
டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும்,
ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 46 பேர் உயிரிழந்தது தொடர்பாக
நாளை மக்களவையில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில்
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த இரு வாரங்களுக்கு முன் டெல்லி வடகிழக்குப் பகுதியில் சிஏஏ
ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் வகுப்புக்
கலவரமாக மாறியது.
இந்தக் கலவரத்தில் ஏராளமான வீடுகள், கடைகள், பேருந்துகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
தீ வைத்து எரிக்கப்பட்டன. நாட்டையே உலுக்கிய இந்தக்
கலவரத்தில் இதில் 46 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்.
பட்ஜெட்
கூட்டத்தொடரின் 2-ம் அமர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கியவுடன் டெல்லி கலவரம்
தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி, அமளியில் ஈடுபட்டன. ஆனால், ஹோலி பண்டிகை
முடிந்த பின்தான் விவாதிக்கப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத்
தெரிவித்தது. இதனால் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் செய்த அமளியால்
அலுவல்கள் ஏதும் நடக்காமல் கடந்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது.
வரம்பு
மீறியும் விதிமுறைகளையும் மீறி நடந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேரை
சபாநாயகர் ஓம் பிர்லா கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்தார்.
இருப்பினும் டெல்லி கலவரம் தொடர்பாக அவையில் விவாதிக்கக் கோரி காங்கிரஸ்
உள்ளிட்ட கட்சிகள் சபாநாயகரிடம் மனு அளித்திருந்தன. இந்நிலையில் நாளை
மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது மக்களவையில் டெல்லி கலவரம்
தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
மக்களவை விதி 193-ன் கீழ் இந்த விவாதம் நடத்தப்படுகிறது. ஆதலால், விவாதத்துக்குப் பின், வாக்கெடுப்பு ஏதும் நடத்தப்படாது.
மேலும்,
நாளை அவை கூடியதும் மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம்
குறித்து காங்கிரஸ் கட்சி எழுப்பும் எனத் தெரிகிறது. எம்எல்ஏக்களை
அழைத்துச் செல்ல பாஜக சார்பில் விமானம் புக் செய்யப்பட்டதாக காங்கிரஸ்
எம்.பி. திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். ஆதலால், நாளை மத்தியப்
பிரதேச விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பும் எனத்
தெரிகிறது.
No comments:
Post a Comment