Latest News

தமிழ் வழியில் படித்து நாசாவின் தலைசிறந்த விஞ்ஞானியான மெய்யப்பனின் வெற்றிக்கதை #தமிழர் _பெருமை

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் எட்டாவது கட்டுரை.)

தமிழ்வழியில் கல்வி பயில்வது குறித்து எண்ணற்ற ஆண்டுகளாக அவ்வப்போது விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழில் மட்டுமே படிப்பதால் உயர் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்க நேரிடும் என்று ஒரு தரப்பினரும், தாய்மொழியில் படித்ததால் வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு வந்தவர்கள் ஏராளம் என்று மற்றொரு தரப்பினரும் வாதிடுவதுண்டு.

இவ்வாறு தமிழ்வழி கல்வியில் படித்து சிறந்தவர்களுக்கு உதாரணமாக, உள்நாட்டு தலைவர்கள் ஏராளமானோர் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

ஆனால், அதே பின்புலத்துடன் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சாதித்து காட்டியவர்கள் பொதுவெளியில் அதிகம் தென்படுவதில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தின் காரைக்குடியில் பிறந்து, தமிழ்வழியில் கல்வி பயின்று, அமெரிக்காவுக்கு குடிப்பெயர்ந்து இன்று உலகமே வியந்து பார்க்கும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி நடைப்போட்டு வருகிறார் தமிழரான மெய்ய மெய்யப்பன்.

தன்னம்பிக்கை அளிக்கும் அவரது வெற்றிக்கதையையும், நானோ டெக்னாலஜி துறையில் அவர் நிகழ்த்தி வரும் சாதனைகள் குறித்தும், 'நாசாவில் வேலை செய்பவர்களில் பாதி பேர் இந்தியர்கள்' என்ற கூற்றின் உண்மைத்தன்மை குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

யார் இந்த மெய்ய மெய்யப்பன்?

தமிழகத்தின் காரைக்குடியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த மெய்ய மெய்யப்பன் அங்குள்ள பிரபல பள்ளியொன்றில் தமிழ்வழியில் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தவுடன், திருச்சியிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இரசாயன பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றார். பிறகு இங்கிலாந்தின் பர்மிங்காமில் அதே பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற இவர், பின்பு 1979இல் அமெரிக்காவுக்கு சென்று முனைவர் பட்டம் பெற்றார்.

ரசாயன பொறியியல் துறையில் தனது உயர்கல்வி முழுவதையும் பயின்று முடித்த மெய்யப்பன், வேலையை தேட தொடங்கியபோது அக்காலக்கட்டத்தில் நிலவிய பொருளாதார மந்தநிலையின் காரணமாக கடும் சவாலாக சூழ்நிலை நிலவியது. எனினும், இடைவிடாது போராடிய இவருக்கு, சம்பந்தமே இல்லாத மின்பொறியியல் துறைசார்ந்த வேலையே கிடைத்தது.

எனினும், துளியும் சளைக்காத மெய்யப்பன் மிக குறுகிய காலத்திலேயே அந்த துறையில் திறமையை வளர்த்துக்கொண்டு சுமார் 12 ஆண்டுகள் ஒரே நிறுவனத்திலேயே வேலை செய்தார். இவற்றிற்கிடையே அமெரிக்க குடியுரிமையையும் பெற்றார்.

இதேபோன்று வாழ்க்கையில் பல்வேறு தொடர்பற்ற திருப்புமுனைகளை சந்தித்த மெய்யப்பன் அவற்றை சரியாக பயன்படுத்தியதன் காரணமாக, கடந்த 24 ஆண்டுகளாக நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

குறிப்பாக, கலிஃபோர்னியாவிலுள்ள நாசாவின் ஏம்ஸ் ஆய்வு நிலையத்தின் நானோ டெக்னாலஜி ஆய்வு பிரிவின் தலைமை விஞ்ஞானியாக கடந்த 14 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

அமெரிக்காவில் நானோ தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவர்

ரசாயன பொறியியல் துறையில் இளங்கலை முதல் முனைவர்பட்ட ஆய்வு வரை முடித்த மெய்ய மெய்யப்பன், அதனுடன் தொடர்பற்ற மின்பொறியியல் துறையில் 12 ஆண்டுகாலம் பணியாற்றியதை போல, அவர் இன்று உலகம் முழுவதும் அறியப்படும் நானோ தொழில்நுட்பம் குறித்து அவர் கல்வி பயின்றதே இல்லை என்பது வியப்புக்குரியது.


