Latest News

`பெண்ணியம் என்னவென்று கூகுள் செய்து பாருங்கள்!' -புர்கா விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரஹ்மான் மகள்

எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், சமூக வலைதளங்களில் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு விமர்சனத்திற்கு உள்ளாவது வழக்கம். தற்போது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் புர்கா அணிவது குறித்து தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதற்கு, ரஹ்மானின் மகள் கதிஜாவும் இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார்.
தஸ்லிமா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கதிஜா புர்கா அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``நான், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை மிகவும் விரும்புகிறேன். ஆனால், அவரது அன்பான மகளை பார்க்கும்போதெல்லாம் மூச்சுத்திண்றல் ஏற்படுவதைப்போல உணர்கிறேன். கலாச்சாரம் மிக்க குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள்கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்பது வருத்தத்தை அளிக்கிறது" என்று பதிவிட்டுருந்தார். 
View image on Twitter 

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் புர்கா அணிவது குறித்து விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தஸ்லிமா நஸ்ரின் பதிவிட்ட ட்விட்டர் பதிவின் ஸ்ட்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து பதிலளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பதிவில், ``புர்கா அணிவது தொடர்பான விவாதங்கள் முடிந்து ஒருவருடம் ஆன நிலையில், மீண்டும் இதுதொடர்பான விவாதங்கள் சுற்றி வருகிறது. நாட்டில் நிறைய பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், சிலர் பெண்கள் அணிய விரும்பும் ஆடை குறித்து கவலையை தெரிவிக்கின்றனர். இவை, என்னை திடுக்கிடச் செய்கிறது. ஒவ்வொரு முறையும் இதுதொடர்பான விவாதங்கள் எழும்போதும் எனக்குள் தீ பற்றி எரிகிறது. நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது" என்று குறிப்பிடுள்ளார்.

`எதுவும் இவ்வுலகில் சாத்தியம்தான்!'- இதழுக்காக 'பர்கினி' அணிந்த முதல் இஸ்லாமிய சூப்பர் மாடல்

தொடர்ந்து அந்தப் பதிவில், ``கடந்த ஒரு வருடத்தில், எனக்குள் நிறைய வித்தியாசங்களை உணர்ந்தேன். நான் பலவீனமாக இல்லை. வாழ்க்கையில் நான் தேர்வு செய்த விஷயங்களுக்காக வருத்தப்படவும் இல்லை. நான் என்ன செய்கிறேனோ, அதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நன்றி. கடவுளின் விருப்பப்படி.. என்னுடைய பணிகள் பேசும். வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை. நான் ஏன் இந்த விஷயத்தை விளக்கிக் கொண்டிருக்கிறேன் என்று நினைப்பர்களுக்கு.. `துரதிஷ்டவசமாக இது நடக்கிறது. தனக்காக ஒருவர் பேச வேண்டிய நிலைமை உள்ளது. அதைத்தான் நான் செய்கிறேன்' என்பதை சொல்லிக்கொள்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.

மேலும், அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின் என்று குறிப்பிட்டு, ``என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சுத்தமான காற்றை சிறிதுநேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், எனக்கு மூச்சுத் திணறலாக இல்லை. மாறாக, பெருமையாகவும் என்னுடைய நடவடிக்கைகளில் உறுதியாகவும் நிற்கிறேன். உண்மையான பெண்ணியம் என்றால் என்ன என்பதை கூகுள் செய்து பாருங்கள். பெண்ணியம் என்பது, மற்ற பெண்களை தாழ்த்தி பேசுவதோ அல்லது அவருடைய தந்தையை பிரச்னைக்குள் இழுப்பதோ அல்ல. உங்களுடைய ஆய்வுகளுக்காக என்னுடைய புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பியதாகவும் எனக்கு நினைவில்லை" என்றும் பதிளித்துள்ளார்.

`புர்காவுக்குத் தடை; பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர்! - சர்ச்சையில் சிக்கிய உ.பி அமைச்சர்

கதிஜாவின் இந்தப் பதிவையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இதனால் நெகிழ்ந்துபோன அவர் இன்ஸ்டாகிராமில் சிறிது நேரத்திற்குப் பிறகு நீல வானத்தின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, ``எனக்கு மீண்டும் கிடைத்த அன்பையும் ஆதரவையும் நினைத்து பெருமையாக உணர்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. தஸ்லிமா நஸ்ரினை தவறாக பேசவோ அல்லது வெறுப்புப் பிரச்சாரம் செய்யவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய சக மனிதர்களின் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த மனப்பான்மை உடைய சமூகமாக மாற முயற்சி செய்வோம். அவர் கூறியுள்ள கருத்துகளை வைத்து அவரைப் பற்றிய எந்த முடிவுக்கும் வரவேண்டாம். அமைதியாக இருங்கள்" என்றும் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் குடும்பம்
மும்பையில் நடந்த '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா இருவரும் மேடையில் கலந்துரையாடியது கடந்த வருடம் வைரலானது. இந்த நிகழ்வில் கதிஜா புர்கா அணிந்து வந்ததால் ரஹ்மானை பிற்போக்குவாதி என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர். இதற்கு கதிஜா, ``நான் உடுத்தும் உடையோ அல்லது என் தோற்றமோ, நான் என் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் தேர்வுகளுக்கோ எனது பெற்றோர்களுக்கு துளியும் சம்பந்தம் கிடையாது" என்று கூறியிருந்தார். ரஹ்மானும் தனது ட்விட்டர் பக்கத்தில், அவரது இரண்டாவது மகளும், மனைவியும் பர்தா அணியாத புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு விமர்சனங்களுக்கு பதில் தெரிவித்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.