Latest News

பிரசாந்த் பூஷணின் சர்ச்சை டிவிட்டர்: 4 மணி நேர விசாரணை; தண்டனை ஒத்திவைப்பு-என்ன நடந்தது?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் முன்னாள் தலைமை நீதிபதிகள் தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்புடைய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நீதிபதி அருண் மிஸ்ரா முன்னிலையில் பிரசாந்த் பூஷண் தண்டனை மீதான வாதங்கள் இன்று நண்பகலில் தொடங்கியபோது, அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான், "பிரசாந்த் பூஷண் தண்டிக்கப்பட்டால் ஒரு தரப்பினர் அவரை தியாகி ஆக கருதுவார்கள் என்றும் மற்ற தரப்பினர் அவருக்கு சரியாக தண்டனை கிடைத்துள்ளது என்று கருதுவார்கள்" என்றும் குறிப்பிட்டார்.

"இந்த சர்ச்சைக்கு முடிவு காணப்பட வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறோம். அது மேன்மை பொருந்திய நீதித்துறையால்தான் சாத்தியம்" என்று ராஜீவ் தவான் கேட்டுக் கொண்டார்.

அப்போது அட்டர்னி ஜெனரல், "நீதிமன்றம் மீது மிகுந்த மதிப்பை கொண்டிருப்பதாக பிரசாந்த் பூஷண் கூறியிருக்கிறார். 2009ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் அவர் மன்னிப்பு கேட்டது போல இந்த விவகாரத்திலும் மன்னிப்பு கோரலாம்" என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக கேட்டுக் கொள்ளப்பட்ட மூத்த வழக்கறிஞர் சி.யு. சிங்கும் அட்டர்னி ஜெனரலின் கருத்தை ஆமோதித்தார்.

இதைக்கேட்ட நீதிபதி மிஸ்ரா, "நேர்மையான விமர்சனத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், ஒவ்வொருவரையும் களங்கப்படுத்தும் வகையில் பேசினால், நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். பிரசாந்த் பூஷண் தனது செயலை நியாயப்படுத்தி தாக்கல் செய்த மனுவில் உள்ளவற்றை படிக்கும்போது மிகவும் வலி ஏற்படுகிறது" என்றார்.

"மன்னிப்பு" என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் என்ன தவறு நேரப்போகிறது? பல விஷயங்களை குணப்படுத்தும் தன்மை மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தைக்கு உண்டு. இது பிரசாந்த் பூஷண் பற்றி குறிப்பிடும் வார்த்தைகள் அல்ல. பொதுவாக பேசுகிறேன்" என்றும் நீதிபதி அருண் மிஸ்ரா குறிப்பிட்டார்.

4 மணி நேரம் நடைபெற்ற விசாரணையின் முடிவில், சர்ச்சை கருத்துகள் தொடர்பாக மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷண் தரப்பில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.

இதையடுத்து நீதிபதி அருண் மிஸ்ரா, "மன்னிப்பு கேட்டால், காந்தியின் வரிசையில் வருவீர்கள். காந்தி அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். யாரையாவது காயப்படுத்தினால், மருந்து போட வேண்டும். அந்த செய்கையை சிறுமைப்படுத்தி கொள்வதாகக் கருதக்கூடாது" என்று தெரிவித்தார்.

"இந்த விவகாரத்தில் இதுவே நான் உங்களுடன் பேசும் கடைசி பேச்சாக இருக்கும் என கருதுகிறேன்" என்று அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலிடம் கூறி இந்த வழக்கின் தண்டனை விவரத்தை மீண்டும் நீதிபதி அருண் மிஸ்ரா தள்ளிவைத்தார்.

சர்ச்சையும் நிலுவை வழக்கும்

கடந்த ஜூன் மாதம், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒரு உயர்தர மோட்டார் சைக்கிளில் இருப்பது போன்ற படம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இதுவரை இருந்த நான்கு பேரின் பங்களிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மஹேக் மஹேஸ்வரி, கடந்த ஜூலை 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். காவ்ய, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

அதில் பிரசாந்த் அளித்த விளக்கத்தால் திருப்திய அடையாத நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை மீதான வாதங்கள் கடந்த வாரம் நடைபெற்றபோது, பிரசாந்த் பூஷண் தனது கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்பது தொடர்பாக இரண்டு, மூன்று நாட்களுக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.

ஆனால், "இந்த நீதிமன்றத்தில் ஏற்கெனவே பதிவு செய்த கருத்திலிருந்து தற்போது விலகினால், அது நேர்மையற்ற மன்னிப்பாகவே அமையும். நான் மிக உயரியதாக போற்றும் உச்ச நீதிமன்றத்தில் அப்படி செய்தால், அது எனது மனசாட்சியை அவமதிக்கும் செயலாகவே எனது பார்வையில் படும்" என்று பிரசாந்த் பூஷண் எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, 2009ஆம் ஆண்டில் பிராசந்த் பூஷண் அப்போதைய தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிளின் பணி தொடர்பாக டெஹல்கா இணையதள நேர்காணலில் அளித்த சர்ச்சை பேட்டி தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. அதை விசாரித்து வரும் நீதிபதியான அருண் மிஸ்ரா, வரும் செப்டம்பர் மாதம் தாம் பணியில் இருந்து ஓய்வு பெறவிருப்பதால், விரிவாக வாதங்கள் நடைபெற வேண்டிய பிரசாந்த் பூஷண் விவகாரத்தை வேறு அமர்வுக்கு மாற்றுவது குறித்து வரும் செப்டம்பர் 10ஆம் தேதி தலைமை நீதிபதி விசாரித்து முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.