
கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்
நிலையில் மாநில அரசுகள் இந்நோய்த் தடுப்பு உபகரணங்களான முககவசம்,
வெண்டிலேடர், கையுறை போன்றவற்றைத் தன்னிச்சையாகக் கொள்முதல் செய்யக் கூடாது
என மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று மனித நேய
மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
நாட்டில்
கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்
மாநில அரசுகள் இந்நோய்த் தடுப்பு உபகரணங்களான முககவசம், வெண்டிலேடர்,
கையுறை போன்றவற்றைத் தன்னிச்சையாகக் கொள்முதல் செய்யக் கூடாது என மத்திய
அரசு அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கும் அரசியல் அமைப்பு சாசனத்திற்கும் எதிரானது.
நமது
அரசியல் சட்ட சாசன ஏழாவது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரங்களில் பொதுச்
சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில்
பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ஐ காரணம் காட்டி இந்திய அரசியல் அமைப்புச்
சட்டத்தைப் புறந்தள்ளுவது மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் செயலாகும்.
கொரோனா
பரவலை தடுக்க தேவையான மருத்துவ உபகரணங்களை மத்திய அரசு மட்டுமே கொள்முதல்
செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்கும் என்ற அறிவிப்பு சர்வாதிகார
செயலாகும்.
கொரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் மத்திய அரசால் சரிவர
விநியோகிக்கப்படாத நிலையில், கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களான மராட்டியம்
மற்றும் தமிழ்நாடு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்
மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அந்நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
உலகளவில்
கொரோனா வைரசை எதிர்த்துப் போர் வீரர்களாக பணியாற்றும் மருத்துவர்கள்,
செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு
உபகரணங்களை அளிக்காவிட்டால் இந்த வைரஸ் போரில் பல மருத்துவர்களை இழக்க
நேரிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
எனவே, மாநில அரசின்
மருத்துவ உபகரண கொள்முதல் தடையை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென மத்திய
அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
பெரும்
நிறுவனங்கள் சமூக கடமை (சிஎஸ்ஆர்) திட்டத்தின் கீழ் மாநில
முதலமைச்சர்களின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கக் கூடாது என்றும்
பிரதமரின் நிதிக்கு மட்டுமே அளிக்க வேண்டுமென்றும் அறிவித்திருப்பது மத்திய
அரசின் எதேச்சதிகார நடவடிக்கையாக அமைந்துள்ளது. அனைவரும் சேர்ந்து
கொரோனாவிற்கு எதிராக பாடுபட்டு கொண்டிருக்கும் போது மாநில அரசுகளின்
உரிமைகளை நசுக்குவது வன்மையான கண்டனத்திற்குரிய நடவடிக்கை ஆகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment