
தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் பொதுப்போக்குவரத்து தொடங்கப்படும். கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களாக செயல்படும் அவசரகால மருத்துவப் பணியாளர்களுக்கும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே இ-பாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய இப்போது வாய்ப்பில்லை.
தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் பொதுப்போக்குவரத்து தொடங்கப்படும். இ.பாஸ் எளிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும், அதில் பணிபுரியும் அவசரகால மருத்துவப் பணியாளர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
சாத்தான்குளத்தில் நடைபெற்றது விரும்பத்தகாத சம்பவம். அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒருசிலரின் நடவடிக்கைகளால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.
எல்லா ஆட்சி காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நிகழாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழகத்தில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கைகளை எடுக்கும்.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக ஆராயவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு அந்த குழுவின் பரிந்துரைகளின்படி நடவடிக்கை எடுக்கும்.
கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகளை நடத்துவது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அரசு செயல்படும். வானிலை மையத்தின் அறிக்கையின்படி அதிகமழை பெய்ய வாய்ப்புள்ள நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேவையான நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அரசு ஊக்கம் அளித்து, பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
திருநெல்வேலியில் ரூ.1000-ம் கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீர்மேலாண்மை திட்டத்தில் ஒவ்வொரு குறிப்பிட்ட திட்டங்களுக்கும் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த விரிவான அறிக்கை தயார்செய்யப்படுகிறது. சென்னை- குமரி தேசிய நெடுஞ்சாலை ரூ.6448 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் ரூ.103 கோடியில் வாங்கப்படவுள்ளது.
2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்று முதல்வர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment