Latest News

புதிய கல்விக் கொள்கையில் இட ஒதுக்கீட்டுக்கான உறுதி எங்கும் இடம்பெறவில்லை: கி.வீரமணி விமர்சனம்

மத்திய அரசின் தேசிய புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தில் சமூக நீதியை வலியுறுத்தியோ - இட ஒதுக்கீட்டிற்கான உறுதி என்பதோ எங்கும் இடம்பெறவில்லை. சமூக நீதியாளர்கள் அனைவரும் ஒரே குரலில், ஒரே அணியில் நின்று அதனை ஏற்க மறுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தி.க. தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:

'மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பது மாநிலங்களின் கல்வி உரிமைகளை - அதிகாரங்களைப் பறிப்பது என்பது மட்டுமல்ல; பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்களைக் கொண்ட இந்திய நாடு - ஒரே கல்வித் திட்டத்தின்கீழ்தான் இயங்கவேண்டும் என்பதே ''திணிப்பு'' அல்லாமல் வேறு என்ன?

அவற்றைவிட மிக முக்கியமான உரிமைப் பறிப்பு என்னவென்றால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் தொடங்கி, அதன் பல சட்டப் பிரிவுகள் - பல திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டு, பல்வேறு உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளாலும் உறுதி செய்யப்பட்ட, நடைமுறையில் இட ஒதுக்கீட்டால் இன்று பெறப்படும் சமூக நீதி (Social Justice) என்னும் கருத்தோ, இட ஒதுக்கீட்டுக்கான உறுதியோ எங்கும் இடம்பெறவே இல்லை.

பள்ளிக் கல்வி தொடங்கி பல்கலைக்கழக கல்வித் திட்டங்கள்வரை, அதாவது இட ஒதுக்கீடு பற்றி எங்குமே குறிப்பிடப்படவில்லை. Introduction எனப்படும் முகப்பிலும், 6.1 எனும் பகுதியிலும் மட்டுமே சமூக நீதி என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் 6.1 Education is the single greatest tool for achieving social justice and equality என்று குறிப்பிட்டுவிட்டு, அதை அடைவதற்கு வழிமுறையான இட ஒதுக்கீட்டைப் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடாதது ஏன்?

சமூக நீதி - இட ஒதுக்கீட்டு உரிமைகள் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துவதற்காக காலங்காலமாக சமூகப் போராளிகளாக களங்களில் நின்று, நமது தலைவர்கள் வென்றெடுத்த உரிமைகளாகும். மனுதர்மம் இன்னமும் கோலோச்சும் 'இந்து லா' என்பதில் - சாதி வருணமுறை சமூக வாழ்வில் எங்கும் படமெடுத்தாடும் நிலையில், அதனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கல்வி மறுக்கப்பட்ட கோடானு கோடி மக்களுக்குக் கல்வி வாய்ப்புகள், இட ஒதுக்கீட்டின் மூலம் ஓரளவு இப்போது தான் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு கிட்டத் தொடங்கியிருக்கிறது.

ஒடுக்கப்பட்டவர்கள் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்களாக இருந்தும்கூட, உயர் சாதி சமூகத்தின் கல்வி ஏகபோகத்திற்கு முன் இன்னமும் விகிதாசாரப்படி, சமத்துவ நிலை அடையாத நிலையே இன்றும் உள்ளது.

இந்நிலையை மாற்றத்தான், சமூக நீதி என்னும் இட ஒதுக்கீடு - கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களான பட்டியலின, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்குத் தரப்படுகிறது. சமூக நீதி - இட ஒதுக்கீடு என்பது அவர்களைக் கைதூக்கி விடுவதற்கான உதவிக்குரிய ஒரு கருவியாகும்!

காலங்காலமாக கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், கல்விக்கான இடங்களுக்கு, வேலை வாய்ப்புகளுக்குப் போட்டியிடும் நிலையில், சம போட்டி என்பதற்கே இடமில்லாத நிலையே யதார்த்தம்.

