Latest News

ரமலானிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமானால் உரிய வழிகாட்டல் படி நடக்க முஸ்லீம் லீக் வேண்டுகோள்

ரமலான் நோன்பு தொடங்கும் நேரத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமானால் தமிழக அரசு தலைமை காஜி, உலமாக்கள் உரிய நேரத்தில் வழங்கும் வழிகாட்டல் படி செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து கே.எம்.காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
'உலகத்தையே பேரிடராக அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய கரோனா வைரஸ் கிருமித் தொற்று பரவாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. அதன்படி நமது இந்திய நாட்டில் மத்திய அரசும், நமது தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளும் இந்த வைரஸ் கிருமித் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

அந்த வரிசையில் இம்மாதம் 14-ம் நாள் வரை நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகும் அது கால நீட்டிப்புச் செய்யப்படலாம் என்றும் பேசப்படுகிறது. அடுத்த சில நாட்களில் முஸ்லிம்கள் புனித ரமலான் மாதத்தை அடையவிருக்கிறார்கள்.

இந்த ஒரு மாதம் முழுக்கவும் பகல் நேரங்களில் - அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்பிலிருந்து சூரியன் மறைவது வரை எதையும் சாப்பிடாமலும், குடிக்காமலும் - பசியோடும், தாகத்தோடும் இருக்க வேண்டியது முஸ்லிம்கள் மீது கடமை.

அந்தக் கடமையை அவர்கள் நிறைவேற்றுவதோடு அம்மாதம் முழுக்க இரவு நேரங்களில் வழக்கத்துக்கும் அதிகமாக தராவீஹ் சிறப்புத் தொழுகை, புண்ணியம் நாடி இஃதிகாஃப் எனும் - பள்ளியில் தரித்திருத்தல் உள்ளிட்ட வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுவர். அத்தோடு எல்லா நாட்களிலும் பசியோடு இருப்பவர்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்க தான தர்மங்களும் செய்வர்.

இந்த வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கு பள்ளிவாசல்களும், பெண்கள் தைக்காக்களும் செயல்களமாக இருந்து கொண்டிருக்கின்றன. இப்போது பேசப்படுவது போல ஊரடங்கு மேலும் கால நீட்டிப்புச் செய்யப்படுமானால் இந்த வழமையான வணக்க வழிபாடுகளைச் செய்வதில் பெரும் சிரமம் இருக்கும்.

பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்தித்து வருகிற போதிலும் நம் தமிழக மக்கள் - குறிப்பாக நம் சமுதாய மக்கள் நமது மத்திய - மாநில அரசுகள் இந்த வைரஸ் கிருமித் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மனதார முழு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருப்பதை அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

நமக்குப் பல்வேறு சிரமங்கள் இருக்கின்ற போதிலும், "மக்கள் நலன் கருதி அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது நம் கடமை" என இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான உலமா பெருமக்களும், மஹல்லா ஜமாஅத்களின் நிர்வாகிகளும், சமுதாய புரவலர்களும், சான்றோர்களும், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகளும் மக்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்திக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

மக்களும் அதை ஏற்றுச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுவரை எப்படி நாம் கட்டுக்கோப்பாக இருந்து இந்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்து கொண்டிருக்கின்றோமோ அதே ஒத்துழைப்பை இனிவரும் காலங்களிலும் நாம் அளித்திட வேண்டும் என சமுதாய மக்களுக்கு நான் பணிவோடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்த கரோனா வைரஸ் கிருமி பரவல் விரைவில் முடிவுக்கு வந்து, அதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் திரும்பப் பெறப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவாகத் திரும்ப எல்லாம் வல்ல இறைவன் நல்ல சூழலை அமைத்துத் தரவேண்டும் என இந்த நேரத்தில் நாம் உளமாரப் பிரார்த்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அதே நேரத்தில் இந்த ஊரடங்கு மேலும் கால நீட்டிப்பு செய்யப்படுமானால், நபிகள் நாயகம் அவர்களது காலத்தில் ரமலான் சிறப்பு வணக்க வழிபாடுகள் வீடுகளிலும் நடைபெற்றுள்ளன என்ற வரலாற்றுச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, பள்ளிவாசல்களைத் தவிர்த்து - அவரவர் வீடுகளில் அரசு வழிகாட்டியுள்ள படி சமூக இடைவெளியைக் கடைபிடித்து, வணக்க வழிபாடுகளைச் செய்து கொள்ள வேண்டிய சூழலில் நாம் இருக்கின்றோம் என்பதையும் கடமை உணர்வோடு இங்கே நினைவூட்டிக் கொள்கிறேன்.

தமிழக அரசின் தலைமை காஜியும், சங்கைக்குரிய உலமா பெருமக்களும் உரிய நேரத்தில் அதற்கான அறிவிப்பையும், வழிகாட்டலையும் வழங்குவார்கள். அதை ஏற்றுச் செயல்பட வேண்டும் என உங்களை நான் அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

அரசின் அறிவிப்புகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியையும், அரசிடம் ஏதேனும் முறையீடுகள் இருந்தால் அதை மக்களிடமிருந்து பெற்று அரசிடம் சேர்க்க வேண்டிய பணியையும் இந்தக் குழுவினர் செய்து வருகிறார்கள்; இனியும் செய்வார்கள். இந்தக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது சமுதாயத்தின் கடமையாக உள்ளது.

இப்போது நம்மை ஆட்கொண்டிருக்கும் இந்தப் பேரிடர் காலாகாலத்திற்கும் நீடித்து விடும் என்று யாரும் அச்சப்படத் தேவையில்லை. எந்த இடரும் எல்லாக் காலமும் நீடிப்பதில்லை. அதுபோலவே இந்த கொரோனா வைரஸ் பரவலும் கொஞ்ச காலம் ஆடி விட்டு அகன்று விடும். எனவே யாரும் அச்சப்படத் தேவையில்லை.

நம் இந்திய மக்கள் - குறிப்பாக நம் தமிழக மக்கள் எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்பவர்கள். எல்லோருக்கும் வழங்கி வாழ்பவர்கள். எல்லோரோடும் இணங்கி வாழ்பவர்கள். அவனன்றி அணுவும் அசையாது என்ற ஆழமான நம்பிக்கையைக் கொண்டுள்ள நம்மை எந்தப் பேரிடரும் அண்டாது என்ற நல்ல நம்பிக்கையைக் கொண்டவர்களாக நாம் நமது இயல்பு வாழ்க்கையைத் தொடர்வோம். அதற்கான காலம் விரைவில் நம்மை வந்தடையும்.

"விழிப்போடு இரு! வீட்டிலேயே இரு! விலகி இரு!" ஆகிய முழக்கங்களை முன்வைத்து, தமிழக முதல்வர் அவர்கள் நம் மக்களை ஒத்துழைக்கக் கோரியிருக்கிறார். நாமும் ஓத்துழைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் அரசு அலுவலர்கள் வீடு வீடாக அனுப்பி, சுகாதார கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.

அவ்வாறு கணக்கெடுக்கும்போது உடல் நலன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் வீட்டிலிருந்தபடியே மருந்துகளை உட்கொண்டு ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிவகைகளையும் அரசு செய்து கொண்டிருக்கிறது. இதை நாங்கள் உளமார வரவேற்கின்றோம். இப்படியான பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது மக்களின் கடமை என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த விஷக்கிருமி பரவலில் இருந்து அனைவரும் மீண்டெழுந்து, முன்பை விட வளமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் நல்ல சூழலை எல்லாம் வல்ல இறைவன் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கி அருள வேண்டும் என உளம் உருக பிரார்த்திக்கிறேன்'.

இவ்வாறு கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.