தமிழர் பெருமை தொடரின் பிற கட்டுரைகளுக்கான இணைப்புகள்:

"அமெரிக்காவில் என் பணி வாழ்க்கையின் முதல் 12 ஆண்டுகளில், அந்த நாட்டின் ராணுவம், விண்வெளி தொடர்பான திட்டங்களுக்கு பங்காற்றும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில், அமெரிக்காவின் பல்வேறு அரசுத்துறைகளில் எனக்கு தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டேன். இந்த நிலையில், 1996ஆம் ஆண்டு நாசாவில் இணைந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நாசாவில் பணியில் சேர்ந்து இரண்டு மாதங்களாகியும் அங்கு நான் என்ன செய்யவேண்டுமென்ற வழிகாட்டுதல் எதுவும் கொடுக்கப்படாத நிலையில்தான், எனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய அந்த அழைப்பு வந்தது" என்று மெய்யப்பன் கூறுகிறார்.

"அமெரிக்க அறிவியல் கழகத்திலிருந்து என்னை அழைத்த அதிகாரியொருவர் 'எதிர்காலத்தில் தாக்கத்தை செலுத்தப்போகும் ஒரு தொழில்நுட்பம் குறித்த அடிப்படை ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் பணிக்கு கப்பற்படை, விமானப்படை உள்ளிட்டவற்றை சேர்ந்த மூன்று பேர் தயாராக உள்ளனர், அதில் நான்காவது நபராக இணைய உங்களுக்கு விருப்பமா?' என்று கேட்டார். அதற்கு நான் உடனே சரியென்று சொல்லிவிட்டேன்."

அதாவது, இன்று உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அறிவியல், சுகாதார, தொழில்நுட்ப பிரச்சனைகளை களையும் நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பமாக விளங்கும் நானோ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து ஆராய்ச்சியை மேற்கொள்ளலாமா, வேண்டாமா என்று 24 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை மாளிகை யோசித்தது. அதற்கான பதிலை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில்தான் மெய்யப்பன் இடம்பெற்றிருந்தார். அந்த குழுவினர் மூன்றாண்டுகால ஆய்வுக்கு பின்னர் 1999ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட அப்போதைய அதிபர் பில் கிளிண்டன் அந்த நாட்டின் அரசுத்துறைகளில் நானோ தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கும் சட்டத்தில் 2000ஆவது ஆண்டு கையெழுத்திட்டார்.

நானோ டெக்னாலஜி என்ற சொல்லாடலே இல்லாத காலத்தில் கல்வி பயின்ற மெய்யப்பன், அந்த தொழில்நுட்பம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படுவதில் பெரும்பங்கு வகித்த பெருமைக்குரியவர். இடைப்பட்ட காலத்தில் விண்வெளித்துறையில் நானோ தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் அதில் மெய்யப்பனுக்கு உள்ள திறமையையும் கண்ட நாசா அவரை நானோ தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் இயக்குநராக நியமித்தது.

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர்

நானோ தொழில்நுட்பத்தில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படும் மெய்ய மெய்யப்பன், இதுவரை 350க்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதோடு, உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட கருத்தரங்கங்கள் மற்றும் நிகழ்வுகளில் உரையாற்றியுள்ளார். நானோ தொழில்நுட்பம் சார்ந்த 18க்கும் மேற்பட்ட படைப்புரிமைகளை (Patent) பெற்றுள்ள இவர், உலகின் புகழ்ப்பெற்ற பல்கலைக்கழகங்களின் ஆய்வுகளுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளார்.

அமெரிக்காவில் நானோ தொழில்நுட்பம் அரசின் கவனத்தை பெறவும், பரவலடையவும் காரணமாக அமைந்த மெய்யப்பனின் வழிகாட்டுதலை, பின்னாட்களில் பல்வேறு உலக நாடுகளின் அரசுகளும் கோரின.

மெய்ய மெய்யப்பன், நானோ தொழில்நுட்பத்துறையில் ஆற்றி வரும் வரலாற்று சிறப்புமிக்க பணிகளை அங்கீகரிக்கும் வகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் அரசு, அந்த நாட்டின் உச்சபட்ச விருதுகளில் ஒன்றான "Presidential Meritorious Award" என்ற விருதை அவருக்கு வழங்கியது.

இதுமட்டுமின்றி, நாசாவின் தலைசிறந்த தலைமைக்கான பதக்கம், சிறந்த விஞ்ஞானி பதக்கம், சிறந்த பொறியியலாளர் பதக்கம் மற்றும் நானோ தொழில்நுட்பம் சார்ந்த உலக புகழ்ப்பெற்ற அமைப்புகளின் எண்ணற்ற விருதுகளுக்கு சொந்தக்காரர் இவர்.

மெய்யப்பனின் குறிப்பிடத்தக்க சாதனைகள் என்னென்ன?

2006ஆம் ஆண்டு வரை கலிஃபோர்னியாவிலுள்ள நாசாவின் ஏம்ஸ் ஆய்வு மையத்தின் நானோ தொழில்நுட்ப மையத்தின் இயக்குநராக செயல்பட்ட மெய்ய மெய்யப்பன், கடந்த 24 ஆண்டுகளாக அதே மையத்தின் விண்வெளி ஆய்வு தொழில்நுட்பத்துறையின் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

மெய்யப்பனின் குறிப்பிடத்தக்க சாதனை 2007ஆம் ஆண்டு தொடங்கியது என்று கூறலாம். அப்போதுதான் இவரது தலைமையிலான அணியினர் நானோ தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கிய பொருளொன்று விண்வெளிக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட பொருளொன்று விண்வெளிக்கு செல்லப்பட்டது அதுவே முதல் முறை.


தமிழர் பெருமை தொடரின் பிற கட்டுரைகளுக்கான இணைப்புகள்:

இதை தவிர்த்து, கார்பன் நானோகுழாய்கள், கிராபென் மற்றும் நானோ ஒயர்கள் போன்ற புதுமையான நானோ பொருள்களைப் பயன்படுத்தி மின்னணு, வேதியியல் சென்சார்கள், பயோசென்சார்கள், எரிசக்தி சேமிப்பு சாதனங்கள் மற்றும் பிற துறைகளுக்கான தொழில்நுட்பங்களை மெய்யப்பன் உருவாக்கியுள்ளார். விண்வெளி ஆய்வு மட்டுமின்றி புற்றுநோய் மற்றும் நோய்த்தொற்று கண்டறிதலுக்கு தேவையான மருத்துவத்துறை சார்ந்த சென்சார்களையும் இவர் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது.

இந்த நிலையில், நாசாவில் இவரது தலைமையில் நானோ தொழில்நுட்பத்தை கொண்டு செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் அவரிடம் கேட்டபோது, "விண்வெளியில் மனிதர்கள் சென்று ஆராய்ச்சி செய்வது என்பது முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருகிறது.

எனவே, மனிதர்கள் விண்வெளிக்கு பயணிக்கும்போது அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் விண்கலத்தை வடிவமைக்க வேண்டும். அந்த வகையில், விண்வெளி வீரர்கள் தங்கியுள்ள இடத்தின் காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகிறது. இந்த வேலையை முன்பு பிரிண்டர் அளவுக்கு இருந்த அதிக செலவும் மின்சாரமும் இழுக்கும் சென்சார் ஒன்று செய்து வந்தது. ஆனால், நாங்கள் தற்போது அதே வேலையை இன்னும் துல்லியமாக செய்யும் உள்ளங்கை அளவு கொண்ட சென்சாரை நானோ தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கியுள்ளோம்" என்று அவர் கூறுகிறார்.

"ஒரு கிராம் எடை கொண்ட பொருளை விண்வெளிக்கு அனுப்புவதற்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும். அந்த வகையில், விண்வெளி திட்டங்களில் பொருளின் எடை என்பது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் பல்வேறு மின் சாதனங்களின் எடையை குறைப்பதற்கு மட்டுமின்றி செயல்பாட்டு திறனையும் அதிகரிப்பதற்கு நானோ தொழில்நுட்பத்தை கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். நாசாவை பொறுத்தவரை, நிலவை மையப்புள்ளியாக கொண்டு செவ்வாய் கிரக ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதே எதிர்கால திட்டமாக உள்ளது. இதுபோன்ற நீண்ட நெடிய பயணங்களுக்கு தற்போதுள்ள சிலிக்கானை அடிப்படையாக கொண்ட மின்சாதனங்களை பயன்படுத்த இயலாது. எனவே, நானோ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட கருவிகளை உருவாக்கி வருகிறோம். மேலும், விண்வெளி பயணங்களின்போது மின்சாதனங்களுக்கும், மனிதர்களுக்கும் பெரும் சவாலாக விளங்கும் கதிரியக்கத்தை கட்டுப்படுத்தும் வழியை கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம்" என்று அவர் கூறுகிறார்.


தமிழர் பெருமை தொடரின் பிற கட்டுரைக்கான இணைப்பு:

விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படும் வீரர்கள் அடிக்கடி பூமிக்கு வந்து பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்கும் வகையில், ஆய்வு மையங்களில் உருவாக்கப்படும் கருவிகளை விண்வெளியில் இருந்தவாறு பெற்றுக்கொள்ள வகை செய்யும் 3டி பிரிண்டர்களின் பயன்பாட்டை நானோ தொழில்நுட்பத்தை கொண்டு அதிகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஐந்தாண்டுகளில் இது செயல்பாட்டுக்கு வருமென்று நம்புவதாகவும் பிபிசி தமிழிடம் பிரத்யேகமாக தெரிவித்தார் மெய்ய மெய்யப்பன்.

"தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்"

அமெரிக்காவில் 41 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மெய்ய மெய்யப்பன், அந்த நாட்டில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களில் மிகச் சிறந்த சாதனை புரிந்தவர்களில் ஒருவர் என்று கூறலாம்.

ஆனால், தனது சாதனைக்கு சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருந்ததும், அதற்குரிய வழிகாட்டுதல் கிடைத்ததுமே காரணம் என்றும் கடின உழைப்பும் தெளிவான குறிக்கோளுமே வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கான வழிகள் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், தமிழுக்கும் தனக்குமான உறவு ஒவ்வொரு நாளும் இடைவிடாது தொடர்ந்து வருவதாக அவர் கூறுகிறார். "நான் ஒவ்வொரு நாளும் எனது முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போதும் எனது பெற்றோரின் முகமும், தமிழகத்தில் நான் கழித்த இளமைக்காலமும் நினைவுக்கு வந்து செல்லும்.

நான் என்னதான் அமெரிக்காவில் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வந்தாலும், நான் ஒரு தமிழர் என்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். அந்த அடையாளம் எனது மரபணுவில் நிரந்தரமாக உள்ளது. மேலும், உலகின் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழிலிருந்துதான் பல்வேறு மொழிகள் பிறந்தன என்பது பெருமைக்குரிய விடயம்.

நான் உலகம் முழுவதும் எங்கு சென்றாலும், தமிழர்களும், தமிழ் மொழியும் விரவி கிடப்பதை காண்கிறேன். உதாரணமாக, ஒருமுறை நான் கொரியாவிற்கு சென்றிருந்தபோது, கொரிய மொழிக்கும் - தமிழுக்கும் இடையே எண்ணற்ற ஒற்றுமை இருப்பதை எண்ணி வியந்தேன்."


முதல் தலைமுறை பட்டதாரியான இவர், தமிழ்வழியில் பள்ளிக்கல்வி பயின்றது குறித்து பேசியபோது, "நான் தமிழ்வழியில் பள்ளிக்கல்வி பயின்றது எந்த வகையிலும் எனக்கு பின்னடைவாகவே அமையவில்லை. மாறாக, தாய்மொழியில் பயின்றது எனக்கு உறுதுணையாகவே இருந்தது. மேலும், திருச்சியில் கல்லூரி படிப்பை படிக்கும்போது ஆங்கில புலமையை படிப்படியாக வளர்க்க தொடங்கினேன்.

நான் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் படிக்கும்போதுகூட எனக்கு அமைய பெற்ற சிறந்த பள்ளிக்கல்வியை நினைத்து பெருமையடைந்தேனே தவிர, ஒருபோதும் அதுகுறித்து வருந்தியதில்லை" என்று கூறும் அவர் தனது பள்ளிக்கல்வி முதல் முனைவர் பட்ட ஆய்வுவரை அனைத்தையும் இலவசமாக கற்கும் வாய்ப்பு கிடைத்ததாக குறிப்பிடுகிறார்.

நாசாவில் பாதிக்கும் அதிகமானோர் இந்தியர்களா?

'நாசாவில் பணிபுரிபவர்களில் பாதிக்கும் அதிகமானோர் இந்தியர்கள்' என்ற கூற்றை பலரும் கேட்டிருக்க வாய்ப்புண்டு. இதன் உண்மைத்தன்மை குறித்த கேள்விக்கு பதிலளித்த மெய்ய மெய்யப்பன், "கண்டிப்பாக இல்லை. நாசா என்பது அமெரிக்காவின் ஓரிடத்தில் இருந்து செயல்படும் அமைப்பல்ல. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நாசாவின் ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றன. நான் பணிபுரியும் கலிஃபோர்னியாவிலுள்ள ஏம்ஸ் ஆய்வு மையம் உள்ளிட்ட சில மையங்களில் முனைவர் பட்டம் ஆய்வாளர்கள் பலர் பணிபுரிகின்றனர். அந்த வகையில் பார்த்தோமானால், அமெரிக்காவில் பிறக்காத வேற்று நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளில் இந்தியாவை சேர்ந்தவர்களே மற்ற நாட்டினரைவிட அதிக அளவில் உள்ளனர். அதுவும், குறிப்பாக இந்தியர்களில் மொழிவாரியாக பார்த்தோமானால், தமிழர்களே நாசாவில் அதிகளவில் பணிபுரிக்கின்றனர் என்பதுதான் உண்மை" என்று அவர் கூறுகிறார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.