Latest News

பந்தலூர், கூடலூர் மக்களுக்கு கேரள மருத்துவமனைகளில் சிகிச்சை: கேரள முதல்வரின் அறிவிப்பால் தமிழர்கள் நிம்மதி

பந்தலூர், கூடலூர் பகுதி மக்கள் கேரள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளது இப்பகுதி மக்களை ஆறுதல்படுத்தியிருக்கிறது.

தமிழகத்துக்குள் தொலைவு அதிகம்
தமிழக- கேரள எல்லைகளிலேயே மிகவும் சிக்கலான பகுதியாகக் கருதப்படுவது கூடலூர், பந்தலூர் பகுதிகள்தான். சுமார் 2.5 லட்சம் மக்கள்தொகை கொண்ட இப்பகுதியில் தாலுகா மருத்துவமனை உண்டு. கூடலூரைப் பொறுத்தவரை ஒரு ஐசியூவில் 2 வென்டிலேட்டர் கொண்ட படுக்கை வசதி உள்ளது. கரோனா அறிகுறி இருப்பவர்களுக்கான சிறப்பு வார்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கால், கை முறிவு மற்றும் இதர நோய்களுக்கான மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள், தமிழகப் பகுதியிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்பினால், இங்கிருந்து 60 - 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊட்டிக்குத்தான் செல்ல வேண்டும். கோவையைப் போல பெரிய மருத்துவமனைகள் ஊட்டியில் இல்லை. பழைய கட்டிடம், பழைய படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனைதான். தவிர, அங்கு நிலவும் குளிர் கூடலூர், பந்தலூர்வாசிகளுக்கு ஒத்துக்கொள்ளாது.

பாகுபாடின்றி சிகிச்சை
எனவே, மேலும் 100 கிலோ மீட்டர் பயணித்து கோவைக்குத்தான் அவர்கள் வர வேண்டும். 6-7 மணி நேர மலைப்பயணம் என்பதால் பலரும் இதைத் தவிர்த்துவிடுகிறார்கள். அதற்குப் பதிலாகக் கேரளத்தில் உள்ள மருத்துவமனைகளுக்குத்தான் செல்கிறார்கள். குறிப்பாக, கூடலூருக்கு அருகில் (45 கிலோ மீட்டர்) உள்ள சுல்தான் பத்தேரி மருத்துவமனையில், மாநிலப் பாகுபாடின்றி எல்லோருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து உள்ளது மேம்பாடி மருத்துவமனை. இது கூடலூரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அரப்பெட்டா என்ற எஸ்டேட்டில் உள்ளது. இது கோவை அரசு மருத்துவமனை போல பெரிய மருத்துவமனை. சிகிச்சைக்குப் பெரிய செலவும் ஆகாது. தவிர, வயநாடு கல்பெட்டாவில் உள்ள மருத்துவமனை, பெருந்தலமன்னா இ.எம்.எஸ். மருத்துவமனை போன்றவையும் பந்தலூர், கூடலூர்வாசிகளுக்குக் கைகொடுக்கின்றன. பெருந்தலமன்னாவில் இ.எம்.எஸ். மருத்துவமனையைத் தவிர தனியார் மருத்துவமனைகள், ஆயுர்வேத மருத்துமனைகளும் உண்டு. கோவையை ஒப்பிட்டால் இங்கே 10- 20 மடங்கு மருத்துவச் செலவும் குறைவு என்கிறார்கள்.

கைகொடுத்த கேரளம்
மருத்துவச் சிகிச்சையைப் பொறுத்தவரை கூடலூர், பந்தலூர் மக்கள் வழக்கமாக இப்படியே பழகிவிட்டனர். இப்போது கரோனா வைரஸ் தாக்குதலால் மாநில எல்லைகள் அடைக்கப்பட்டுவிட்டன. இங்கிருந்து அந்தப் பக்கமும், அங்கிருந்து இந்தப் பக்கமும் நடைபயணமாகக்கூட யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. உணவுப் பொருட்களைக் கொண்டுவரும் வாகன ஓட்டிகள் மட்டும் காய்ச்சல் சோதனை செய்யப்பட்டு 

அனுமதிக்கப்படுகிறார்கள். அதனால் இங்கிருந்து கேரளத்துக்குச் செல்லும் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கேரள முதல்வரின் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் சிலர் கூறுகையில், 'கேரள முதல்வரின் அறிவிப்பு இன்னமும் இங்கே நடைமுறைப்படுத்தப்படவில்லை. எல்லையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு உள்ளூரில் உள்ள கூடலூர், பந்தலூர் பிளாக் மருத்துவ அதிகாரியிடம் அனுமதிக் கடிதம் பெற்று வரச் சொல்கிறார்கள். என்ன நோய், கரோனா தொற்று அறிகுறி இருக்கிறதா என்பதையெல்லாம் குறிப்பிட்டு அவர்கள் அனுமதிக் கடிதம் கொடுத்தால்தான் நாங்கள் கேரளத்திற்குள் நுழைந்து சிகிச்சை பெற முடியும். அநேகமாக ஓரிரு நாட்களில் இதற்கான வழி பிறக்கும் என்று நம்புகிறோம்' என தெரிவித்தனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக, கேரளத்தில் கூலித் தொழில் செய்துவந்த தமிழர்கள் சிக்கித் தவிப்பதாக வெளியான செய்திகள் அதிருப்தியளித்திருந்த நிலையில், சிகிச்சைக்காக வருபவர்களுக்காகக் கேரள எல்லையைத் திறந்திருக்கும் முதல்வர் பினராயி விஜயனின் முடிவு, எல்லையில் வசிக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.