
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையில் மரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் உடல் - நேற்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.
மரணமடைந்த மேற்படி பெண் - புற்றுநோய் மற்றும் இதயக்கோளாறு ஆகியவற்றினாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
47 வயதுடைய குறித்த பெண் - புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கடந்த 09 மாதங்களாக இந்தியா - வேலூரிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்ததாக அவரின் உறவினர் றம்ஸான் என்பவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
இதனையடுத்து கடந்த 20ஆம் திகதி இவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியபோது, கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இரணவில தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மேற்படி பெண், பின்னர் 22ஆம் திகதி அங்கொடயிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையிலேயே இந்தப் பெண் நேற்று மரணமடைந்தார் என சுகாதார அமைச்சு அறிவித்தது.
இவ்வாறு மரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் உடல் - நேற்றைய தினமே சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ், கொடிகாவத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இறந்த பெண்ணின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரின் கணவரும், குடும்ப உறுப்பினர்கள் சிலரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மரணமடைந்த பெண் - நான்கு பிள்ளைகளின் தாய் ஆவார்.
இஸ்லாமியர் ஒருவரின் பிரேதம், அவரின் சமய நடைமுறைக்கு மாறாக இவ்வாறு தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம் சமூகத்தினுள் மீண்டும் எதிர்ப்புகளும், விசனங்களும் எழுந்துள்ளன.
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக 12 பேர் மரணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு மரணமடைந்தவர்களில் 05 பேர் முஸ்லிம்களாவர். இவர்களில் மூவர் ஆண்கள், இருவர் பெண்கள்.
இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் உடல்கள் அனைத்தும், அரசின் கண்காணிப்பின் கீழ் தகனம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டாம் எனவும், இஸ்லாமிய முறைப்படி அந்த உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் இறந்தவர்களின் உறவினர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், அவற்றினை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சட்ட நடவடிக்கை என்ன ஆனது?
கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து - உச்ச நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, மேற்படி முஸ்லிம் பெண்ணின் உடல் நேற்றைய தினம் எரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பினால் மரணிப்போரின் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொவிட் - 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் தகனம் செய்ய வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வெளியிட்ட வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரி - அரசியல் கட்சிகள் சார்பிலும், சிவில் அமைப்பு மற்றும் தனி நபர்கள் சார்பிலுமாக உச்ச நீதிமன்றில் கடந்த மே மாதம் மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களே அடுத்த மாதம் 9ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
இலங்கை கொரோனா நிலவரம்
இலங்கையில் இன்று திங்கட்கிழமை (24ஆம் தேதி) காலை 05 மணி வரையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2953 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 2805 பேர் குணடைந்து - வீடு திரும்பியுள்னர்.
இதனடிப்படையில் 136 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புக்காக தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment