Latest News

கிரைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு: குற்றவாளிக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை

நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் கடந்த ஆண்டு இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி 51 பேரை கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவர் பரோலில் கூட வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் சாகும் வரை சிறையிலேயே தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து நாட்டின் வரலாற்றில் இவ்வாறு தண்டனை விதிக்கப்படும் முதல் நபர் இவர்.

29 வயதான ஆஸ்திரேலியாவை சேர்ந்த குற்றவாளி ப்ரென்டன் டர்ரன்ட், 51 பேரை சுட்டுக் கொலை செய்ததையும், 40 பேரை கொலை செய்ய முயற்சித்ததாகவும், தன் மீது இருந்த தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வதாகவும் நீதிமன்றத்தில் கூறினார்.

டர்ரன்டின் நடவடிக்கைகளை "மனித நேயமற்ற செயல்" என விவரித்த நீதிபதி "அவர் யார் மீதும் கருணை காட்டவில்லை" என குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி நடந்த தாக்குதலை அவர் நேரலை செய்ததையடுத்து, அந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நியூஸிலாந்து வரலாற்றில் தீவிரவாத செயல் தொடர்பான வழக்கில் வழங்கப்படும் முதலாவது தண்டனையும் இதுதான்.

"நீங்கள் செய்த குற்றங்கள் கொடுமையானவை. சாகும் வரை உங்களை சிறையில் வைத்தாலும், நீங்கள் செய்த குற்றத்துக்கு அந்த தண்டனை போதாது" என கிரைஸ்ட்சர்ச் நீதிமன்ற நீதிபதி கேமரன் மேண்டர் வியாழக்கிழமை அன்று வெளியிட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

பரோல் இல்லாமல் வாழ்நாள் சிறை தண்டனை குறித்து குறிப்பிட்ட அவர், "இங்கு இல்லை என்றால், வேறு எங்கு?" என தெரிவித்துள்ளார்.

பரோல் இல்லாமல் வாழ்நாள் சிறை தண்டனை என்றால், தண்டனை வழங்கப்பட்ட நபர், ஒரு குறிப்பிட்ட காலம் சிறையில் இருந்த பிறகு அவருக்கு வெளியே வர அனுமதி வழங்கப்படாது.

இதுபோன்ற தண்டனைகள், "மிகவும் மோசமான கொலையாளிகளுக்கே வழங்கப்படும்" என நீதிபதி மேண்டர் தெரிவித்தார்.

நியூஸிலாந்தின் சட்ட அமைப்பில் மரண தண்டனை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

டர்ரன்டுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து அறிந்த நியூஸிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டென் கூறுகையில், "குற்றவாளியை பற்றி இனி சிந்திக்கவோ, அவர் கூறுவதை கேட்கவோ நமக்கு இனி எதுவும் இல்லை என்பதே இத்தீர்ப்பின் அர்த்தம்" என தெரிவித்தார்.

மேலும், "தீவிரவாதி என்று குறிப்பிடப்படும் நபர் குறித்து கேட்பதோ பேசுவதோ இதுவே கடைசி நாளாக இருக்கும் என நம்புகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

நியூஸிலாந்தில் துப்பாக்கி பயன்படுத்துதல் தொடர்பான சட்டங்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான விதிகள் கடுமையாக்கப்பட, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் காரணமாக அமைந்தது.

நீதிபதி கூறியது என்ன?

தண்டனை வழங்குவதற்காக நான்கு நாட்கள் நடைபெற்ற விசாரணையின் இறுதி நாளில், குற்றவாளி டர்ரன்ட் கொலை செய்த மற்றும் அவரால் காயமடைந்த நபர்கள் பற்றி சுமார் ஒரு மணி நேரம் நினைவு கூர்ந்தார் நீதிபதி மேண்டர்.

"துப்பாக்கிதாரி செய்த குற்றத்தையும் தாண்டி, அவர் அதற்காக வருத்தப்படவோ, வெட்கப்படவோ இல்லை" என நீதிபதி குறிப்பிட்டார்.

நீதிபதி மேண்டர்

பரோல் இல்லாத வாழ்நாள் சிறை தண்டனையை தாம் எதிர்க்கவில்லை என குற்றவாளி டர்ரன்ட், அவரது வழக்கறிஞர்கள் மூலமாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். தண்டனைக்கு அவர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

தண்டனை தொடர்பான விசாரணை நடைபெற்ற கடந்த மூன்று நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

பாதிக்கப்பட்ட சுமார் 90 பேர் நீதிமன்றத்தில் தங்கள் துக்கத்தை பகிர்ந்தபோதும் டர்ரன்ட் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை.

சம்பவத்தில் உயிர்தப்பியவர்கள், உறவினர்கள் என்ன கூறினர்?

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தனது மாமாவை இழந்த அஹ்மத் வாலி கான் பிபிசியிடம் கூறுகையில், கிரைஸ்ட்சர்ச்சின் மொத்த முஸ்லிம் சமூகமும் இந்த தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்தார்.

"நீதி கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முடிவுக்காக நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம்" என்றும் அவர் கூறினார்.

ஆப்கான் நாட்டை சேர்ந்த குடியேறியான தாஜ் கம்ரான், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர்.

கிரைஸ்ட்சர்ச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள்

அவரது கால்கள் பல முறை துப்பாக்கியால் சுடப்பட்டதால், தற்போது உதவி இல்லாமல் அவரால் நடக்க முடியாது.

"இழந்ததை திரும்பிப் பெற முடியாது என்றாலும் இனி நிம்மதியாக உறங்குவேன். நாம் இழந்தவர்களை யாராலும் திரும்பிக் கொண்டு வர முடியாது. அந்த வருத்தம் வாழ்நாள் முழுக்க இருக்கும்" என ஏஎஃப்பி செய்தி முகமையிடம் அவர் தெரிவித்தார்.

கிரைஸ்ட்சர்ச்சில் என்ன நடந்தது?

கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி அங்குள்ள இரு மசூதிகளில் துப்பாக்கிதாரி ஒருவர், பலரையும் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டார்

முதலில் அல் நூர் மசூதியில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி சுட, 30 விநாடிகள் கழித்து தனது காருக்கு சென்று மீண்டும் ஒரு ஆயுதத்தை எடுத்து வந்து மீண்டும் மசூதிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை சுட ஆரம்பித்தார்.

தனது நெற்றியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் அவர் அந்த சம்பவத்தை ஃபேஸ்புக்கில் நேரலை செய்தார்.

பின்னர் லின்வுட் இஸ்லாமிய மையத்திற்கு காரில் சென்ற அவர், அங்கு வெளியே இருந்த இரு நபர்களை சுட்டதோடு, அதன் ஜன்னல்களிலும் சுட்டார்.

உள்ளிருந்த வந்த நபர் ஒருவர் வெளியே ஓடிவந்து துப்பாக்கிதாரியின் துப்பாக்கி ஒன்றை எடுத்து, அவரை துரத்தினார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இரு போலீஸ் அதிகாரிகள், துப்பாக்கிதாரியை துரத்திப் பிடித்தனர்.

கைதுக்கு பிறகு போலீஸாரிடம் கூறிய துப்பாக்கிதார், மசூதிகளை எரிப்பதே தனது நோக்கம் என்றும், அதை நிறைவேற்றி இருக்கலாம் என தாம் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

குற்றவாளி டர்ரன்ட் குறித்து என்ன தெரியும்?

29 வயதுடைய வெள்ளையின மேலாதிக்கவாதியான டரண்ட், "தீவிரவாத, வலதுசாரி பயங்கரவாதி" என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மொரிசன் விவரிக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் நியூ செளத் வேல்ஸில் பிறந்த டர்ரன்டின் தந்தை குப்பைகளை அகற்றுபவராகவும், தாய் ஆசிரியராகவும் இருந்தார்.

2010ல் தனது தந்தை உயிரிழக்க, டர்ரன்ட், தனது வேலையில் இருந்து விலகி, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

2017ஆம் ஆண்டு நியூஸிலாந்து சென்ற அவர், அங்கு முஸ்லிம் சமுதாயத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக காவல்துறையினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

source: bbc.com/tamil

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.