Latest News

மன்மோகன் சிங்: இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க யோசனை தரும் முன்னாள் பிரதமர்

 

இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி என்று பரவலாக மதிக்கப்படுபவர் மன்மோகன் சிங்

இந்தியாவின் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீள, ``உடனடியாக'' மூன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

"இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி" என்று பரவலாக மதிக்கப்படுபவரும், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டாக்டர் மன்மோகன் சிங், இமெயில் மூலம் பிபிசியின் கேள்விகளுக்குப் பதில்களை அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவரை நேரில் சந்தித்து பேட்டி எடுக்க வாய்ப்பில்லாமல் போனது. காணொளி மூலம் பேட்டி அளிக்க அவர் மறுத்துவிட்டார்.

இந்தியாவின் பொருளாதாரத்தை, எதிர்வரும் காலத்தில் பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கு, 3 நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இந்த இமெயில் கலந்தாடலில் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக, அரசாங்கம் ``மக்களின் வாழ்வாதாரங்களை உறுதி செய்து, பாதுகாப்பு நிலையை உறுதி செய்வதுடன், கணிசமான நேரடி ரொக்க உதவி அளிப்பதன் மூலம் அவர்களுக்கு செலவழிக்கும் சக்தியை அளிக்க வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.

இரண்டாவதாக, ``அரசின் ஆதரவுடன் கூடிய கடன் உத்தரவாத திட்டங்கள்'' மூலம் தொழில் துறைக்கு போதிய மூலதனம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

மூன்றாவதாக, ``நிறுவன தன்னாட்சி மற்றும் செயல்முறைகள்'' மூலம் நிதித் துறைக்கு பொறுப்பு அளிக்க வேண்டும்.

நோய்த் தொற்று தொடங்குவதற்கு முன்பே, இந்தியாவில் பொருளாதார தேக்கம் ஏற்பட்டு நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருந்தது.

2019-20ல் ஜிடிபி வளர்ச்சி 4.2 சதவீதம் என்ற அளவில் இருந்தது. ஏறத்தாழ பத்தாண்டு காலத்தில் இதுதான் மிகக் குறைந்த வளர்ச்சியாக இருந்தது. நீட்டிக்கப்பட்ட மற்றும் கடுமையான முடக்கநிலையில் இருந்து இப்போது தான் பொருளாதாரம் மெதுவாக மீண்டு கொண்டிருக்கிறது.

ஆனால். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால், எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. கடந்த வியாழக்கிழமை, கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை கடந்ததை அடுத்து, உலக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

2020-21 நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி பெருமளவு குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அது 1970களுக்குப் பிறகு, மிக மோசமான தேக்க நிலையாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

``பொறுப்பற்றவரைப் போல `மந்தம்' என்ற வார்த்தைகளை நான் பயன்படுத்த விரும்பவில்லை'' என்று டாக்டர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஆனால் ``தீவிரமான மற்றும் நீண்டகாலத்துக்கான பொருளாதாரப் பின்னடைவு'' ஏற்படும் என்பதைத் ``தவிர்க்க முடியாது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

``மனிதாபிமான நெருக்கடியால் பொருளாதார தேக்கம் ஏற்படுகிறது. வெறுமனே பொருளாதார எண்கள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் பார்க்காமல், நமது சமூகத்தின் எண்ணங்களின் அடிப்படையிலும் பிரச்னையைப் பார்க்க வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் மிதமான முறையில் பொருளாதாரம் சுருங்குவது தொடர்பாக அத்துறை நிபுணர்கள் இடையே காணப்படும் கருத்தொற்றுமை குறித்துப் பேசிய மன்மோகன் சிங், அத்தகைய நிலை வருமானால், அதுவே, சுதந்திர இந்தியாவில் நடக்கும் முதலாவது நிகழ்வாகும் என்று குறிப்பிட்டார்.

"அத்தகைய ஒருமித்த நிலை தவறானது என்று நம்புகிறேன்" என்றும் மன்மோகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் முடக்கநிலை அமல் செய்யப்பட்டது. ஆரம்பத்திலேயே இது நடந்தது. அவசரத்தில் செயல்படுத்தப்பட்ட முடக்கநிலையாக இது இருந்தது என்று பலர் விமர்சனம் செய்தனர். இதனால் மில்லியன் கணக்கான குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பெருநகரங்களைவிட்டு வெளியேறுவார்கள் என்பதை அவர்கள் முன்கூட்டியே ஊகிக்கவில்லை.

மற்ற நாடுகள் செய்ததை இந்தியாவும் செய்தது என்று மன்மோகன் கருதுகிறார்.

``அந்தச் சூழ்நிலையில் முடக்கநிலையை அமல் செய்வது தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம்'' என்று அவர் கூறியள்ளார்.

``ஆனால் அரசாங்கத்தின் அதிர்ச்சிகரமான மற்றும் மோசமான அணுகுமுறை போன்ற காரணங்களால் மக்கள் அளவற்ற துன்பங்களுக்கு ஆளானார்கள். திடீரென முடக்கநிலை அறிவித்து, கடுமையாக அமல் செய்யப்பட்டது சிந்தனையற்ற மற்றும் புத்திசாலித்தனமற்ற செயல்பாடு'' என்று அவர் கூறியுள்ளார்.

``இதுபோன்ற பொது சுகாதார அவசர நிலைகளை உள்ளூர் நிர்வாகத்தினரும், பொது சுகாதாரத் துறை அதிகாரிகளும் சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசின் விரிவான வழிகாட்டுதல்களுடன் இதைச் செய்திருக்கலாம். அநேகமாக, கோவிட்-19க்கு எதிரான செயல்பாடுகளில் இன்னும் சீக்கிரத்திலேயே மாநில மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கு அதிகாரம் அளித்திருக்க வேண்டும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு நிதியமைச்சராக இருந்தவர் என்ற வகையில், 1991ல் இந்தியாவின் கடன் திருப்பிச் செலுத்தும் சக்தி மிக மோசமான நிலையில் இருந்தபோது, லட்சிய நோக்குடன் கூடிய பொருளாதார சீர்திருத்தங்களை டாக்டர் மன்மோகன் சிங் முன்னெடுத்துச் சென்றார்.

உலக அளவிலான காரணிகளால் உள்நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாகத்தான் 1991 நெருக்கடி ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ``ஆனால், இன்றைய பொருளாதார சூழ்நிலை, அதனுடைய தன்மை, அளவீடு, தீவிரம் ஆகிய அம்சங்களில் முன் எப்போதும் ஏற்பட்டிருதாதது'' என்றும் அவர் கூறியுள்ளார்.

இரண்டாவது உலகப் போரின்போது கூட, ``இப்போதுள்ளதைப் போல உலகம் முழுக்க அடுத்தடுத்து முடக்கநிலைகள் அமல் செய்யப்பட்டன'' என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு, 266 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தது. பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிப்பதற்காக கடன் வசதிகள் மற்றும் சீர்திருத்தங்கள் அதில் அறிவிக்கப்பட்டன.

இந்தியாவின் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தது, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டித்தது.

வரி வருவாய் குறைந்த நிலையில், நேரடி மானிய உதவிகளை வழங்குவதற்கும், நெருக்கடியில் தவிக்கும் வங்கிகளுக்கு மூலதனம் அளிப்பதற்கும், தொழில் துறைக்கு கடன் அளிக்கவும் தேவையான பணத்தை அரசு எங்கிருந்து பெறும் என்று பொருளாதார வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர். ஏற்கெனவே அரசு நிதி நெருக்கடியில் இருப்பதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடன் வாங்குவது என்பதுதான் இதற்கான பதிலாக இருக்கும் என்கிறார் டாக்டர் மன்மோகன் சிங்.

``அதிக கடன்கள் வாங்குவதைத் தவிர்க்க முடியாது'' என்று அவர் கூறியுள்ளார். ``ராணுவம், சுகாதாரம் மற்றும் பொருளாதாரத் துறையின் சவால்களைச் சமாளிக்க ஜிடிபியில் கூடுதலாக 10 சதவீதம் செலவு செய வேண்டியிருந்தாலும், அதைச் செய்தாக வேண்டும்'' என்கிறார் அவர்.

ஜிடிபிக்கு எதிரான இந்தியாவின் கடன் விகிதம் இதன் மூலம் அதிகரிக்கும் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

ஆனால் ``கடன் வாங்குவதன் மூலம் உயிர்களை, எல்லைகளைக் காப்பாற்ற முடியும், வாழ்வாதாரங்களை மீட்டுருவாக்கம் செய்ய முடியும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என்றால், வாங்குவதில் தவறில்லை'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

``கடன் வாங்குவதற்கு நாம் தயங்கத் தேவையில்லை. ஆனால், அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் பொறுப்பாக செயல்பட வேண்டும்'' என்று மன்மோகன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில், பன்னாட்டு நிதியம், உலக வங்கி போன்ற பன்னாட்டு அமைப்புகளிடம் கடன் வாங்குவது இந்தியாவின் பொருளாதார பலவீனத்தைக் காட்டுவதாகக் கருதப்பட்டது. ஆனால் ``மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, தனது பலங்களின் அடிப்படையில் இந்தியா கடன் வாங்க முடியும்'' என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

``பன்னாட்டு அமைப்புகளிடம் இருந்து கடன் வாங்கி திருப்பி செலுத்தியதில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பானதாக இருந்து வந்துள்ளது. இந்த அமைப்புகளிடம் இருந்து கடன் வாங்குவதை பலவீனமானதாகக் கருதக் கூடாது'' என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு, அரசின் செலவினங்களுக்கு நிதி அளிப்பதற்காக கரன்சியை அச்சிடுவதற்கு பல நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியாவிலும் அப்படி செய்யலாம் என்று சில முக்கிய பொருளாதார வல்லுநர்கள் யோசனை கூறியுள்ளனர். அதிகமான பணப்புழக்கம் இருந்தால் பணவீக்கம் அதிகரித்துவிடும் என்று பலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நிதிப் பற்றாக்குறைக்கு இந்தியாவின் மத்திய வங்கி நிதியளிப்பது என்ற நடைமுறை 1990களில் மத்திய காலங்கள் வரையில் இருந்தது. ``நிதி ஒழுங்குமுறை கொண்டுவர, அரசிடம் இருந்து ரிசர்வ் வங்கியில் இருந்து நிறுவன அமைப்பைப் பிரித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற தாக்கங்களைக் கட்டுப்படுத்த'' அதில் இருந்து விலகி வந்துவிட்டோம் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

