Latest News

பெரியார் பல்கலை மாணவி தற்கொலையில் அவிழாத மர்ம முடிச்சுகள்! அறையில் சிக்கிய கடிதத்தை எழுதியது யார்?

பெரியார் பல்கலையில் படித்து வந்த தர்மபுரியைச் சேர்ந்த மாணவி, விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் முக்கிய தடயம் கிடைத்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாப்பிரெட்டிப்பட்டி கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் திருமலை. தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செந்தமிழ்ச்செல்வி. இவர்களுடைய மூத்த மகள் நிவேதா (23). இவர், சேலத்தை அடுத்த ஓமலூரில் உள்ள பெரியார் பல்கலையில் எம்.எஸ்ஸி., தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

பல்கலை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இவருடைய அறையில் வேறு துறையைச் சேர்ந்த இரண்டு மாணவிகளும் தங்கி இருந்தனர். உடன் தங்கியிருந்த மாணவிகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆராய்ச்சி படிப்புக்கான 'இன்டர்ன்ஷிப்' பயிற்சிக்காக வெளியே சென்றுவிட்டதால், நிவேதா மட்டும் அறையில் தனியாக தங்கி இருந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜன. 10) இரவு 7 மணியளவில், சக விடுதி மாணவிகளிடம், தூக்கம் வருகிறது என்று சொல்லிவிட்டு அன்று நேரத்திலேயே தனது அறைக்குச் சென்றிருக்கிறார் நிவேதா. அறையை உள்புறமாக தாழிட்டுவிட்டுக் கொண்டார். சனிக்கிழமை (ஜன. 11) மாலை வரை ஆகியும் அவர், தனது அறையைவிட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து, சக மாணவிகள் நிவேதாவின் அறைக் கதவைத் தட்டிப்பார்த்தபோதும் அவர் கதவைத் திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த விடுதி மாணவிகள், இதுகுறித்து விடுதி காப்பாளர் மற்றும் பல்கலை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். சேலம் மாநகர காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை மற்றும் சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், கருப்பூர் எஸ்ஐ அங்கப்பன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனர். விடுதியின் அறை கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அங்கே, மின் விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் மாணவி நிவேதா, சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த விடுதி மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். துணைவேந்தர் குழந்தைவேல் மற்றும் பல்கலை பேராசிரியர்களும் அங்கு விரைந்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் இரவு 9 மணியளவில், பல்கலைக்கு வந்து சேர்ந்தனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் விபரீத முடிவுக்கான காரணம் உடனிடயாகத் தெரியவில்லை. அவருடைய அறையில் சோதனையிட்டபோது சில நோட்டுப் புத்தகங்களில் ஹார்ட்டின் படம் வரைந்து இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த அறையில் இருந்து மூன்று பக்கங்கள் கொண்ட ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டதாக சொல்கிறது காவல்துறை தரப்பு. அந்தக் கடிதத்தின் அடிப்படையில், மாணவி நிவேதா ஒருவரை காதலித்து வந்துள்ளதாகவும், அந்த இளைஞர் மாணவியின் காதலை ஏற்கவில்லை என்றும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறுகிறது காவல்துறை.

எனினும், காதல் கடிதத்தில் நிவேதா காதலிக்கும் இளைஞரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும், அதனால் அந்த நபர் பல்கலையில் படிக்கும் மாணவரா, ஊழியரா அல்லது பல்கலைக்கு வெளியே உள்ள நபரா என்ற விவரங்களும் உடனடியாக தெரியவில்லை என்கிறார்கள் காவல்துறையினர்.

இதற்கிடையே, மாணவியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மகளின் சடலத்தைப் பெற்றுக்கொண்டு சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளிக்குக் கொண்டு சென்றனர். அங்கே மாலையில், மகளின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்தனர்.

இச்சம்பவத்தால் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவிகளுக்கு திடீரென்று பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட மாணவி நிவேதா, யாருடனும் சகஜமாக கலந்து பேச மாட்டார் என்றும், பல்கலையிலும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கிடையாது என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், நிவேதாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கடித விவரங்களை காவல்துறை வெளிப்படையாக வெளியிடாமல் இருப்பதும், அந்தக்கடிதத்தை உண்மையில் மாணவிதான் எழுதினாரா? என்பதிலும் மர்மம் நீடிக்கிறது.

தற்கொலை செய்து கொண்ட மாணவி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சமூக ரீதியான ஆதரவாளர்கள் ஏதேனும் பிரச்னைகளைக் கிளப்பக்கூடும் என்பதாலும், ஒருதலைக் காதலால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலையும் காவல்துறை ஊடகங்கள் வாயிலாக கசிய விடுவதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, தாவரவியல் துறைத்தலைவர் செல்வம், கடந்த சில நாள்களுக்கு முன்பு பல்கலை லிப்டில் சென்றபோது, அதே லிப்டுக்குள் ஏறிச்சென்ற விலங்கியல் துறை மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஒரு புகார் எழுந்தது. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் பல்கலை நிர்வாகம் சரியாக விசாரணை நடத்தவில்லை எனவும், மாணவிகளிடம் குறைகேட்பு கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் மாணவர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், பல்கலையில் உள்ள மாணவிகளுக்கான குறைதீர்ப்பு மையங்களை வெறும் பெயரளவுக்கு மட்டுமே வைத்திருப்பதாகவும், அதை முறையாக நடைமுறைப்படுத்தி இருந்தால் நிவேதா போன்றவர்கள் தற்கொலை செய்திருக்க மாட்டார்கள் என்றும் மாணவர்கள் கூறுகின்றனர். மாணவியின் வகுப்பறை செயல்பாடுகள் குறித்து கருத்து அறிய தாவரவியல் துறைத்தலைவர் பேராசிரியர் செல்வத்தை, சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு மாலை வரை 7 முறை அழைத்தும் அவர் ஏனோ செல்போனை எடுக்கவில்லை.

முதல் நாள் இரவிலிருந்து மறுநாள் மாலை வரை ஒரு மாணவியின் அறை திறக்கப்படாமல் இருப்பது குறித்து அந்த விடுதியின் காப்பாளர் ஏன் எந்தவித சந்தேகமும் கொள்ளவில்லை? என்பது போன்ற தர்க்க ரீதியான கேள்விகளுக்கும் பல்கலை மற்றும் காவல்துறையிடம் இருந்து இதுவரை பதில் இல்லை. இதுதொடர்பாக பல்கலை பதிவாளர் (பொ) தங்கவேலை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் டிரைவிங்கில் இருப்பதாக மட்டும் நமக்கு தகவல் சொல்லப்பட்டது.

மொத்தத்தில் மாணவி நிவேதாவின் தற்கொலையில் பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழாமலேயே இருக்கிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.