Latest News

தமிழகத்திற்கு ஜெயலலிதா அளித்த அளப்பரிய திட்டங்கள்!!

தமிழக அரசியல் களத்தில் தனித்துவமிக்க ஒரு தலைவியாக இருந்தவர் ஜெயலலிதா. அவருக்கு நிகர் அவரே தான் என்று சொல்லுமளவுக்கு திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி தனிப்பெருமை அவருக்கு உண்டு. அதிமுகவினரால் "அம்மா" என அன்பாக அழைக்கப்பட்டவர். கட்சியை ராணுவ கட்டுக்கோப்போடும், ஆட்சியை தமது வழக்கமான அதிரடி பாணியிலும் நடத்தியதால் தமிழக மக்களால் "இரும்பு மங்கை"யென போற்றப்பட்டவர். அவர் வேறு யாராக இருக்க முடியும்? ஆம்... மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தான்!

அவர் தன் ஆட்சிக் காலத்தில், சாமானிய மக்களை கருத்தில் கொண்டு செயல்படுத்திய பல முன்மாதிரி திட்டங்கள், இன்றும் அவரது வழியில் அதிமுகவினரால் பின்பற்றப்பட்டு வருகிறது. 

ஆண்களின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த அரசியல் களத்தில் பெண்ணாக போராடி முத்திரை பதித்த ஜெயலிலதாவின் பிறந்த நாளில், அவர் தமது ஆட்சியில் கொண்டு வந்த நல்ல பல திட்டங்களை நினைவு கூர்வோம்..
அம்மா உணவகம்: வார இறுதிநாள்களில் உயர்தர ஹோட்டல்களுக்கு சென்று குடும்பத்துடன் விருந்து உண்ணும் வசதி படைத்தவர்கள் உள்ள இதே நாட்டில்தான், இன்றும் தினமும் மூன்று வேளை உணவு உண்ண முடியாத ஏழை மக்களும் இருக்கின்றனர். இவர்களை போன்றோரை கருத்தில் கொண்டு, 2013 -இல் தமது பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி, அம்மா உணவகத்தை சென்னையில் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். 

சென்னை மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் இத்திட்டத்தின்கீழ், குறைந்த விலையில் தினமும் மூன்று வேளை உணவு விநியோகப்படுகிறது. ஆரம்பத்தில் சென்னை மாநகராட்சியில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம், ஏழை மக்கள் மத்தியில் மட்டுமின்றி, நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலும் அமோக வரவேற்பு பெற்றது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஏழைகளின் பசியாற இன்று அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களுக்கும் இந்த திட்டம் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: சாதாரண மக்களும் வசதி படைத்தவர்களுக்கு இணையாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோக்கில், கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, 2010-இல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தது. 

2011-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தியது. அத்துடன், இத்திட்டத்தின் நிர்வாக பொறுப்பை, தனியார் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பொதுத் துறை நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இந்தத் திட்டமும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதையடுத்து, இந்தத் திட்டத்துக்கான ஆண்டு காப்பீட்டு தொகையை தமிழக அரசு ரூ.5 லட்சமாக அண்மையில் உயர்த்தியது.
வீராணம் கூட்டு குடிநீர் திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டம்: சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக, கோடை காலத்தில் தமிழகம் முழுவதுமே பெரும்பாலான இடங்களில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடும். சென்னை மாநகரில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதத்தில், கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் விநியோகிக்கும் வீராணம் கூட்டு குடிநீர் திட்டம் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
இப்படி பிற இடத்திலிருந்து சென்னைக்கு தண்ணீரை கொண்டு வந்தாலும், மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீரைமட்டத்தை உயர்த்தினால்தான், குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என ஜெயலலிதா திட்டவட்டமாக கருதினார்.

அதன் பலனாக அவர், 2011ல் மீண்டும் முதல்வர் பொறுப்பை ஏற்றதும், சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து குடியிருப்புகள், கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் அதிரடியாக அமல்படுத்தப்பட்டது.
நகரங்களிலும் சிற்றுந்து (மினி பஸ்) சேவை: பேருந்து வசதியில்லாத குக்கிராமங்களில் சிற்றந்து வசதியை கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தின் மறுவடிவமாக, சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள சிறுநகரங்களில் அரசு நகரப் பேருந்து (டவுன் பஸ்) வசதியில்லாத வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

சிற்றுந்துகள் மூலம் நடுத்தர, ஏழை மக்கள் அன்றாடம் தங்கள் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு குறைந்த பயணச் செலவில் செல்ல முடிகிறது. இதனால் சாமானியர்கள் மத்தியில் இத்திட்டத்துக்கும் 'சபாஷ்" கிடைத்துள்ளது.
மின்வெட்டு இல்லாத தமிழகம்: 2006-11ல் நடைபெற்ற திமுக ஆட்சியில் சென்னையை தவிர்த்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் மின்வெட்டு பிரச்னை தொடர்கதையாக இருந்தது. தினமும் காலை, மாலை என முறைவைத்து பல மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. இதனால் தனிமனிதர்கள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அன்றாடம் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

மின்வெட்டால் தங்களது நேர்ந்த தொழில் இழப்புகளை, தொழில் மண்டலமான கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள், இன்றும் மறக்கவில்லை என்பதற்கு, 2016 சட்டப்பேரவை தேர்தலில், கோவை மண்டலத்தில் திமுக பலத்த அடி வாங்கியதே சாட்சி.

ஆனால், 2011-இல் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதும் என்ன மாயம் நிகழ்ந்ததோ தெரியவில்லை! இதுநாள் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மின்வெட்டு பிரச்னை இல்லை.
இதேபோன்று, தொட்டில் குழந்தைத் திட்டம், நிலஅபகரிப்பு தடுப்புச் சட்டம், கந்து வட்டி தடுப்புச் சட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, பெண்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் என பல்வேறு முத்திரை பதிக்கும் திட்டங்கள் அவரின் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டன.

அவர் தற்போது இல்லாவிட்டாலும், தமிழகம் எங்கும் அவரது திட்டங்கள் 'அம்மா உணவகம், அம்மா பார்மசி, அம்மா குடிநீர்,..' என்று இருப்பதை பார்க்கும் போது அவரது திட்டங்களை தமிழக மக்கள் நினைவு கூறுகின்றனர். இது போன்ற திட்டங்களின் மூலம் அவர் மக்கள் மனதிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்...
newstm.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.