Latest News

`அயனாவரம் சிறுமி வழக்கில் 15-வது நபர் விடுதலை! - சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில், 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அடுக்குமாடிக் குடியிருப்பின் லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார், சுரேஷ், எரால்பிராஸ், அபிஷேக், சுகுமாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், பாபு, பழனி, தீனதயாளன், ராஜா, சூர்யா, குணசேகரன், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேரை போலீஸார் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர். 

இவர்கள் மீது போக்ஸோ சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை, காயம் ஏற்படுத்துதல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலைமுயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகா வழக்குபதிந்தார்.
இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகாவுடன் வழக்கறிஞர் ரமேஷ் டீம்
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரையில் 11 மாதங்கள் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இன்று நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு வழங்கினார். வழக்கு விசாரணையின்போது குற்றம் சுமத்தப்பட்ட 10-வது நபரான பாபு, மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து 16 பேருக்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் குற்றம் சுமத்தப்பட்ட 15-வது நபரான தோட்டக்காரர் குணசேகரன் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 15 பேரையும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால், அவர்களுக்கு என்னென்ன தண்டனை என்பதை பிப்ரவரி 3-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார் நீதிபதி.

இந்த வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று அறிவித்துள்ளார். ஆனால் தண்டனை விவரத்தை அவர் கூறவில்லை. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 15-வது நபரான தோட்டக்காரர் குணசேகரன் விடுதலை செய்யப்பட்டார். அவர் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து ஆலோசித்த பிறகு மேல்முறையீடு செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும்" என்றார்.
இன்ஸ்பெக்டருக்கு வாழ்த்து கூறும் போலீஸ் அதிகாரி
இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகா கூறுகையில், ``குற்றம் செய்தவர்களுக்குச் சரியான தண்டனை கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சியாக உள்ளது. பெண் குழந்தைக்கு நடந்த இந்தக் கொடுமை அநீதியானது" என்றார். 

இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகாவுக்குச் சக காவலர்கள் கைகுலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதே நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதும் புழல் சிறையிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வரப்பட்ட குற்றவாளிகளைப் படம் பிடிக்க வாசலில் புகைப்படக்கலைஞர்கள், வீடியோகிராபர்கள் காத்திருந்தனர். ஆனால் இன்னொரு வாசல் வழியாக அவர்களை போலீஸார் அழைத்துச் சென்றனர்.

வழக்கறிஞர் ரமேஷிடம் பேசினோம். ``இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15-வது நபரான குணசேகர் விடுதலை செய்யப்பட்டது குறித்து சென்னை போலீஸ் கமிஷனருடன் கலந்து ஆலோசிக்கப்படும். மேலும், நீதிமன்ற உத்தரவின் நகல் கைக்கு வந்ததும் அவரின் விடுதலை குறித்து ஆராய்ந்தபிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.
உறவினர்கள்
இதற்கிடையில் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் உறவினர்கள் சோகத்தோடு நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர். தீர்ப்பு அளிக்கப்பட்டதும் அங்கிருந்த பெண்கள் கதறி அழுதனர். இன்னும் சிலர் ஆவேசமடைந்து வசைபாடினர். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரின் அம்மா கூறுகையில், ``என் மகன் 2 மாதம்தான் அங்கு வேலை பார்த்தான். ஒரு மாதம்தான் சம்பளம் வாங்கினான். அடுத்த மாதச் சம்பளம் வாங்குவதற்குள் அவனைச் சிறையில் அடைத்துவிட்டனர். என் மகனுக்கு நீதி கிடைக்க மனித உரிமை ஆணையத்துக்குச் செல்வோம்" என்றார். 

இந்த வழக்கில் கைதான தோட்டக்காரர் குணசேகரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால்தான் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.