Latest News

ரைஸிங் ஸ்டார்... போரிஸின் நம்பிக்கை... இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி மருமகனுக்குக் கிடைத்த முக்கிய பதவி!

டிசம்பர் 12-ம் தேதி பிரிட்டனில் நடந்த தேர்தலில், அங்கு மொத்தமுள்ள 650 இடங்களில் 365 இடங்களை வென்று, 30 வருடங்களுக்குப் பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. போரிஸ் ஜான்சன் புதிய பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். பிரதமரான பின், தற்போது தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துவருகிறார். அந்த வகையில், ஒவ்வொரு துறையிலும் தனக்கு சாதகமான ஆட்களை போரிஸ் நியமனம் செய்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்கிலாந்தின் உள்துறைச் செயலாளராக இருந்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவித்துக்கு நிதித்துறையின் தலைமைப் பொறுப்பை கொடுத்தார் போரிஸ். ஆனால், அங்கு ஒரு செக்கும் வைத்தார். கருவூலத்தில் ஜாவித்துக்கு உதவியாளராக இருந்த அத்தனை பேரையும் நீக்க உத்தரவிட்டார். இதற்கு ஜாவித் எதிர்ப்பு தெரிவிக்கவே, விவகாரம் பெரிதானது.
போரிஸ் ஜான்சன்
முடிவில், பெயரளவுக்கு மட்டும் என்னால் தலைமைப் பொறுப்பில் இருக்க முடியாது என்று தனது பதவியை ஜாவித் அதிரடியாக ராஜினாமா செய்து, பிரிட்டன் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்ற குறுகிய காலத்தில், போரிஸின் இந்த நடவடிக்கை சர்ச்சைகளை ஏற்படுத்தத் தவறவில்லை. இருந்தாலும் இதனைக் கண்டுகொள்ளாமல், தனது அடுத்தகட்ட வேலைகளில் பிஸியாகிவிட்டார்.
தற்போது, தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்து அறிவித்துள்ளார். இதில் அனைவரும் எதிர்பார்த்தபடியே, இந்தியர்களான அலோக் சர்மா, ப்ரீத்தி படேல், ரிஷி சுனக் ஆகியோருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ப்ரீத்தி படேல் உள்துறை அமைச்சராகவும், அலோக் சர்மா தொழில்துறை அமைச்சராகவும், ரிஷி சுனக் நிதி அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
யார் இந்த ரிஷி சுனக்?
இந்திய வம்சாவளிகள் மூவரில், நிதி அமைச்சர் பொறுப்பேற்கவுள்ள ரிஷி சுனக், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார். மற்ற இருவரும் ஏற்கெனவே கேபினெட் அந்தஸ்துடன்கூடிய அமைச்சர் பதவி வகித்திருந்தாலும், ரிஷி சுனக்கிற்கு இதுவே முதல்முறை. தனது தாத்தா, பாட்டி காலத்தில் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தது ரிஷியின் குடும்பம். ரிஷி பிறந்ததே சவுத்தாம்ப்டன் நகரில்தான். இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றார் ரிஷி. வெஸ்ட்மின்ஸ்டர் அரசியல்வாதிகள், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அதிகம் படிப்பது இதுவாகத்தான் இருந்தது. அதேவழியை ரிஷியும் தேர்ந்தெடுத்தார்.
ரிஷி சுனக்
அடுத்ததாக, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தபோது, நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவை சந்தித்து 2009-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் பெங்களூருவில் நடைபெற்றது. தன் மாமனாரைப் போல் பிசினஸ்மேனாக அறியப்படும் இவர், இங்கிலாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை இந்தியர். காட்மாரான் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபடி, தன் மனவியுடன் இணைந்து ஒரு டெக்ஸ்டைல் வடிவமைப்பு நிறுவனத்தை நடத்திவந்தார். அதோடு, இங்கிலாந்தின் பிரதமர் தெரசா மே கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்து தீவிரமாக கட்சிப் பணியாற்றிவந்தார்.
வடக்கு யார்க்‌ஷையர் ரிச்மாண்டு பகுதி மிகப்பெரிய கிராமியம் சார்ந்த பாராளுமன்றத் தொகுதி. இந்தத் தொகுதியில் 26 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த வில்லியம் ஹாக் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவந்தார். அவர், 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் பதவி விலகியதுடன், ஒட்டுமொத்த அரசியலிலிருந்தும் ஓய்வுபெற்றார். அந்த இடத்துக்கான தேர்தல் 2015-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதில், ஏற்கெனவே கன்சர்வேட்டிவ் கட்சி செல்வாக்காக உள்ள நிலையில், அக்கட்சி சார்பாக ரிஷி சுனக் போட்டியிட்டு, மொத்தம் 27,744 வாக்குகளைப் பெற்று அபார வெற்றிபெற்றார்.
ரிஷி சுனக்
கடந்த சில ஆண்டுகளாக அக்கட்சியின் எம்.பி-யாகச் செயல்பட்டவர், இதற்கு முன் வீட்டு வசதி, உள்ளாட்சித்துறை இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். கடந்த முறை போரிஸ் ஜான்சன் பிரதமராக வந்தபோதும் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், நிதித்துறை அமைச்சர் பொறுப்பிற்கு நிகரான கருவூல தலைமைச் செயலராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. செயலாளர் பதவி என்றாலும் அமைச்சரவைக் கூட்டங்களிலும் பங்கேற்கும் அதிகாரம் அவருக்கு இருந்தது. இதன்பின் டிசம்பரில் நடந்துமுடிந்த தேர்தலில் 26,086 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனால் இந்த முறை அவருக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பாராத திருப்பமாக ஜாவித் ராஜினாமா செய்ய, தற்போது நிதித்துறை அமைச்சர் அதிகாரம் ரிஷியைத் தேடி வந்துள்ளது. போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட்டை பெருமளவு ஆதரித்தவர் ரிஷி. ஜான்சனின் ஆதரவாளராக இருந்து, அவருக்கு ஆதரவாக பல ஊடகங்களில், பல கூட்டங்களில் பங்கேற்று அவருக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.
ரிஷி சுனக்
கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மட்டுமில்லை, போரிஸ் ஜான்சனின் நம்பிக்கைக்குரிய மனிதராக வலம்வருவதால்தான் தொடர்ந்து அவரது அரசில் ரிஷிக்கு முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. இதனால் கட்சியில் சுனக் ஒரு `ரைஸிங் ஸ்டார்' என்று வர்ணிக்கப்படுகிறார். அதேநேரம், அவருக்கு ஒரு சவால் காத்திருக்கிறது. இங்கிலாந்தின் பட்ஜெட் தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில்தான் சுனக் பதவியேற்க உள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.