Latest News

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்த தடை கேட்ட தீபா - நிராகரித்த ஹைகோர்ட்

 

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீபா தரப்பு கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்த போது எங்கே இருந்தீர்கள் என்றும் தீபாவிடம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த அவரது போயஸ்தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், நிலம், கட்டிடம், மரங்களுக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு, தற்போது வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இழப்பீடு நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை எடுக்கவும் எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நாடு முழுவதும் கரோனா பாதிப்பால் திணறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற அரசு அவசரம் காட்டுகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. அதிகாரிகள், டாக்டர்கள் என 147 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த நேரத்தில், வழக்கில் சம்மந்தப்பட்ட இடத்தை அரசு தன்வசம் எடுத்துக்கொள்வது, ஆணையத்தின் விசாரணையை முழுவதுமாக அழித்துவிடும். உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் அனைத்திற்கும் நாங்கள்தான் உரிமை கோர முடியும். இவற்றை எல்லாம் தற்காலிகமாக தங்கள் வசம் அரசு எடுத்துக்கொண்டிருப்பது நியாயமற்றது, சட்ட விரோதமானது.

வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை, சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் நில ஆர்ஜித அதிகாரி எடுத்துவிடக்கூடாது எனக் கோரி, தமிழக அரசுக்கு கடந்த ஜூன் 12ஆம் தேதி மனு அனுப்பினேன். இந்நிலையில், என்னை ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நிர்வாகியாக நியமனம் செய்தும், 6 மாதங்களுக்குள் ஜெயலலிதாவின் சொத்துகள், அவரது கடன்கள் ஆகியவற்றை கண்டறிந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், போயஸ் கார்டன் வீட்டை ஆய்வு செய்யக்கூட எனக்கு அதிகாரிகள் அனுமதி தரவில்லை. மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வரும் நிலையில், அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை.

இது ஹெஸ்புல்லா ஸ்டைல் அட்டாக்.. பெய்ரூட் வெடிப்பில் புதிய கோணம்.. பீதியை கிளப்பும் இஸ்ரேல்.. பின்னணி

எனது மூதாதையர்களின் சொத்துகளை, குறிப்பாக நகைகள், உடைகள், பெண்களின் உடமைகளை அரசு எடுப்பது பெண்மையை இழிவுபடுத்தும் செயலாகும். எனது தாய்போல் இருந்த ஜெயலலிதாவை அவமானப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. வேதா நிலையத்தில் உள்ள ஏராளமான மதிப்பு மிக்க பொருட்கள், தங்க, வைர, பிளாட்டின, வெள்ளி நகைகள் போன்றவை புராதனமானவை. அவை எனது தாத்தாவிற்கு, மைசூர் ராயல் பேலஸ் டாக்டர் ஒருவரால் வழங்கப்பட்டவை. அவற்றை ஜெயலலிதா மிக பத்திரமாக பராமரித்து வந்தார். அவற்றைத் தொட யாருக்கும் அனுமதி வழங்கமாட்டார். அப்படிப்பட்ட பொருட்களை அரசு கையகப்படுத்துவது, ஜெயலலிதாவுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். ஜெயலலிதாவின் உயர் மதிப்புள்ள நகைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது ஏற்கத்தக்கதல்ல.

சொத்துக்கள் மீது உரிமையுள்ள தங்களிடம் கருத்து கேட்காமல் கையகப்படுத்திய நடவடிக்கை என்பது நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம், மறுவாழ்வு சட்டத்துக்கு முரணானது எனவும் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட வீட்டை, அரசு எடுத்துக்கொள்வது, ஆணையத்தின் விசாரணையை முழுவதுமாக பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வரும் நிலையில், அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை எனவும், ஜெயலலிதாவுக்கு சொந்தமான மதிப்புமிக்க புராதன நகைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது ஏற்கத்தக்கதல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். இழப்பீட்டுத் தொகையில் இருந்து வருமான வரி பாக்கியை எடுக்க வருமான வரித் துறைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இழப்பீடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வருவாய் கோட்ட்டாட்சியருக்கு அதிகாரமில்லை எனவும், தனியார் நிலத்தை நினைவு இல்லமாக மாற்ற நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு உரிமை சட்டப்படி உரிமையில்லை. இது பொது பயன்பாடும் அல்ல. எந்த சட்டவிதிகளும் பின்பற்றப்படவில்லை என்று தீபா தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பு தலைமை வழக்கறிஞர், இழப்பீடு மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருவரும் அறக்கட்டளை துவங்கி சொத்துக்களை அளிக்க வேண்டும் என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இருவருக்கும் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது. இரு உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கை அளிக்கவே வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற நீதிபதி பரிந்துரைத்தார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள் என ஜெ. தீபாவிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீபா தரப்பு கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்து விட்டார்.

ஜெயலலிதா இல்லத்துக்கு அரசு இழப்பீடு நிர்ணயித்த உத்தரவை எதிர்த்து தீபா தாக்கல் செய்த வழக்கில் ஜெயலலிதா சொத்துக்களை கையாகப்படுத்திய நடவடிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதால் தீபா தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.