Latest News

கோடை வெயிலால் வியாபாரம் சூடுபிடிக்கிறது; வெளிநாடுகளுக்கு பறக்கும் நெல்லை மண்பாண்டங்கள்: ராஜஸ்தான் இறக்குமதிக்கு நெல்லையில் கிராக்கி

நெல்லை: தமிழகத்தில் முன்னோர்கள் மண் பாத்திரங்களையே பெரும்பாலும் பயன்படுத்திய காலத்தில் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், காலமாற்றத்தால் நாகரீகம் என்ற பெயரில் அலுமினியம், சில்வர், நான்ஸ்டிக் உள்ளிட்ட பாத்திரங்களுக்கு பொதுமக்கள் மாறிவிட்டனர். இத்தகைய பாத்திரங்களின் பயன்பாட்டை கவுரவமாக கருதியவர்களுக்கு நோயின் தாக்கம் ஆண்டிற்கு ஆண்டு பெருகியது மட்டுமல்லாமல் பல இளம் வயதிலேயே முதிர்ச்சியும் மரணமும் ஏற்பட்டு வருவதுதான் மிச்சமாகும். இதனிடைேய பலர் நீண்ட காலம் மற்றும் குறுகிய காலங்களில் ஏற்படும் நோய்களால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு, நிலம், வங்கி இருப்பு, ஓய்வின்போது பெற்ற பணப்பலன்களை இழந்து வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் தற்போது மீண்டும் மண்பாண்ட பயன்பாடுகள் துவங்கியுள்ளது.

இதனிடையே அனலின் தாக்கம் தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசியும் இதற்கு விதிவிலக்கல்ல என்ற வகையில் வெயில் கோடை போல் அதிகரித்து வருகிறது. இதனால் நெல்லை, தூத்துக்கு, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் மண்பாண்ட விற்பனை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து குறிச்சி மண்பாண்ட சங்க தலைவர் முருகன் கூறியதாவது: நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் குறிச்சி, மாவடி, கூனியூர், தென்காசி மாவட்டத்தில் இலஞ்சி, தேன்பொத்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பானைகள், உண்டியல்கள், அடுப்பு, மீன் சட்டி, குடிநீர் டேங்க் (பானை ரூ.250), பூஜை அறையிலுள்ள சாம்பிராணி கிண்ணம், டீ குவளை உள்ளிட்ட பல்வேறு மண்பாண்ட பொருட்கள் கேரளா, பெங்களூர், ஐதராபாத், சென்னை, வேலூர், சேலம், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

இதுகுறித்து அத்திமரப்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறுகையில், ''நாங்கள் எல்லாம் சிறுவயதில் மண் பாத்திரங்களில்தான் சமைத்து சாப்பிட்டோம். அந்த பானையில் சமைத்த சோறும், குழம்பும் ருசியாக இருக்கும். மண் பானை சோறு மற்றும் தண்ணீர் அவ்வளவு வாசமாக இருக்கும். இந்த மண்பாண்ட தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கானோர் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஆனால், நாகரீகம் என்ற பெயரில் மற்ற உலோகங்களுக்கு மக்கள் மாறியதால் மண்பாண்ட தொழிலே நலிவடைந்தது. காலப்போக்கில் உலோக பாத்திரங்களை வாங்கி சமைக்கும் கட்டாயத்திற்கு ஆளான நிலையில் தற்போது பழமை மாறாமல் மீண்டும் மண்பாத்திரங்களை மக்கள் நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மண்பாண்டங்களின் பயன்பாட்டை பெருக்கினால் நோய் நொடியின்றி நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழலாம்'' என்றார்.

மேலப்பாளையம் குறிச்சியில் தயாராகும் மண்பாண்டங்களில் மீன் சட்டி, கடாய், குடிநீர் டிரம்ப் உள்ளிட்ட மண் பாண்ட பொருட்கள் வட மாநிலங்களான மகாராஷ்டிரா, கோவா, மத்தியபிரதேசம், புதுடெல்லி மற்றும் வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கும் அனுப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மண்பாண்ட பொருட்கள் விற்பனை பாளையில் களைகட்டி உள்ளது. குடிநீர் பானை ரூ.250 முதல் ரூ.600 வரைக்கு விற்பனையாகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.