சம பலம் உள்ளவர்களிடையே போட்டி ஏற்படுத்தினால்தான் அது சம வாய்ப்பு என்பது பொருள் உள்ளதாகும். கொழுத்தவனுக்கும், இளைத்தவனுக்கும் போட்டி என்றால், அது ஒருபோதும் சம போட்டியாகாது. இதையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்கூட தெளிவுபடுத்தியுள்ளன.

ஒரு வழக்கில், அன்றைய தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் கே.சுப்பாராவ் மிக அருமையான ஓர் உதாரணத்தின் மூலம் ''தகுதி திறமை'' - அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு நடத்தி எடுத்தல் வேண்டும்' என்பதில் உள்ள மோசடியை விளக்கினார்.

குதிரைப் பந்தயத்தில், ஓடுவதற்கு விடப்படும் குதிரைகள் எல்லாம் ரேஸ் குதிரைகளாகவே இருந்தால்தான் அது சமமான போட்டி. ரேஸ் குதிரையுடன் ஜட்கா வண்டி குதிரையைப் போட்டியிட வைத்தால், அது எப்படி சம போட்டியாக இருக்க முடியாதோ, அதேபோல, காலங்காலமாய் கல்வியில் பல தலைமுறைகள் முன்னேறிய சாதி மாணவர்களுடன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கல்வி மறுக்கப்பட்டதன் விளைவாக, இப்போதுதான் முதல், இரண்டாம் தலைமுறையாகப் பயிலும் மாணவர்கள், முன்னேறிய சாதி மாணவர்களுடன் எப்படி சமமாகப் போட்டியிட முடியும்? எனவேதான், இட ஒதுக்கீடு கல்வியில் மிகவும் தேவைப்பட்டது.

ஏற்கெனவே, 9 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் மண்டல் வழக்கான இந்திரா சகானி வழக்கு வரை பலவும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி உள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்றத்தில் இந்த சமூக நீதிக்காகவே பலமுறை திருத்தப்பட்டு, பல்கலைக் கழகங்களிலும், தொழிற்படிப்புகளான இன்ஜினீயரிங், மெடிக்கல், வேளாண்மை முதலிய பலவற்றிலும் இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடித்து வருவதால்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் (Depressed and the downtrodden) சந்ததியினர் இன்று கல்விக் கண்ணை ஓரளவு பெறுகிறார்கள்.

சமூகப் புரட்சியாளர்களின் முயற்சியால்தான். இதற்காகவே சமூகப் புரட்சியாளர்களான தலைவர்கள் பெரியார், அம்பேத்கர், சமூக நீதியாளர்களான காமராசர், வி.பி.சிங், திராவிட இயக்கத் தலைவர்கள் அண்ணா, கலைஞர், அதன்பின் ஆட்சித் தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரை பலரது முயற்சிகளும், சாதனைகளும்தான் இன்று ஏராளமான ஒடுக்கப்பட்டோர் கல்வி பெற வாய்ப்பு ஏற்படுத்தியது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சமூகநீதி - இட ஒதுக்கீடு பற்றி எங்கும் குறிப்பிடப்படவே இல்லை என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானதாகும்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி வாய்ப்புகளைப் பறிமுதல் செய்வதற்கான திட்டமிட்ட மோசடி அல்லவா இது?

65 பக்கங்கள் கொண்ட புதிய 'தேசியக் கல்விக் கொள்கை 2020' ஆங்கில விளக்கம் இணையத்தில் வெளிவந்துள்ளது. பாராக்கள் 6.22, 6.23, 6.24 ஆகியவற்றில் இந்த வகுப்புகள் (SC/ST, OBC) பற்றி ஓரிரு வரிகள் வந்துள்ளன. அந்த விளக்கத்தின்படி, இட ஒதுக்கீட்டுக்குப் பதில், அவர்கள் வெறும் பண உதவி ''ஸ்காலர்ஷிப்'' பற்றி - அதுவும் தகுதி (Merit) அடிப்படையில் தரப்படும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

