
`சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்கள் மீது சிறிதும்
அக்கறை இல்லாமல் கொத்தடிமைகளாகவே நடத்துகிறார்கள். சேலம் மாநகராட்சி குப்பை
ஏற்றும் மினிடோர் வாகனத்தில் ஆடு, மாடுகளை ஏற்றி வருவதைப்போல தனிமனித
இடைவெளி இல்லாமல் 20-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை அடைத்து
வருகிறார்கள்' என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

கொரோனா வைரஸுக்கு முன்...
கொரோனா வைரஸுக்குப் பின்... எனத் தூய்மைப் பணியாளர்களை
பொதுமக்கள் பார்க்கும் மனநிலையைப் பிரித்து பார்க்க வேண்டியுள்ளது. கொரோனா
வைரஸுக்கு முன்பு தூய்மைப் பணியாளர்களை சக மனிதர்களாகக்கூட மதிக்காத நிலை
இருந்தது. ஆனால், தற்போது அவர்கள் பணியின் முக்கியத்துவத்தை மக்கள்
உணர்ந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அப்படியான சூழலிலும்
சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்களை உரிய மரியாதையுடன்
நடத்தவில்லை என்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களை பணிக்குக் கூட்டி
வரும்போது குறைந்தபட்ச தனிமனித இடைவெளி இல்லாமல் ஒரு மினிடோர் வாகனத்தில்
20-க்கும் மேற்பட்டவர்களை அடைத்து ஏற்றிக்கொண்டு வருகிறார்கள். ஊருக்கு
உபதேசம் செய்யும் சேலம் மாநகராட்சி இந்த விவகாரத்தில் அக்கறை கொள்வதில்லையா
என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி
சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ.க பிரமுகர் சிவராமன், ``உயிருக்கு ஆபத்தை
விளைவிக்கின்ற கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கைப் பின்பற்றி வருகிறோம்.
நாம் அனைவரும் வீட்டுக்குள் பத்திரமாக இருக்கிறோம். நமக்காகப் பணி
செய்யக்கூடிய தூய்மைப் பணியாளர்கள், தெருத்தெருவாக துப்புரவுப் பணிகளை
மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்குப் பூஜை செய்வதால் எந்தப் பலனும்
இல்லை.
தூய்மைப் பணியாளர்களும் நம்மைப்போல மனிதர்கள். அவர்களுக்கும்
குடும்பம், குழந்தைகள் இருக்கின்றன. அதனால் மாநகராட்சி அதிகாரிகள் தூய்மைப்
பணியாளர்களை சமூக இடைவெளி கடைப்பிடித்து பணிபுரியச் செய்வதோடு அவர்களுக்கு
முககவசம், கையுறை, காலுக்கு பூட்ஸ் போன்ற உபகரணங்களைக் கொடுத்து பணிபுரிய
அறிவுறுத்த வேண்டும்.
ஆனால்,
சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்கள் மீது சிறிதும் அக்கறை
இல்லாமல் வழக்கம் போல கொத்தடிமைகளாகவே நடத்துகிறார்கள். சேலம் மாநகராட்சிக்
குப்பை ஏற்றும் மினிடோர் வாகனத்தில் ஆடு, மாடுகளை ஏற்றி வருவதைப்போல சமூக
இடைவெளி இல்லாமல் 20-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை அடைத்துக்கொண்டு
வருகிறார்கள்.
தூய்மைப் பணியாளர்களின் உயிர் மட்டும் அவ்வளவு
மலிவானதா? அவர்களைச் சமூக இடைவெளியோடு கெளரவமான வாகனத்தில் அழைத்து வந்து
மீண்டும் கொண்டு போய் விடுவதுதான் சரியானதாக இருக்கும். தமிழ்நாடு
முனிசிபல் கார்ப்பரேஷன் நிர்வாக ஆணையாளர்,
`தொழிலாளர்களைப் பாதுகாப்பாக
நடத்த வேண்டும். இல்லையென்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று
கூறியும் சேலம் மாநகராட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றார்.
இதுபற்றி
விளக்கம் கேட்பதற்காக சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷைத் தொடர்புகொள்ள
முயற்சி செய்தோம். அவர், கலெக்டர் அலுவலகத்தில் மீட்டிங்கில் இருப்பதாகத்
தெரிவித்தார்கள். மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் பேசியபோது, ``அவர்களை
வாகனத்தில் அழைத்து வருவது தொடர்பாக கமிஷனரின் கவனத்துக்குக் கொண்டுசென்று
நடவடிக்கை எடுக்கிறோம். தூய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு செட் புதிய
உபகரணங்களைக் கொடுத்தும், அவர்கள் அதைப் போட்டுக் கொள்வதில்லை. இனி
கட்டாயமாக அணிய நடவடிக்கை எடுக்கிறோம்'' என்றார்கள்.
No comments:
Post a Comment