``அதிக பணப் புழக்கத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற பழங்காலத்திய அச்சம், வளர்ந்த நாடுகளுக்குப் பொருந்தாது என்பதை நான் அறிந்திருக்கிறேன்'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ``இந்தியாவைப் போன்ற நாடுகளுக்கு, மத்திய வங்கியின் நிறுவன தன்னாட்சி செலவுகளுக்கு அப்பாற்பட்டு, வரம்புகள் இல்லாமல் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது கரன்சியில், வர்த்தகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி பணவீக்கத்தை ஏற்படுத்தும்'' என்றும் டாக்டர் மன்மோகன் சிங் மதிப்பிடுகிறார்.

பற்றாக்குறையை சமாளிக்க நோட்டுகளை அச்சிடும் வாய்ப்பை மறுத்துவிட முடியாது என்று கூறம் அவர், ``மற்ற எல்லா வழிகளையும் முயற்சித்துப் பார்த்துவிட்டு, கடைசி வாய்ப்பாக இதை வைத்துக் கொள்ள வேண்டும்'' என்றும் கூறியுள்ளார்.

மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற பெயரில், வேறு சில நாடுகளை இந்தியா பின்பற்றிவிடக் கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார். அவ்வாறு செய்து இறக்குமதிகளுக்கு அதிக வரிகளை விதித்து வர்த்தகத் தடைகளை அதிகரித்துக் கொள்ளக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த மூன்று தசாப்த காலங்களில் இந்தியா மேற்கொண்ட வர்த்தகக் கொள்கை காரணமாக, ``பெருமளவில் பொருளாதார லாபங்கள் கிடைத்து உயர்ந்த நிலையை எட்டியதுடன், சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் அதன் மூலம் பயன் பெற்றிருக்கிறார்கள்'' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா, 1990களில் இருந்ததைவிட இப்போது மிகவும் பலமாக இருக்கிறது. நோய்த் தொற்று காலம் முடிந்த பிறகு இந்தியா துடிப்புடன் மீட்சி பெறுவதற்கு, இந்தப் பலம் உதவிகரமாக இருக்குமா என்று டாக்டர் மன்மோகனிடம் நான் கேட்டிருந்தேன்.

``1990களில் இருந்ததைவிட இந்தியாவின் ஜிடிபி இப்போது பத்து மடங்கு பலமாக உள்ளது. அப்போதிருந்து 300 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் வறுமை நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். எனவே, உள்ளார்ந்து பார்த்தால் இந்தியாவின் பொருளாதாரம் இப்போது பலமாக இருக்கிறது என்பது உண்மைதான்'' என்று அதற்கு மன்மோகன் பதில் அளித்துள்ளார்.

ஆனால் உலகின் மற்ற நாடுகளின் வர்த்தகம் தான் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. உலக பொருளாதார பங்களிப்பு காரணமாகத்தான் இந்தியாவின் ஜிடிபி இந்த காலக்கட்டத்தில் 5 மடங்கு அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

``உலகின் மற்ற நாடுகளுடன் இந்தியா ஒருங்கிணைந்து உள்ளது. எனவே, உலகப் பொருளாதாரத்தில் எது நடந்தாலும், அதன் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தின் மீதும் இருக்கும். இந்த நோய்த் தொற்று காலத்தில், உலகப் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அது இந்தியாவுக்கு அதிகம் கவலை தரக் கூடியதாக இருக்கும்'' என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் முழுமையான பொருளாதார தாக்கம் எப்படி இருக்கும் என்றோ, அதில் இருந்து மீள்வதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்றோ யாருக்கும் தெரியாது. ஆனால், ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அனுபவம் வாய்ந்த பொருளாதார நிபுணரான டாக்டர் மன்மோகன் போன்றவர்களின் எதிர்பார்ப்புகளையும் அது மிஞ்சிவிட்டது.

``முந்தைய நெருக்கடிகள் பெரிய காரணிகளின் அடிப்படையிலான நெருக்கடிகளாக இருந்தன. அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு, நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள் தெரிந்திருந்தன. இப்போது ஏற்பட்டிருப்பது நோய்த் தொற்று பரவலால் உருவான பொருளாதாரப் பிரச்சினை. இதனால் அச்சம் ஏற்பட்டு, சமூகத்தில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது. இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு நிதிக் கொள்கையை ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தினால் அது தோல்வியைத் தந்துவிடும்'' என்று டாக்டர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.