
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் எட்டு போலீசாரை
சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரவுடி விகாஸ்
துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை.
கடந்த வாரம் ஜூலை 2ம்
தேதி நள்ளிரவில் உத்தரப்பிரதேச போலீசார் 60 குற்றச் செயல்களில் தொடர்புடைய
விகாஸ் துபேவை கைது செய்ய சென்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே
நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த
சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால்
உத்தரபிரதேச போலீசார் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி
போலீசார் ஆகியோர் இணைந்து ரவுடி விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை
கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் விகாஸ் துபேவின் கூட்டாளிகள் ஒவ்வொருவராக என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில்
உத்தரபிரதேச மாநிலம் ஃபாரிதாபாத்தில் பதுங்கியிருப்பதாக கூறப்பட்ட விகாஸ்
துபே அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். மேலும் போலீசார் டெல்லி மற்றும்
ஹரியானா மாநில எல்லைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் விகாஸ் துபே
உத்தரப்பிரதேசத்திலிருந்து மத்திய பிரதேசத்திற்கு தப்பிச் சென்றார்.
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில்
நேற்று நள்ளிரவு மத்தியபிரதேசத்தில் இருந்து சாலை வழியாக உத்தரபிரதேசம்
நோக்கி போலீசார் ரவுடி விகாஸ் துபேயுடன் வந்து கொண்டு இருந்தனர். அவர்கள்
கான்பூர் அருகே வரும்போது போலீசாரின் வாகனம் ஒன்று விபத்தில் சிக்கி
கவிழ்ந்துள்ளது. இதில் காவலர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக
கூறப்படுகிறது. இந்த அசாதரணமான சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விகாஸ்
தப்பிக்க முயன்றதாக போலீஸ் அதிகாரி அனில் குமார் தெரிவித்துள்ளார். மேலும்
காயமடைந்த காவலரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துக்கொண்டு போலீசாரை நோக்கி
விகாஸ் துபே சுட்டதாகவும், அதனால் தற்காப்புக்காகவே போலீசார் பதில்
தாக்குதல் நடத்தி விகாஸ் துபேவை சுட்டுக்கொன்றதாக அவர் தெரிவித்தார்.
இந்த
என்கவுண்டர் குறித்து ட்விட்டரில் பதிவுசெய்துள்ள சமாஜ்வாடி கட்சியின்
தலைவர் அகிலேஷ் யாதவ், எந்த பெயரையும் குறிப்பிடாமல், கார் கவிழவில்லை,
ஆனால் மாநில அரசு கவிழ்வதில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது என்றும் பல
ரகசியங்கள் வெளிவராமல் தடுக்கப்பட்டுள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்.
மேலும்
இந்த என்கவுண்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி,
குற்றவாளி இறந்துவிட்டான், ஆனால் அவனை காப்பாற்றியவர்களை என்ன
செய்யப்போகிறீர்கள் என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment