Latest News

இரு 500 ரூபாய் நோட்டுகள் ஏற்படுத்திய குழப்பம்: லக்னோ போலீஸார் தயக்கம்

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உளள பேப்பர் மில் காலனி பகுதியில் நேற்று இரவு இரு 500 ரூபாய் நோட்டுகள் ஏற்படுத்திய குழப்பத்தால் போலீஸார் தூக்கமின்றித் திணறிப்போனார்கள்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும், எவ்வாறு பரவுகிறது என்பது பற்றியும் பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்கள் யூடியூபிலும், வாட்ஸ் அப்பிலும் வலம் வருகின்றன.
அந்த வகையில் ஒரு வீடியோவில் ரூபாய் நோட்டுகள் மூலமும் கரோனா வைரஸ் பரவும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த வீடியோ அப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு பேப்பர் மில் காலனி அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் இரு 500 ரூபாய் நோட்டுகள் ஒரு பிளாஸ்டிக் காகிதத்தில் வைக்கப்பட்ட நிலையில் சாலையில் கிடந்தன

வழக்கமாக சாலையில் இதுபோன்று ரூபாய் நோட்டு இருப்பதை மக்களில் சிலர் பார்த்தால் உடனுக்குடன் எடுத்து வைத்துக்கொள்வா்கள். ஆனால், இந்த இரு 500 ரூபாய் நோட்டுகளும் சந்தேகத்துக்கு இடமான வகையில் பிளாஸ்டிக் பையில் பையில் வைக்கப்பட்டு இருந்ததால் ஒருவரும் எடுக்கவில்லை.
ரூபாய் நோட்டுகள் மூலம் கரோனா வைரஸைப் பரப்ப சிலர் தீட்டும் திட்டம் எனக் கருதி குடியிருப்பு வாசிகளும் வழியில் சென்றவர்களும் எடுக்கவில்லை. இதுகுறித்து உடனடியாக லக்னோ போலீஸ் உதவி மையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். கரோனா வைரஸை ரூபாய் நோட்டு மூலம் பரப்ப சிலர் திட்டமிட்டுள்ளதாகப் புகார் அளித்தனர்.
உடனடியாக போலீஸார் அந்த இடத்துக்குச் சென்று பார்த்து மக்களிடம் விசாரணை நடத்தியபோது குடியிருப்பின் குறிப்பிட்ட பகுதியில் இரு 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து போலீஸார் தகுந்த பாதுகாப்பு முறைகளோடு அந்த இரு 500 ரூபாய்களையும் எடுத்துச் சென்றனர்.

அதன்பின் அந்த இரு 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது குறித்து உள்ளூர் மருத்துவரிடம் போலீஸார் ஆலோசனை நடத்தினர். அதற்கு 24 மணிநேரத்துக்கு அந்த ரூபாய் நோட்டுகளைத் தொட வேண்டாம், அந்த ரூபாய் நோட்டின் மீது சானிடைசர் தடவி தனியாக வைக்கக் கேட்டுக்கொண்டனர்.
இருப்பினும் ரூபாய் நோட்டுகள் மூலம் கரோனா வைரஸ் பரப்பும் செயல் குறித்து அச்சமடைந்த பேப்பர் மில் காலனி மக்கள் நள்ளிரவிலும் தங்கள் வீட்டின் முன் அமர்ந்து காவல் காத்தனர். நள்ளிரவில் அங்கு வந்த போலீஸார் மக்களைச் சமாதானம் செய்து வீட்டுக்குள் சென்று தூங்குமாறு அறிவுறுத்தினர்.

இதுகுறித்து போலீஸார் ஒருவர் கூறுகையில், 'வாட்ஸ் அப்பில் வந்த வீடியோவைப் பார்த்து மக்கள் பயந்துவிட்டார்கள். அந்த வீடியோவில் ஒருவர் வீட்டில் காலிங் பெல் அடிக்கப்படுகிறது. அந்த வீட்டில் உள்ள சிறுவன் கதவைத் திறந்தபோது வீட்டின் முன 500 ரூபாய் நோட்டு இருப்பதைப் பார்க்கிறார்.

உடனடியாக கதவை மூடிவிட்டு, தனது தாயிடம் தெரிவித்து யாரோ இதை வைத்துள்ளார்கள் எனப் பேசுகிறார். பின்னர் தங்களிடம் இருக்கும் சானிடைசரை ரூபாய் நோட்டு மீது தெளித்து, அந்த ரூபாய் நோட்டை மெல்ல நகர்த்தி, அடுத்த வீட்டின் வாசல் முன் வைத்து விடுகின்றனர். ரூபாய் நோட்டு மூலம் கரோனாவை இப்படியும் பரப்பலாம் என்று அந்த வீடியோ முடிகிறது. இதை ப்பார்த்துதான் அந்த மக்கள் அச்சமடைந்தனர். இன்னும் நாங்கள் கூட அந்த ரூபாய் நோட்டைத் தொடவில்லை' எனத் தெரிவித்தார்.
உண்மையில் ரூபாய் நோட்டுகள் மூலம் கரோனா பரவுமா?
தற்போது வரை, அழுக்கான ரூபாய் நோட்டுகள் வழியே கரோனா வைரஸ் பரவும் என்பதற்கான எந்தவொரு உறுதியான விஞ்ஞான ஆய்வும் இல்லை என்றாலும், உலக சுகாதார அமைப்பு ரூபாய் நோட்டுகளை சரியான பாதுகாப்பான முறைகளில் கையாள நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி கூட ரூபாய் நோட்டு பயன்படுத்துவதைத் தவிர்ப்பது குறித்து எந்தவொரு அறிக்கையையும் வெளியிடாமல் உள்ளது.

அசுத்தமான பண நோட்டுகளைப் பற்றிய இந்தக் கவலைகள் மற்ற நாடுகளிலும் எதிரொலிக்கத்தான் செய்கின்றன. கரோனா பாதித்த சீனாவில் தற்போது புற ஊதா ஒளிக்கதிர் பாய்ச்சுதல், அதிக வெப்பநிலையில் வைத்தல், 14 நாட்களுக்கு நோட்டுகளை தனிமைப்படுத்துதல் மற்றும் இருக்கும் பணத்தை அழித்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம், பணத்தில் உள்ள கிருமிகளை சீன மக்கள் வங்கி நீக்கி வருகிறது. அமெரிக்காவில் சில வங்கிகள், பாதுகாப்பான காகிதப் பயன்பாட்டுக்கு உறுதியளிக்குமாறு, பெடரல் ரிசர்வ் மற்றும் அமெரிக்க கருவூலத்தைக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

m.dailyhunt.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.