Latest News

NPR-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா?
குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள், இஸ்லாமியர்கள், பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.

குறிப்பாக, சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் 20 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற போது சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் கூட நடைபெற்றது.
அதன்தொடர்ச்சியாக சட்டசபையில் காரசார விவாதங்கள், எதிர்கட்சிகள் வெளிநடப்பு, பின் தி.மு.க கையெழுத்து இயக்கம், முதலமைச்சருடன் இஸ்லாமிய அமைப்பபுகள் சந்திப்பு என பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. இந்தநிலையில் அடுத்த வாரம் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.

இந்த கூட்டத்தொடரின் போது மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், 'அது பரிசீலனையில் உள்ளது" என்று தெரிவித்தார்.

பின்னர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், "மக்கள் தொகை பதிவேட்டில் கேட்கப்படும் சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிப்பது அவரவர் விருப்பம்" என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி இருவரும் நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது மக்கள் தொகை பதிவேடு விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்புக்கு பின்னர், மக்கள் தொகை பதிவேடு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கவுள்ள முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

மக்கள் தொகை பதிவேடு அமல்படுத்துவதில் 2010 ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்ட நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என இந்தியாவில் 15 மாநிலங்கள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளதாக கூறுகிறார் சட்டமன்ற உறுப்பினரும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொது செயலாளருமான அபூபக்கர்.


அபுபக்கர்


"மக்கள் தொகை பதிவேடு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலில், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறுவதற்கு, மக்கள் தொகை பதிவேடு பட்டியல் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். எனவே, பழைய நடைமுறையின்படியே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்கிறார் அபூபக்கர்.

ராதாகிருஷ்ணன்


ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் என்.பி.ஆரை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்திருப்பார். அதேபோன்று எடப்பாடி பழனிச்சாமி அரசும் உடனடியாக இது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் 2021 பொதுத் தேர்தலில் இது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். என்.பி.ஆரை, எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி அரசு தீர்மானம் நிறைவேற்றுமா என்பது சந்தேகமே' என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன்.

என்.பி.ஆர் பற்றிய தெளிவு இல்லாமல் மக்கள் போராடுகிறார்கள். இதைப் பயன்படுத்தி எதிர்கட்சிகள் அவர்களைத் தூண்டி விடுகிறார்கள் .மேலும், என்.பி.ஆர். குறித்து மக்களுக்கு புரிதல் ஏற்படுத்தும் வேலைகளை மத்திய அரசு சரியாக செய்யவில்லை என்கிறார் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மூத்த தலைவருமான பொன்னையன்.

பொன்னையன்


"மக்கள் தொகை பதிவேடு உலகின் அனைத்து நாடுகளிலும் இருக்கிற ஒன்று. மேலும், இதனால் யாருக்கும் பாதிப்பில்லை, இதில் இடம்பெற்றுள்ள கேள்விகளுக்கு மக்கள் பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று பிரதமர் மோடியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் தெளிவாக தெரிவித்து விட்டனர். எனவே, தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அவசியமே இல்லை" என்கிறார் பொன்னையன்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மார்ச் 9-ம் தேதி தொடங்கும் மானியக் கோரிக்கை விவாதங்களின்போது மீண்டும் இந்த விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், ஒரு வேளை அரசு தீர்மானம் நிறைவேற்றினால், அது என்.பி.ஆரில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கேள்விகள் குறித்து பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தும் வேண்டுகோள் தீர்மானமாக இருக்கும் என்று சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.