முன்னதாக, அரசியல் ஆய்வாளர்கள் மிலன் வைஷ்ணவ் மற்றும் ஜேமி ஹிண்ட்சன் ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, '2026ம் ஆண்டில் மக்களவையின் அளவு குறித்த முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்யும். 2026ம் ஆண்டுக்குள் மக்களவையில் 848 உறுப்பினர்கள் இருப்பார்கள்' என்று கணித்தனர். அதன்படியே, விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், புதிய வளாகம் 900 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் வகையில் கட்டப்படுகிறது. ஏற்கனவே, 2019 டிசம்பரில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மக்களவையின் பலத்தை தற்போதைய 545 என்ற எண்ணிக்கையில் இருந்து, 1,000 உறுப்பினர்களாக இரட்டிப்பாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, தொகுதிகளை சீரமைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு ஆய்வு நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வடிவமைப்பு குறித்து கட்டிடக் கலைஞர் பிமல் படேல், தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: புதிய நாடாளுமன்ற கட்டத்தில் ஒரு தனி பொழுதுபோக்கு மையம் உருவாக்கும் திட்டம் உள்ளது. தற்போது, ​​சென்ட்ரல் ஹால் ஒன்றாக செயல்படுகிறது. இது மாற்றியமைக்கப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலக இடம் கூட இடம்பெறும். கியூபா, எகிப்து, சிங்கப்பூர், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் நாடாளுமன்ற கட்டிட வடிவமைப்பு குறித்து அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தோம். தற்போது கூட்டு அமர்வுகளின் போது இடப்பற்றாக்குறை ஏற்படுவது கவனத்தில் கொள்ளப்படும். ஒரு உறுப்பினர் அவையில் உட்கார 50 செ.மீ இடைவெளி உள்ளது. புதிய கட்டடத்தில் 60 செ.மீ ஆக உயரும். தற்போது, உறுப்பினர்களின் ​​மேசைகள் முதல் இரண்டு வரிசைகளுக்கு மட்டுமே. புதிய வடிவமைப்பின்படி 'ஐபேட்' அல்லது கோப்புகளை அவற்றில் வைக்கும்படி ஹைடெக் முறையில் வடிவமைக்கப்படும். உட்கார்ந்திருக்கும் உறுப்பினர், யாருக்கும் முன்னால் எழுந்து செல்ல வேண்டியதில்லை. மிகவும் வசதியான வழிகள் அமைக்கப்படும். புதிய வளாகத்திற்கு ஒரு முக்கோண கட்டமைப்பைத் தேர்ந்தெடுப்பதன் காரணம் என்னவென்றால், அனைத்து புனித ஸ்தலங்களின் அடிப்படையில், ஒரு புனிதமான நாடாளுமன்ற கட்டிடம் அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இப்போதைய நிலைமை என்ன?

நாடாளுமன்ற மக்களவையானது, வயதுவந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் நேரடித் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டது. அரசியலமைப்பால் திட்டமிடப்பட்ட சபையின் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 552. மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்த 530 உறுப்பினர்கள் வரையும், யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்த 20 உறுப்பினர்கள் வரையும் மற்றும் ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் இரண்டு உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு பெரும்பான்மை பலம், அதாவது 272 உறுப்பினர்களை பெறும் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும்.

ஆனால், இதற்கு நேர்மாறாக மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 80ன் படி மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 250 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 238 பேர் தேர்தல் மூலமும் (மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை), மீதியுள்ள 12 பேர் நியமனம் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால், நடைமுறையில் தற்போது 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 233 பேர் தேர்தல் மூலமும், மீதியுள்ள 12 பேர் நியமன உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த நியமன உறுப்பினர்களை குடியரசு தலைவர் தேர்ந்தெடுப்பார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.