
டெல்லியில் 52 வயதுடைய பெண் ஒருவர் நடக்க முடியாத நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வயிற்றில் 50 கிலோ கட்டி இருந்ததை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின்னர் பல மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு கட்டியை நீக்கியுள்ளனர். இப்போது அந்த பெண் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் வசித்து வரும் 52 வயதான பெண்ணுக்கு கடந்த சில மாதங்களாக உடல் எடை அசுர வேகத்தில் அதிகரித்து வந்துள்ளது. 108 கிலோ வரை அவர் உடல் எடை அதிகரித்துள்ளது. இதனால் நடக்க முடியாமல் போன அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அவர் பரிசோதனைக்கு வரும் போதே முச்சு விடுவதிலும் சிரமப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் பேசுகையில், "அந்த பெண்ணின் வயிற்றில் 50 கிலோ கட்டி இருந்ததால், அவரால் சாப்பிட முடியாமலும், அப்படியே சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமலும் தவித்து வந்துள்ளார். அவரது ஹீமோகுளோபின் அளவும் 6 தான் இருந்தது. அவருக்கு கடந்த வாரம் 3 மணி நேரத்துக்கும் மேல் அறுவை சிகிச்சை நடைபெற்றது. கட்டி அவரது ஓவரியில் இருந்தது. எனது 30 ஆண்டுகால மருத்துவ வாழ்க்கையில் இப்படி ஒரு அறுவை சிகிச்சையை நான் செய்தது இல்லை. 2017-ம் ஆண்டு கோவையில் இருந்து பெண் ஒருவர் இதே பிரச்னைக்காக வந்திருந்தார். ஆனால் அந்த கட்டியின் எடை 34 கிலோ.." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த டெல்லி பெண் இன்னும் தாமதமாக வந்திருந்தால், அந்த கட்டி மற்ற உடல் உறுப்புகளை செயலிழக்க வைத்திருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இப்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment