
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என சீனா தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆண்டு ஏப்ரல் மாதம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 1,300 பொருட்களின் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டது. இதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப் போவதாக சீனா அறிவித்தது. இதன் விளைவாக இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடங்கியது. இதனால் இரு நாடுகளிலும் ஏற்றுமதி இறக்குமதி, பெருமளவில் குறைந்தது. மேலும் இந்த வர்த்தகப் போரால் சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை உருவாகும் சூழலும் உருவானது.
இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பிரச்சனையை போக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து வரி விதிப்பு தடைகளை நீக்கும் வகையிலான முதல் கட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இதனால் இரண்டு ஆண்டுகளாக நீடித்துவந்த வர்த்தக போர் முடிவுக்கு வந்தது. இருப்பினும் வர்த்தக பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனவும் அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான பிரச்சனையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து அமெரிக்கா- சீனா இடையேயான இரண்டாம் கட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக சீனாவுடன் பேசுவதில் இப்போது எனக்கு விருப்பமில்லை என அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது முதலீட்டாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் காவ் ஃபெங், இரு நாடுகளிடையேயான வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் சீன மற்றும் அமெரிக்க வர்த்தக தூதர்கள், தொலைபேசி மூலம் ஒரு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவர்தற்கான தேதி நேரம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
No comments:
Post a Comment