
சண்டிகர்: கரோனா தொற்றை எதிர்க்கக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்
மருந்தான கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடைமுறை
தொடங்கியிருப்பதாக ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகம்
முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும்
நிலையில், அதற்கான தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து ஆய்வு
செய்யும் பணிகளில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து தற்போது மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது.
இது
குறித்து ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தனது சுட்டுரைப்
பக்கத்தில் கூறியிருப்பதாவது, கரோனா தொற்றை ஒழிக்கக்
கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோவாக்சின் (Covaxin) மருந்து பரிசோதனையின்
உச்சக்கட்டத்தில் உள்ளது.
ரோஹ்தக்கில் உள்ள பிஐஜி மையத்தில் கோவாக்சின் மருந்து
இன்று மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது. இதற்காக மூன்று பேர்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்று பேருக்கும் கோவாக்சின் மருந்து
செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பு மருந்தை அவர்களது உடல் ஏற்றுக் கொண்டுள்ளது.
அந்த மருந்து இதுவரை எந்த விதமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்று
தெரிவித்துள்ளார்.
கோவக்சின் மருந்தை மனிதர்களிடம் செலுத்தி
பரிசோதிக்கும் முயற்சியை பிஜிஐஎம்ஸ் மையம் கடந்த 10 நாள்களுக்கு முன்பு
தொடங்கியது. இதற்காக சுமார் 100 பேர் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர்.
அவர்களில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, இன்று அவர்களுக்கு கோவாக்சின்
மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.
இந்தியாவில்
முதல்முறையாக கரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி ஒன்று
உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய
வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பாரத்
பயோடெக் நிறுவனம், 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை உருவாக்கியது.
தொடர்ந்து,
இதனை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்த இந்திய மருந்துகள் தரக்
கட்டுப்பாட்டு அமைப்பு ஜூன் மாத இறுதியில் ஒப்புதல் தெரிவித்தது.
உலக
நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடாகத் திகழும்
இந்தியா, இந்த சோதனையிலும் வெற்றி பெறும் பட்சத்தில் கரோனாவை ஒழிப்பதில்
முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment