
சீனா தேசிய மருந்தக குழும நிறுவனமான சைனோஃபார்மின் ஒரு பிரிவு மேம்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, வரும் டிசம்பர் மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது.
உலக அளவில் வேகமாக பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரலை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகள் பல கட்டங்களாக நடந்து வருகின்றன. இந்த முயற்சியில், வைரஸ் எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் பணியில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பணியாற்ற 75 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்த நாடுகள் வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான பரிசோதனை முயற்சிக்கு தேவையான நிதி, ஆராய்ச்சி தேவைகளை வழங்கும். இந்த நிலையில்,ம ேலும் 90 நாடுகளில் குறிப்பாக குறைவான வருவாய் ஆதாரம் கொண்ட நாடுகளுடன் சேர்ந்து வைரஸ் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின்படி 2021-ஆம் ஆண்டு கடைசிக்குள்ளாக உலக அளவிலான வைரஸ் தடுப்பு மருந்து தேவைக்கான உற்பத்தியை செய்ய உலக சுகாதார அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த நிலையில், வைரஸ் தடுப்பு மருந்தை தமது நாடு கண்டுபிடித்துள்ளதாக இரு வாரங்களுக்கு முன்பு ரஷ்ய அரசு அறிவித்தது. ஆனால், மருத்துவ ரீதியிலான அனைத்து பரிசோதனை நடைமுறைகளையும் அந்த நாடு பூர்த்தி செய்ததா என்ற சந்தேகத்தை சர்வதேச மருத்துவ வல்லுநர்கள் எழுப்பியுள்ளனர்.
இருந்தபோதும், விரைவில் தமது நாட்டில் தயாரான வைரஸ் எதிர்ப்பு மருந்தை நாட்டு மக்களுக்கு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறினார்.
இந்த நிலையில், தற்போது ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளி நாடான சீனாவில், கோவிட்-19 வைரஸ் எதிர்ப்பு மருந்து மேம்படுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டின் தேசிய மருந்தக குழும நிறுவனமான சைனோஃபார்ம் தெரிவித்துள்ளது.
சீன பண மதிப்பில் இரண்டு சொட்டு தடுப்பு மருந்து ஆயிரம் யுவான் அளவுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் பதினோராயிரம்) மிகாமல் விற்பனை செய்யப்படும் என்று சைனோஃபார்ம் நிறுவன தலைவர் லியூ ஜின்ஸென்னை மேற்கோள்காட்டி அந்நாட்டின் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
இது குறித்த குவாமிங் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், வைரஸ் எதிர்ப்பு மருந்து விற்பனை மிக அதிகமானதாக இருக்காது என்றும், வெகு சில நூறு யுவான் என்ற அளவிலேயே அது இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
யாருக்கு மருந்து இவலசம்?
சீனாவில் வாழும் 140 கோடி பேரும் வைரஸ் எதிர்ப்பு மருந்தை பெற வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறிய சைனோஃபார்ம் நிறுவன தலைவர், பள்ளி மாணவர்கள், நகரங்களில் பணியாற்றுவோர் போன்ற மக்கள் நெரிசல் அதிகம் நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கே தடுப்பூசி தேவைப்படும் என்று கூறினார்.
பொதுவெளியில் தடுப்பூசி போடும் திட்டம் அமலுக்கு வரும்போது, அனேகமாக மாணவர்கள், மருத்துவ ஊழியர்கள் போன்றோருக்கு தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் அறிவிப்புகள் வெளியாகலாம் என கருதும் ஆய்வாளர்கள், மற்ற தரப்பினர் அவர்களின் சொந்த செலவில் தடுப்பு மருந்தை பெறும் அவசியம் இருக்கும் என்றும் கூறுவதாக குளோபல் டைம்ஸ் இணையதளம் கூறுகிறது.
சைனோஃபார்ம் நிறுவனத்தின் அங்கமான சீன தேசிய பயோடெக் குழுமம், ஏற்கெனவே இரண்டு வகை வைரஸ் திரிபுகளை மனிதர்களின் உடலில் செலுத்தி பரிசோதனை நடத்தியிருக்கிறது. அதன் தயாரிப்பு தொழிற்சாலைகள், வூஹான் மற்றும் பெய்ஜிங்கில் உள்ளன. அவற்றில் ஆண்டுக்கு இருநூறு மில்லியன் அளவிலான சொட்டு மருந்துகள் தயாரிக்க முடியும் என்று சைனோஃபார்ம் நிறுவனம் கூறுகிறது.
கேம்ப்ரிட்ஜில் உள்ள மாடெர்னா என்ற உயிரிதொழில்நுட்ப நிறுவனம், ஏற்கெனவே பரிசோதனை அளவிலான வைரஸ் தடுப்பு மருந்தை தயாரித்து ஒரு சொட்டு மருந்து அளவை முப்பத்து இரண்டு முதல் முப்பத்து ஏழு டாலர்கள் வரை விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த மாதம், அமெரிக்க அரசு, நியூயார்க்கில் உள்ள ஃபைஸர் மற்றும் ஜெர்மனியின் மெய்ன்ஸ் நகரில் உள்ள பயோஎன்டெக் எஸ்ஈ என்ற நிறுவனத்துடன் பரிசோதனை அளவிலான வைரஸ் எதிர்ப்பு மருந்தை பெறுவதற்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அதன்படி 50மில்லியன் அமெரிக்கர்களுக்கு தேவைப்படும் தடுப்பு மருந்தை தலா நாற்பது டாலர்கள் என்ற அளவில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், முழுமையான வைரஸ் தடுப்பு மருந்து இதுதான் என்று உலக சுகாதார அமைப்பின் சர்வதேச வல்லுநர்கள் அங்கீகரிக்காத நிலையில், தற்போது ரஷ்யா, சீனா, அமெரிக்கா, ஜெர்மனி உள்பட பல நாடுளில் தயாராகி வரும் பரிசோதனை அளவிலான மருந்துகள் அனைத்தும் கோவிட் பத்தொன்பது வைரஸை நிரந்தரமாகத் தடுக்கத் தீர்வாகுமா என்பதை இப்போதைக்கு தெளிவாகக் கூற முடியாத நிலையிலேயே சர்வதேச மருத்துவ உலகம் இருக்கிறது.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment