
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வர்த்தக
நகரம், தொழில் நகரம், கோவில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தை
தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கடந்த சில
ஆண்டுகளாக பொதுமக்கள், வணிகர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் அரசுக்கு
பலமுறை கோரிக்கை அளித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்
தொடரிலும் கும்பகோணம் மாவட்டமாக அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்த்து
வருகின்றனர்.
ஆனால் இதுவரை அவ்வாறு
அறிவிக்கப்படாததால் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி கும்பகோணம்,
திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட வருவாய் வட்டங்களை ஒன்றிணைத்து
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன..
முதல்கட்டமாக தனிமாவட்டம் கோரி
கும்பகோணத்திலிருந்து ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் முதலமைச்சரின் கவனத்தை
ஈர்க்கும் வகையில் அனுப்பப்பட்டது. இரண்டாம் கட்டமாக திருவிடைமருதூர்
பகுதியிலிருந்து ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் முதலமைச்சருக்கு
அனுப்பப்பட்டது. மூன்றாம் கட்டமாக பாபநாசம் பகுதியில் இருந்து அஞ்சல்
அட்டைகளை அனுப்பப்பட்டன. பின்பு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இதனைத்
தொடர்ந்து கும்பகோணம் காந்தி பார்க் அருகில் உண்ணாவிரத போராட்டம்
அறிவிக்கப்பட்டது, ஆனால் கொரோனா நோய் பரவும் அபாயம் உள்ளதால் உண்ணாவிரதத்தை
கைவிட வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில், போராட்டம்
கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று கும்பகோணம், பாபநாசம்,
திருவிடைமருதூர் போன்ற பகுதிகளில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட
கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க
வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment