
மத்திய அரசு அமைத்திருந்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசியக்
கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுவின் வரைவு அறிக்கை கடந்த ஆண்டு வெளியானது.
அந்த அறிக்கையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்த
வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரை செய்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழக
அரசு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முறை இந்தக்
கல்வியாண்டிலிருந்தே அமலாகும் என்றும் அறிவித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்குக் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு
என்பது அவசியமில்லாதது. இது மாணவர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தத்தைக்
கொடுக்கும். இதை மக்கள் விரும்பவில்லை எனத் தெரிந்தும் தமிழக அரசு
தேவையில்லாமல் திணிக்கிறது என்பதே கல்வியாளர்களின் கருத்தாக இருந்தது.
இந்நிலையில்
தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருந்த
பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக
அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``5 மற்றும் 8-ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு 2019- 2020-ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது
தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசாணை
வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக
பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. அவற்றை மாண்புமிகு அம்மாவின் அரசு
கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே,
ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் இதன் மூலம்
தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு
பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து
கருத்து தெரிவித்துள்ள பா.ம.க தலைவர் ராமதாஸ், ``5 மற்றும் 8-ஆம் வகுப்பு
பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்கள் மீதான
அழுத்தம், சுமை நீக்கப்பட்டுள்ளது. இது பா.ம.கவுக்குக் கிடைத்த வெற்றி"
எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment