
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர்
சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் கோடை காலத்தில் காய்கறி வகைகளை
பயிரிட்டு வருகின்றனர். பாகற்காய், புடலங்காய், பூசணி போன்ற கொடி காய்கறி
வகைகள், பீன்ஸ், பயறு வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை கோடை
காலத்தில் இப்பகுதியில் பயிரிடப்படுகின்றன.
இந்த வருடம் விளைச்சலும் நல்லபடியாக உள்ளதால் உற்பத்தி அதிகரித்து உள்ளது. ஆனால் தங்கள் செலவு செய்த தொகைக்கு ஏற்ப உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இங்கு உற்பத்தியாகும் பெரும்பாலான காய்கறி வகைகள் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக வியாபாரிகளால் வாங்கி செல்லப்படுகிறது. கேரளாவில் காய்கறிகளுக்கு நல்ல கிராக்கி இருந்தும் விவசாயிகளுக்கு குறைந்த விலையையே வியாபாரிகள் வழங்குவதாகவும், விவசாயிகளிடம் உற்பத்தியாகும் காய்கறிகளை தோட்டக்கலைத்துறையினர் சந்தைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால், கேரளா வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் கொடுப்பதாக தெரிவித்தனர். மேலும் தாங்கள் செலவு செய்த தொகை திரும்பக் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் விவசாயிகள் உள்ளனர். கொரோனா பீதிக்கு முன்பாக ஒரு கிலோ பாகற்காய் ரூ.40 முதல் ரூ.45 வரை விலைக்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது கிலோ ரூ.10 முதல் 15 வரையே கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு விசு பண்டிகை காலத்தில் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைத்து வந்த நிலையில், இந்த வருடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக போதிய விலை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment