
திருச்சி மாநகர அதிமுகவில் புதிதாக 50 ஆயிரம் உறுப்பினர்களைச்
சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், புதிதாக சேரக்கூடிய
இளைஞர்களுக்கு அதிமுக ஐ.டி. பிரிவில் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்
முன்னாள் எம்.பி. ப.குமார் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில்
2021-ம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, கரோனா
தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுடன் தேர்தலைச் சந்திப்பதற்கான பூர்வாங்க
நடவடிக்கைகளிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தற்போது
ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அதிமுகவில் இளைஞர் அணி மற்றும்
தகவல் தொழில்நுட்ப அணியை மேலும் வலுப்படுத்தவும், மாவட்டந்தோறும் புதிய
உறுப்பினர்களைச் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, திருச்சி மாநகர் மாவட்டத்தில் புதிய
உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கும் நிகழ்ச்சி
சுப்பிரமணியபுரத்திலுள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இன்று (ஜூலை
11) நடைபெற்றது.
மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான
ப.குமார் தலைமை வகித்து அனைத்துப் பகுதி, வட்ட நிர்வாகிகளிடம் விண்ணப்பப்
படிவங்களை வழங்கினார்.
பின்னர் ப.குமார் கூறும்போது, "திருச்சி
மாநகர் மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி இன்று
தொடங்கியுள்ளது. புதிய வாக்காளர்கள், சமூக வலைதளங்களில் ஆர்வத்துடன்
செயல்படுவோர், எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லாத இளைஞர்கள், அதிமுக
அனுதாபிகள் என முதற்கட்டமாக 50 ஆயிரம் பேரைக் கட்சியில் இணைக்க முடிவு
செய்துள்ளோம்.
இதற்காக கட்சியின் பகுதி, வட்ட நிர்வாகிகளிடம் 2,000
படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படிவத்திலும் தலா 25 உறுப்பினர்களைச்
சேர்க்கலாம். இன்னும் 10 நாட்களுக்குள் இப்பணிகள் நிறைவு பெறும். தகவல்
தொழில்நுட்ப அணிக்கு ஒன்றிய, பகுதி, வட்ட, கிளை அளவில் நிர்வாகிகள்
நியமிக்கப்பட உள்ளனர். எனவே, அதிமுகவில் புதிதாகச் சேரக்கூடிய ஆர்வமுள்ள
இளைஞர்களுக்கு இப்பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது" என்றார்.
No comments:
Post a Comment