Latest News

மகாராணியாக இருந்தாலும் நாங்கள் உதவுவதை தடுக்க இயலாது...
பிரிட்டனுக்கு அருகில்  அமைந்திருக்கும் அயர்லாந்தை 1845 இல் பெரும் பஞ்சமும் கொள்ளை நோயும் தாக்கியது.அதை உருளைக் கிழங்கு பஞ்சம் என்றும் சொல்லுவார்கள்.

அயர்லாந்து விவசாயிகளிடம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உருளைக் கிழங்கை உயர்குடி மக்களின் உணவு என்றும் அதிகமான இலாபத்தை தரும் பயிர் என்றும் வஞ்சகமாக பேசி வலையில் சிக்க வைத்தனர்.

பலவகையான உணவுப் பயிர்கள் பயிரிடப்பட்ட அயர்லாந்தின் நிலங்களில் உருளைக்கிழங்கை பெருமளவில் பயிரிட்டு அதையே மக்களின் முதன்மை உணவாக உட்கொள்ள நிர்ப்பந்தித்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.

ஒற்றைப்பயிர் சாகுபடியால் மண்ணில் ஏற்பட்ட மலட்டுத் தன்மை மற்றும் பல்வேறு காரணங்களால் கடும் பஞ்சமும் கொள்ளை நோய்களும் அயர்லாந்தை சூழந்தது.

👉 கொள்ளை நோயும்  கொடும்பஞ்சமும் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிள்ளைகள் என்பதை எப்போதும் நாம்  மறந்து விடக் கூடாது.

அயர்லாந்தின் பஞ்சத்திலும் அடுத்து தாக்கிய காலரா பெரியம்மை குளிர்காய்ச்சல் போன்ற வைரஸ் நோய்களாலும் ஏறக்குறைய 15 இலட்சம் மக்கள் மாண்டு போயினர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வேடிக்கை பார்த்துக் கொண்டே அயர்லாந்தில் மிச்சம் மீதி இருந்த தானியங்களையும்  கொள்ளையிட்டுக்  கொண்டு சென்றது. 

ஏறக்குறைய 20 இலட்சம் மக்கள் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு உயிர்பிழைக்க ஓடினர். உலகம் முழுவதும் அயர்லாந்து மக்களுக்கு உதவிட அன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அயர்லாந்தில் விளைந்த அனைத்தையும் சுருட்டிக்கொண்டு பஞ்சத்தை முன்னின்று உண்டாக்கிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ராணி விக்டோரியா அம்மையார் வெறும் 2000 பவுண்டுகள் மட்டுமே உதவித்தொகை அறிவித்தார்.

துருக்கி உதுமானிய கிலாஃபாத்தின் கலீஃபா அப்துல் மஜீத் அவர்களுக்கு செய்தி வருகிறது. அயர்லாந்து மக்களின் பஞ்சம் போக்க 10,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் உதவித் தொகையாக அறிவித்தார். விக்டோரிய மஹாராணி ஆடிப்போய்விட்டார்.

உடனே உதுமானிய கிலாஃபத்தின் தலைநகர் கான்ஸ்டான்ட்டி நோபிளில் பிரிட்டிஷ் பேரரசின் தூதராக இருந்த ஹென்றி வெல்லஸ்லி கலீஃபாவிடம் சென்று மகாராணியை விட நீங்கள் கூடுதலாக அறிவிக்க கூடாது அதில் பாதியை மட்டும் அறிவியுங்கள் என்று அழுத்தம் கொடுத்தார் .

உதுமானிய கலீஃபா அப்துல் மஜீத் அவர்களும் ஆரம்பத் தொகையாக 1000 ஸ்டெர்லிங் பவுண்டுகளை அனுப்பிவிட்டு பிரிட்டிஷ் கடற்படைக்கு தெரியாமல் 3 பெரிய கப்பல்களில் உணவுப் பொருட்கள் மருந்து பணம் ஆகியவற்றை  அயர்லாந்து மக்களுக்கு அனுப்பி வைத்தார்.

மக்கள் பசிபட்டினியால் மடிந்து கொண்டிருந்த நேரத்தில் துருக்கிய கப்பல்கள் அயர்லாந்தின் ட்ராகேதா (Drogheda) துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தன. ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. பெண்கள் பிள்ளைகள் ஆனந்தம் அடைந்தனர். அதன் உச்சமாக துருக்கிய மாலுமிகளை ஐரிஷ் இளம் பெண்கள் பலர் திருமணம் செய்ய முன்வந்தனர். மாலுமிகள் அதற்கு மட்டும் மறுக்கவே யில்லை.உடனே ஓகே சொல்லி திருமணம் செய்துகொண்டனர் .  

உயிர்காத்து உதவிய கலீஃபா அப்துல் மஜீத் அவர்களுக்கு அயர்லாந்து மக்களிடமிருந்து  ஏராளமான பாராட்டுக் கடிதங்கள் வந்து குவிந்தன.

Freeman’s Journal என்ற அயர்லாந்தின் பழம்பெரும் இதழில்....
 " அவர் முஹம்மதின் கொள்கையில் பிடிப்புள்ள மனிதாபிமானம் கொண்ட கொடையாளி. கிறிஸ்துவைப் பின்பற்றுபவரின் உண்மையான மனப்பான்மையுடன் செயல்பட்டார், மேலும் கிறிஸ்தவர்கள் எனக் கூறும் பலரும் பின்பற்றுவதற்கு ஒரு நல்ல முன்மாதிரி " என்று எழுதியது.

இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து உதுமானிய நிலப்பரப்பின் வடகிழக்குப் பகுதியான கிரீமியாவில் ரஷ்யாவின் படையெடுப்பை தடுப்பதில் உதுமானிய இராணுவத்துடன் துணை நின்ற பிரிட்டிஷ் படையில் அயர்லாந்தைச் சேர்ந்த செவிலியர்கள் பொறியாளர்கள் படைவீரர்கள் என்று 30 ஆயிரம் பேர் தன்னார்வத்துடன் பங்கேற்று தங்களது நன்றிக் கடனை செலுத்தினர்.

அதோடு விட்டார்களா அயர்லாந்து வாசிகள் உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலத்தில் கலீஃபாவின் உதவிப்பொருட்கள் வந்திறங்கிய அயர்லாந்தின் துறைமுக நகரான ட்ராகேதா (Drogheda) நகரின் கொடியிலும் கால்பந்து அணியின் சின்னத்திலும் சிலுவையுடன் உதுமானிய பேரரசின் சின்னமான செம்பிறையை இணைத்து இருதரப்பு உறவுகளையும் வலிமைப் படுத்தியுள்ளனர். 

உதுமானிய கிலாஃபத் 1924 இல் காணாமல் போனபிறகும் இன்று வரை துருக்கியோடு அயர்லாந்து மக்களும் அரசும் இணைந்து நிற்கின்றனர்.

நிர்கதியாக நிற்கும் உயிர்களுக்கு செய்யும் உதவிகளுக்கு பிரதிபலனை எதிர்பார்ப்பது முஸ்லிம்களின் இயல்பாக ஒருக்காலும் இருக்க முடியாது.ஆனால் பிறர் செய்த உதவிகளுக்கு என்றென்றும் நன்றியோடு இருப்பது முஸ்லிம்களின் இயல்பாகவே இருத்தல் வேண்டும் என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு.

- CMN SALEEM
------------------------------------------ 
Sources: Christine Kinealy, Charity and the Great Hunger in Ireland: The Kindness of Strangers (New York: Bloomsbury, 2013), 115-119. | David Murphy, “Ireland and the Crimean War 1854-6,” History Ireland 11 (2003), 34-38.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.