Latest News

`21 வயதில் டி.எஸ்.பி; 25 வயதில் சப் கலெக்டர்!'- பாஜகவினரை கன்னத்தில் அறைந்த ஐஏஎஸ் பிரியா வர்மா யார்?குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்துவருவதற்கு மத்தியில், இந்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும் பா.ஜ.க-வினர் பேரணிகளை நடத்தி வருகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ராஜ்கர் என்ற மாவட்டத்திலும் பா.ஜ.க-வினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணி ஒன்றை நடத்தினர். 

இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பில் அம்மாவட்டத்தின் துணை ஆட்சியர் பா.ஜ.க-வினரைக் கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்தனர். #PriyaVerma என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்டானது. இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் யார் இந்தப் பிரியா வர்மா என்று இணையத்தில் தேடி வந்தனர்.

பிரியா வர்மா
யார் இந்தப் பிரியா வர்மா?
மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் மாவட்டத்திலுள்ள மங்காலியா கிராமத்தைச் சேர்ந்தவர் இந்தப் பிரியா வர்மா. மத்திய வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த பிரியா வர்மாவுக்கு சிறுவதிலிருந்தே ஆட்சியர் ஆக வேண்டும் என்பது கனவு. பள்ளி படிப்பு முடிந்ததும் அரசாங்கத் தேர்வுகளுக்காகத் தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தார். முதலில் எழுதிய யு.பி.எஸ்.சி மற்றும் சி.எஸ்.இ தேர்வுகளில் அவரால் வெற்றிபெற முடியவில்லை.

தொடர்ந்து தனது முயற்சியால், 2014-ம் ஆண்டு மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றார். முதலில் உஜ்ஜைன் மாவட்டத்திலுள்ள பைரவ்கர் சிறைச்சாலையில் சிறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இங்கு ஆறு மாதங்கள் பணியாற்றினார். பின்னர், 2015-ம் ஆண்டு மாவட்டக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 21. 

மிகச் சிறிய வயதிலேயே மிகப்பெரிய பதவிகளில் இருந்ததாலும் அவருடைய அதிரடி நடவடிக்கைகளாலும் ஊடகங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்தார். மாநிலத்தின், துணை ஆட்சியர் பட்டியலில் முக்கிய இடத்தையும் பிடித்தார். தற்போது ராஜ்கர் மாவட்டத்தின் துணை ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார்.

பிரியா வர்மா
இந்திய அளவில் பிரியா வர்மா பேசப்படுவதற்கு முக்கிய காரணம் போராட்டக்களத்தில் நடந்த சம்பவம்தான். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ராஜ்கரில் பேரணி ஒன்றை நடத்தினர். ராஜ்கரில் 144 தடை உத்தரவு அன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி இந்தப் பேரணி நடைபெற்றது. 

இதனால், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரியா வர்மா சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க முயன்றார். ஒரு கட்டத்தில் பா.ஜ.க தொண்டர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார் பிரியா. இதையடுத்து கூட்டத்தில் இருந்த ஒருவர் பிரியாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்தார். இதனால், சம்பவ இடம் பதற்றமானது. மேலும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் 150 பேர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

பிரியா வர்மாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும் ஆதரவாகவும் சிலர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இதை மையமாக வைத்து அரசியல் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``கலெக்டர் மேடம், நீங்கள் எந்த சட்டப்புத்தகத்தைப் படித்தீர்கள் என்று என்னிடம் சொல்லுங்கள். அமைதியான நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை அடிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இதுமாதிரியான ஹிட்லர் நடவடிக்கைகளை ஒருபோதும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஆளும்கட்சியையும் இதுதொடர்பாக விமர்சித்துள்ளார். இந்தச் சம்பவத்தால் பிரியா வர்மாவுக்கு எதிராகத் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

பிரியா வர்மா
பிரியா வர்மா தன்னம்பிக்கை பேச்சாளரும்கூட. யூடியூபில் அரசுத் தேர்வுகளுக்குத் தயாராவது தொடர்பான சின்னச் சின்ன விஷயங்கள் முதல் முக்கியமான விஷயங்கள் வரை தன்னுடைய கருத்துகளைத் தொடர்ந்து வீடியோவாகப் பதிவு செய்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். தொடர்ந்து யு.பி.எஸ்.சி தேர்வுக்கும் தயாராகி வருகிறார்.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.