கோத்தாரி கல்விக் கமிஷன் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கோத்தாரி கல்விக் கமிஷனில் இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் கல்வி இட ஒதுக்கீடு பற்றி மிகவும் தெளிவாக வற்புறுத்திய பகுதி இதோ:

'பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் தகுதிகள், சலுகைகள் மறுக்கப்பட்டுள்ள சமூகத்தினருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பது கல்வியின் பிரதான நோக்கங்களுள் ஒன்றாகும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதி வழங்குவதே கல்வியின் முக்கியமான நோக்கம். கல்வியை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை அவர்கள் உயர்த்திக் கொள்ள வழிவகுக்கப்படவேண்டும்.

சமூக நீதியின்பால் உண்மையான அக்கறை கொண்டவர்களும், ஏழை, எளிய மக்களின் வாழ்வு வளம் பெறவேண்டும் என்று நினைப்பவர்களும், 'எல்லோருக்கும் எல்லாமே கிடைக்கவேண்டும்' என்ற நோக்கத்துடன் செயல்படவேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் திறமையும், ஆற்றலும் கல்வியின் மூலம் வெளிப்படவும், முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைக்கவும் சமுதாயம் வழிவகுக்கவேண்டும். சமத்துவம் மனித சமுதாயத்தில் முழுமையாகத் தழைக்க இது ஒன்றே சிறந்த வழி'.

பல்வேறு சாதியினர் மற்றும் சமூகத்தினரிடையே நிலவும் கல்வி சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை கருத்தில் கொண்டு கோத்தாரி ஆணையம் பரிசீலித்தது. உண்மையான ஜனநாயகம் நீடித்திருக்க கோத்தாரி ஆணையம் கீழ்க்கண்ட ஆலோசனையை தெரிவித்திருந்தது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிள்ளைகளுடைய கல்வி வளர்ச்சிக்கு விசேஷ கவனம் செலுத்தப்படவேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடி மக்கள், சீர் மரபினர், நாடோடி இனத்தினர் மற்றும் ஏறத்தாழ நாடோடிகள் என்று கருதப்படக் கூடியவர்கள் அனைவரும் அடங்குவார்கள் என்பது இந்த ஆணையத்தின் ஆணித்தரமான கருத்து.

கல்வி சார்ந்த அனைத்துத் தீர்மானங்களின்போதும், மேற்கண்ட வகுப்பினர் எல்லோருமே பிற்படுத்தபட்டவர்களாகவே கருதப்படவேண்டும் என்பதே இந்த ஆணையத்தின் நிலைப்பாடு.

இதுபோல் எதுவும் மத்திய பாஜக, ஆர்எஸ்எஸ் அரசின் கல்விக் கொள்கையில் இல்லை என்பதே இது ஒடுக்கப்பட்டோரின் சமூக நீதி உரிமை பறிக்கும் கல்வித் திட்டம் என்பது புரியவில்லையா?

சமூக நீதியாளர்கள் அனைவரும் ஒரே குரலில், ஒரே அணியில் நின்று. இதுபற்றி திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு பெரும் முயற்சியை எடுத்து, இந்தக் கல்வித் திட்டத்தினால் விளையக்கூடிய ஆபத்துகளைத் தடுத்து நிறுத்திட எடுத்திருக்கும் முயற்சிகள் வரவேற்கத்தகுந்தது.

எனவே, மக்கள் - குறிப்பாக ஒடுக்கப்பட்டோர், கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டோர் எப்படி இந்தக் கல்வித் திட்டத்தினை ஏற்க முடியும்? எனவே, சமூக நீதியாளர்கள், முற்போக்குக் கல்வியாளர்கள், எதிர்க்கும் கட்சிகள், இயக்கங்கள், சமூக அமைப்புகள் அனைவரும் ஒரே குரலில், ஒரே அணியில் நின்று இந்த தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதுதானே சமூக நீதி அடிப்படையில் தேவையான ஒன்று'.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.