Latest News

சென்னையிலிருந்து நெல்லைக்கு சைக்கிளில் வந்து சேர்ந்த பெரியவர் !! 15 நாட்கள் ஊர் எல்லையில் தனிமை !!

நாங்குநேரி அருகில் உள்ள தெய்வநாயகப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (73). கேரள மாநிலம் சங்கனாச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் கணக்காளராக உள்ளார். கொரோனா வைரஸ் கிளம்புவதற்கு முன்பே சென்னையில் தனது மகனின் வீட்டுக்குச் சென்ற பாண்டியன், திடீர் பொது முடக்கத்தால் அங்கேயே முடங்கினார்.

பாண்டியனுக்கு சென்னை வாழ்க்கை சலிப்பைத் தட்டியது. சொந்த கிராமம் வருவதற்கு இ-பாஸ் எடுக்கும் வழிமுறைகளும் அவருக்குத் தெரியவில்லை. அதனால் தனது பேரனின் சைக்கிளை எடுத்துக் கொண்டு நெல்லைக்குக் கிளம்பிவிட்டார் பாண்டியன்.

இதுகுறித்து பாண்டியன் கூறுகையில், எனக்கு இரண்டு பசங்க. அதில் மூத்தவன் கத்தார் நாட்டுல இருக்கான். இளையவன் சென்னையில் வேலை செய்யான். தாம்பரத்துல அவன் வீடு இருக்கு. அங்கதான் என் வீட்டம்மாவும் இருக்கு. இளையவனுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு போன் வந்துச்சு.

மனசு கேட்காம கேரளாவுல இருந்து பஸ் புடிச்சு நேரா சென்னைக்குப் போனேன். பையனைப் பார்த்துட்டுக் கிளம்ப இருந்தப்போதான் ஊரடங்கு வந்துடுச்சு. நாலு சுவத்துக்குள்ள எத்தனை நாளுதான் கிடக்கது. நான் கிராமத்து ஆளு.

நமக்கு இந்த வாழ்க்கை செட்டாகல. ஆனாலும், நாலு மாசத்த ஓட்டியாச்சு. பசங்க ரெண்டு பேருகிட்டயும் ஊருக்குப் போறேன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன். மூத்தவன் வெளிநாட்டுல இருந்து பணம் அனுப்புனான். போன மாசம் 23-ம் தேதி, திண்டிவனத்துல இருந்து திருநெல்வேலிக்கு ஒரு பஸ் போகுதுன்னு சொன்னாங்க.

உடனே பேரனோட சைக்கிளை எடுத்துட்டுத் திண்டிவனத்துக்கு 90 கிலோ மீட்டர் சைக்கிள்லயே போனேன். ஆனா அங்க போனா சைக்கிளை ஏத்தமுடியாதுன்னு சொன்னாங்க. கூடவே விழுப்புரம் போனா சைக்கிளை ஏத்துறமாதிரி பஸ் கிடைக்கும்னு சொன்னாங்க.

சைக்கிள்லயே விழுப்புரம் வந்தேன். அங்கயும் பஸ் கிடைக்கல. வயசாளி ஒருத்தன் சைக்கிள்லயே வர்றதையும், பஸ்ஸுக்குத் தவிக்குறதையும் பார்த்துட்டு முகம் தெரியாத யாரோ ஒருத்தர் எனக்கு 50 ரூபாயும், தண்ணீர் பாட்டிலும் தந்தாரு.

நெசமாவே என்கிட்டக் காசு இருக்குன்னு சொல்லியும் கேட்கல. அப்டியே சைக்கிள மிதிச்சு உளுந்தூர்பேட்டை வரை வந்தேன். அங்க இருந்த டோல்கேட்ல ஒரு ஓட்டல் இருக்கு. அது எங்க நாங்குனேரிக்காரர் ஜெயராமன்னு ஒருத்தரோடது. அவரு என்னை அடையாளம் கண்டுக்கிட்டாரு. எங்கப்பா நிறைய சமூக சேவை செய்வாரு. அதுனால ஊருல அவரை காமராஜர்னு கூப்பிடுவாங்க. அடடே...

காமராஜ் அய்யா பிள்ளைல்ல நீங்க... ஏன்யா உங்களுக்கா இந்த நிலமை, இப்படி சைக்கிளில் வர்றீங்களேனு பதறுனாரு. நான் சிட்டி வாழ்க்கை பிடிக்காம நம்ம ஊரைத்தேடிப் போறேன்யான்னு என்னோட நிலமையைச் சொன்னேன். சாப்பிடச் சொன்னாரு. ஒரு காபி மட்டும் குடிக்கேன்னு குடிச்சேன். நான் கிளம்பும்போது ஆயிரம் ரூபாயைத் தந்துட்டாரு.

அப்புறம் ஒரு காய்கறி வண்டியில் நானும், சைக்கிளுமா திருச்சி வரை வந்தோம். அங்கிருந்து கிளம்பி, வழியில விராலிமலையில் ஒரு டீக்கடையில் டீ குடிச்சு, பிஸ்கட் சாப்பிட்டேன். டீக்கடைக்காரர் காசு வாங்கல.

இந்தக் கொரோனா நேரத்துலயும் இப்படி வழிநெடுக, உதவி கிடைச்சுட்டே இருந்துச்சு. மதுரை, விருதுநகர் பக்கம் வரும்போதெல்லாம் நல்ல மழை. திருநெல்வேலி புதுபஸ் ஸ்டாண்டில் வந்து படுத்துட்டு, காலையில் எங்கூருக்குக் கிளம்பினேன்" என மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார்.

தினமும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து, சைக்கிள் மிதிக்க ஆரம்பித்துவிடும் பாண்டியன், இரவு 7 மணிக்கு மேல் சைக்கிள் ஓட்டுவதில்லையாம். ஊர் எல்லையில் இருக்கும் சுடலைமாட சுவாமி கோயிலிலேயே 15 நாள்கள் தங்கி இருந்து தனது சுய தனிமைப்படுத்துதலையும் முடித்துக் கொண்டவர் இன்று தனது சொந்த வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். ஆனா ஒண்ணு தம்பி... ஆயிரம்தான் சொன்னாலும் இந்த உலகத்துல நல்ல மனசுக்காரங்களும் நிறையப் பேர் இருக்கத்தான் செய்யுறாங்க என்றார்.
Newstm.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.