
எட்டு வயதான தனஸ்ரீ பிக்காட் மகாராஷ்டிரா
மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் மகாராஷ்டிராவில் மராத்வாடா பகுதியில் உள்ள
ஒரு அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவருகிறார். சில தினங்களுக்கு
முன்பு தனஸ்ரீயின் வகுப்பாசிரியர் வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரையும்
வரும் குடியரசுதினத்தை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநில முதல்வருக்குக் கடிதம்
ஒன்றை எழுதச் சொல்லியுள்ளார்.

அப்படி
மாணவர்களால் எழுதப்பட்ட கடிதங்களில் தனஸ்ரீயின் கடிதம் அனைவரின்
கவனத்தையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், அனைவரையும் நெகிழ வைப்பதாகவும்
இருந்தது.
தனஸ்ரீ தன் மாநில முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், "தயவு
செய்து என் அப்பாவைக் காப்பாற்றுங்கள். அவர் ஒரு விவசாயி. உஸ்மானாபாத்தில்
அவர் விவசாயம் செய்து வருகிறார்.
இந்த ஆண்டு மழை இல்லை என்பதால்
பயிர்கள் எதுவும் வளரவில்லை. அப்பாவிடம் பணமும் இல்லை. அவர் எப்போதும்
பதற்றத்திலேயே இருக்கிறார். தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று அடிக்கடி
கூறிக்கொண்டிருக்கிறார். அவர் அப்படிச் சொல்லும்போதெல்லாம் எனக்குப் பயமாக
இருக்கிறது. எப்படியாவது என் அப்பாவைக் காப்பாற்றுங்கள்" என்று உருக்கமாக
எழுதியுள்ளார்.
தனஸ்ரீ
உஸ்மானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரூபா என்ற ஓர் ஏழை விவசாயியின் மகள்.
விவசாயம் பொய்த்துப்போனதால் அஷ்ரூபா ஒரு கோழி வளர்ப்பு நிறுவனத்தில்
முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனம் பணத்தை எடுத்துக் கொண்டு விவசாயிகளை
ஏமாற்றியுள்ளது. இந்த ஏமாற்றத்தாலும், விவசாயத்தில் விளைச்சல் இல்லாததாலும்
அஷ்ரூபா மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதனால்
தினமும் வீட்டில் சண்டையிட்டு வாழ்க்கையை முடித்துக்கொள்வதைப் பற்றிப்
பேசியுள்ளார். இது 8 வயதுக் குழந்தையான தனஸ்ரீயை மனதளவில் வெகுவாகப்
பாதித்துள்ளது. இதுவே தனஸ்ரீ முதல்வருக்கு இவ்வாறு கடிதமெழுத காரணம்
என்கிறார்கள் தனஸ்ரீயின் வகுப்பாசிரியர்கள்.
தமிழகம்,
மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளின்
தற்கொலை என்பது வழக்கமான ஒன்றாக மாறிக்கொண்டு வருகிறது. இழப்புகள்
நேரிடும்போது மட்டும் பேசு பொருளாக இருக்கும் விவசாயிகளின் தற்கொலைகள்
நம்மால் காலப்போக்கில் மறக்கப்படுகின்றன.
இது குறித்து விவசாயிகள்
எவ்வளவு போராட்டங்கள் செய்தாலும் அதற்கான எந்தவொரு குறிப்பிட்ட தீர்வும்
மத்திய, மாநில அரசுகளிடமிருந்து முன்வைக்கப்படுவதில்லை. இதுவே,
விவசாயிகளின் தொடர் தற்கொலைகளுக்குக் காரணம். இதை மீண்டும் ஒருமுறை நமக்கு
நினைவுபடுத்துவதாக உள்ளது மூன்றாவது படிக்கும் மாணவியின் இந்த உருக்கமான
கடிதம்.
No comments:
Post a Comment