
மருத்துவ மாணவி டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்,
குற்றவாளிகள் நான்கு பேரும் 7 ஆண்டுகளுக்குப் பின்னர்
தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,
ராம் சிங் என்பவர் சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அதேபோல், 18 வயதுக்குட்பட்ட ஒருவர், மூன்றாண்டுகளுக்குப் பின் விடுதலை
செய்யப்பட்டார். மற்ற நான்கு குற்றவாளிகளான அக்ஷய் தாக்குர் (31), பவன்
குப்தா (25), வினய் சர்மா (26) மற்றும் முகேஷ் சிங் (32) ஆகியோருக்கு,
டெல்லி திகார் சிறையில் நேற்று அதிகாலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடைசி
சில மணி நேரங்கள், குற்றவாளிகள் நால்வரும் தனித் தனி அறைகளில்
தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்கள் சிறை அதிகாரிகள்.
சிறை நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட உணவு எதையும்
அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார்கள். அதன்பின், கைகள் பின்புறம்
கட்டப்பட்ட நிலையில், சிறைக் கண்காணிப்பாளர், மாஜிஸ்திரேட், மருத்துவர்
முன்னிலையில் அவர்களுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. இறப்பை
மருத்துவர் உறுதிசெய்த பின்னர், அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக
அனுப்பி வைக்கப்பட்டன.
சுமார்
5 மணிநேரம், அவர்களின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில்,
தூக்குத்தண்டனைக் கைதிகளின் கடைசி ஆசையை அவர்கள் தூக்கிலிடுவதற்கு முன்பு
கேட்பது வழக்கம். அந்த வகையில் நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும்
தூக்கிலிடும் முன் அவர்களின் கடைசி ஆசை குறித்து சிறை நிர்வாகம்
கேட்டுள்ளது. அதற்கு அவர்கள் அளித்த பதிலை, சிறை அதிகாரிகள் மும்பை
மிரருக்குத் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகளில்
ஒருவரான முகேஷ் சிங், தனது உறுப்புகளைத் தானம் செய்ய விரும்பி, அதை
அதிகாரிகளுக்கு எழுத்துபூர்வமாக வழங்கியதாக, திஹார் சிறை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன. எனினும், இவர் வேறு ஆசை என்று எதையும் கூறவில்லை. வினய்
சர்மாவோ, தான் வரைந்த ஓவியங்களை சிறையிலேயே வைக்க வேண்டும் என்று திகார்
சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அனுமன் சாலிசாவும் (அனுமன் மந்திரம்) தன்னுடன் வைத்திருந்த ஒரு
புகைப்படமும் தனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று
கூறியுள்ளார்.
மற்ற இரண்டு குற்றவாளிகளான பவன் குப்தாவும், அக்ஷய்
சிங்கும் எந்த ஆசையையும் வெளிப்படுத்தவில்லை. மரணதண்டனை
நிறைவேற்றப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக, அதிகாலை 4:45 அல்லது 5
மணியளவில், மாவட்ட மாஜிஸ்திரேட் நேஹால் பன்சால் நால்வரின் அறைக்குச்
சென்றபோது, குற்றவாளிகள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி அதை
எழுத்துபூர்வமாக வழங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment