Latest News

தன் பிறப்புச் சான்றிதழுக்கே இந்த நிலை..!' -சாமானியரின் கடிதமும் சு.வெங்கடேசன் கோரிக்கையும் #CAA

கடிதங்கள் எப்போதும் தனித்துவம் மிக்க நெருக்கமான உணர்வுகளைத் தரும். அதுவும் அன்பு நிறைந்த வார்த்தைகள் அடங்கிய, கையால் எழுதப்பட்ட கடிதங்கள் என்றால் அவை நமது பேரன்பிற்கு உரியதாகும். அந்த வகையில், சமீபத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன்-க்கு திருச்சியைச் சேர்ந்த ஒருவர் நன்றிக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதத்தைப் படித்ததும் நெகிழ்ந்த சு.வெங்கடேசன் அதைத் தன்னுடைய முகநூலில் பகிர்ந்துள்ளார். அந்தக் கடிதத்தை முன்வைத்து பிரதமர் மோடிக்கும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். `அந்தக் கடிதத்தின் பின்னணி என்ன.. அதற்கு சு.வெங்கடேசன் எம்.பி-யின் ரியாக்‌ஷன் என்ன.. சு.வெங்கடேசன் எம்.பி மோடிக்கு எழுதிய கடிதம் என்ன?' என்பதைப் பற்றிய கட்டுரைதான் இது.
கடிதம்
திருச்சியில் வசித்து வரும் மரியம் பீவி என்பவர் தனது பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்து வந்துள்ளார். எண்ணற்ற முறைகள் திருச்சியிலிருந்து மதுரைக்கு சுமார் 150 கி.மீ பயணம் செய்து வந்துள்ளார். ஆனால், மாநகராட்சியைச் சேர்ந்த அலுவலர்கள் ஒவ்வொரு முறையும் பல காரணங்களைச் சொல்லி சான்றிதழை வழங்க மறுத்துள்ளனர். இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் ஒன்றில் சு.வெங்கடேசன் கலந்துகொள்ளப் போவது மரியத்தின் கவனத்துக்குச் சென்றுள்ளது. போராட்டத்தில் அவரைச் சந்தித்து தனது பிரச்னை தொடர்பாக மனு வழங்கவும் முடிவு செய்துள்ளார். ஆனால், அந்தப் போராட்டத்துக்கு சு. வெங்கடேசன் செல்லவில்லை.

மரியம் பீவி, இந்தச் செய்தியை அறிந்து மிகவும் சோர்வடைந்துள்ளார். அருகில் இருந்த நண்பர்கள் அவரிடம் மனுவை தபாலில் அனுப்ப வலியுறுத்தியுள்ளனர். மரியமும் அந்த மனுவை அரைகுறை மனதோடு அவருக்கு அனுப்பியுள்ளார். சு. வெங்கடேசன், தன்னுடைய அலுவகத்துக்குக் கடிதம் வந்ததும், பிரச்னை தொடர்பாக மாநகராட்சி அலுவலர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதனடிப்படையில் மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மரியம் பீவியை தொலைபேசியில் அழைத்து அலுவலகத்துக்கு வரச்சொல்லி பிறப்புச் சான்றிதழைக் கொடுத்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவித்து சு.வெங்கடேசனுக்கு மரியம் பீவி எழுதிய கடிதம்தான் அது.

சு.வெங்கடேசன் வலிநிறைந்த அனுபவமொன்றிலிருந்து மீள உதவியமைக்காக நிறைந்த அன்பாலும், அளவிட முடியாத நன்றியுணர்வாலும் எழுதப்பட்ட கடிதமது.
 
சு.வெங்கடேசனுக்கு மரியம் பீவி எழுதிய கடிதத்தில், ``உயிர் உள்ளவரை நீங்கள் எனக்கு செய்த இந்த உதவியை மறக்க மாட்டேன். இறைவா, என் அண்ணன் வெங்கடேசன் அவர்களும் அவரது குடும்பத்தாரும் அவரது நண்பர்களும் நீண்ட ஆயுளோடும் நிறைந்த செல்வத்தோடும் இருக்க வேண்டும். நோய் நொடி இல்லாத வாழ்க்கையையும் சாந்தியும் சமாதானமும் நிலைத்து நிற்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்று எழுதியுள்ளார். 

கடிதத்தால் நெகிழ்ந்த அவர் தன்னுடைய முகநூலில், ``நாடாளுமன்ற உறுப்பினரின் பணிக்காக எனக்கு எழுதப்பட்ட கடிதம்தான் அது. அதில் இருந்த வார்த்தைகள் அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாதவை. வலிநிறைந்த அனுபவமொன்றிலிருந்து மீள உதவியமைக்காக நிறைந்த அன்பாலும், அளவிட முடியாத நன்றியுணர்வாலும் எழுதப்பட்ட கடிதமது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அனுப்பிய கடிதம்
மரியம் பீவியின் இந்தக் கடிதத்தை அவருடைய பிறந்தநாளான நேற்று அவர் படித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவருடைய பிறந்தநாளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி அனுப்பிய கடிதத்தையும் படித்துள்ளார். அக்கடிதத்தில், ``உங்களின் வளமான பல்வேறு அனுபவங்கள் தொடர்ந்து இத்திருநாட்டின் உயர்வுக்கு உதவட்டும்" என்று பிரதமர் மோடி எழுதியிருந்தார். 

``ஒரு புறம் பிரதமரின் வார்த்தையும், இன்னொருபுறம் மரியம் பீவியின் வார்த்தையும் என் கண்களுக்கு முன்னால் இருந்தது" என்று குறிப்பிடும் அவர், தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு தனக்கு கிடைத்த அந்த நெகிழ்ச்சியான கடிதத்தையும் அதன் பின்னணிக் கதையையும் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

சு.வெங்கடேசன் தனது பிறப்புச் சான்றிதழ் பெறவே இவ்வளவு துன்பப்பட வேண்டிய நிலையில் மரியம் பீவிக்களும், மாரியம்மாக்களும் இருக்கிறார்கள். நீங்களோ அவர்களுடைய பெற்றோரின் பிறப்புச்சான்றிதழையும் சேர்த்துக் கேட்கிறீர்கள்.
 
பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி எழுதிய கடிதத்தில், ``பிரதமர் அவர்களே, முன்பின் முகம் பார்த்தறியாத அந்த சகோதரி எனக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் நோய்நொடி இல்லாத வாழ்வையும் வழங்க இறைவனை மனமுருகிப் பிராத்திக்கும் அளவுக்கு நான் அவருக்கு எதுவும் செய்துவிடவில்லை. என் அலுவலகத்துக்கு வந்த ஒரு கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசு அலுவலருக்கு அனுப்பிவைத்தேன். அது மட்டுமே நான் செய்தது. இச்சிறுபணிக்கு உயிருள்ள வரைமறக்கமுடியாத நன்றியை மக்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்றால், அப்பணி செய்ய முடியாமல் அவர்களை தடுத்துக்கொண்டிருக்கும் சுவர்கள் எவ்வளவு வலிமையானதாக இருக்கும்?" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அந்தக் கடிதத்தில், ``தனது பிறப்புச் சான்றிதழ் பெறவே இவ்வளவு துன்பப்பட வேண்டிய நிலையில் மரியம் பீவிக்களும், மாரியம்மாக்களும் இருக்கிறார்கள். நீங்களோ அவர்களுடைய பெற்றோரின் பிறப்புச்சான்றிதழையும் சேர்த்துக் கேட்கிறீர்கள். எனக்கு நீங்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் `உங்களின் வளமான பல்வேறு அனுபவங்கள் தொடர்ந்து இத்திருநாட்டின் உயர்வுக்கு உதவட்டும்' என்று குறிப்பிட்டுள்ளீர்களே, அந்த வார்த்தையுள் இருக்கும் உண்மையைப் பற்றிக் கேட்கிறேன். சிஏஏ வைத் திரும்பப் பெறுங்கள், என்பிஆர், என்ஆர்சியைக் கைவிடுங்கள். உங்களின் நலனுக்காகவும் வளத்துக்காகவும் இறைவனைத் தொழ எண்ணிலடங்காத எளிய மக்கள் காத்திருக்கிறார்கள். இந்திய நாட்டின் உயர்வுக்கு அது பேருதவியாக இருக்கும். நாம் வாழ்கிற காலத்துக்கும், வகிக்கிற பொறுப்புக்கும் அர்த்தம் இருக்கிறது. அது மக்களின் துயர்நீங்க உழைப்பதும், அவர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நிலமாக இத்திருநாட்டினை மாற்றுவதும்" என்று எழுதியுள்ளார்.

சு.வெங்கடேசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நண்பர்கள், வாசகர்கள் உட்பட பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். ஆனால், ஒரு சில வாரங்களுக்கு முன்னால் மரியம் எழுதியுள்ள அன்புமிக்கக் கடிதம் அவரின் பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது. அதை முன்வைத்து நாட்டில் சர்ச்சையையும் விவாதங்களையும் போராட்டங்களையும் வன்முறைகளையும் ஏற்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றைக் கைவிட அவர் எழுதியுள்ள கடிதம் நெட்டிசன்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.