
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்டது போன்ற மோசமான காட்டு தீ மீண்டும் அடுத்த ஆண்டு ஏற்பட வாய்ப்புள்ளது என சமீபத்திய விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய காட்டு தீயால் 33 பேர் உயிரிழந்தனர். அதில், மிகப் பெரிய நிலப்பரப்பு தீயில் கருகின.
நியூ செளத் வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் காட்டுத் தீயால் 2,476 வீடுகள் எரிந்து சாம்பலாகின, 5.5 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது என நியூ செளத் வேல்ஸின் காட்டுத்தீ குறித்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடுமையாக வறண்ட நிலம், வெப்பம் மற்றும் வேகமான அனல் காற்று, பருவநிலை மாற்றம் ஆகியவை காட்டுத் தீக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
அடுத்த காட்டு தீக்கான பருவம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என நியூ செளத் வேல்ஸின் மாகாண முதல்வர் கிளாடிஸ் பெரஜிக்லியான் கூறியுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கோடை கால காட்டு தீ தீவிரமடைய தொடங்கிய வேளையில், நியூ செளத் வேல்ஸில் குளிர்கால காட்டூத்தீ இந்த மாதம் காணப்பட்டாலும் அது இதுவரை குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக மாறவில்லை.
ஆய்வறிக்கை என்ன சொல்கிறது?
இந்த நிலையில், காட்டு தீ பரவ கூடிய அபாயகரமான இடத்தில் இருப்பவர்கள் உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வான் வழியாக தீயை அணைக்கும் நடைமுறைகளை இன்னும் விரைவாக செய்லபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தீயை அணைக்க பூர்வகுடியினர் பயன்படுத்திய எளிமையான செயல்திட்டங்கள் மூலம் காட்டுத் தீயை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.
மேலும் புகைமூட்டம் அபாய கட்டத்தை அடையும்போது அந்த குறிப்பிட்ட பகுதியில் எச்சரிக்கை ஒலி கேட்கும் வகையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
காட்டுத்தீயை ஏற்படுத்தும் இடி, மின்னலும் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. வழக்கமான காட்டு தீயை விட இடி தாக்கி ஏற்படும் காட்டு தீ மிகவும் அபாயகரமானது என கூறப்படுகிறது.
எனவே இந்த முறை, மனிதர்களின் தூண்டுதலால் ஏற்படும் காட்டு தீயை விட இடி தாக்கி ஏற்படும் பாதிப்புகள் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் காட்டு தீ கடுமையாக இருக்கும் என்று நியூ செளத் வேல்ஸ் விசாரணை அறிக்கை குறிப்பிடுகிறது.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment